பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
லேவியராகமம் 14:2குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.
லேவியராகமம் 14:3ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய்; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால்,
லேவியராகமம் 14:4சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக்கடவன்.
லேவியராகமம் 14:5பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் கொல்லச் சொல்லி,
லேவியராகமம் 14:6உயிருள்ள குருவியையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து,
லேவியராகமம் 14:7குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.
லேவியராகமம் 14:8சுத்திகரிக்கப்படுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் மயிர் முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாகும்படி ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்தில் பிரவேசித்து, தன் கூடாரத்துக்குப் புறம்பே ஏழுநாள் தங்கி,
லேவியராகமம் 14:9ஏழாம் நாளிலே தன் தலையையும் தாடியையும் புருவங்களையும் தன்னுடைய மயிர் முழுவதையும் சிரைத்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.
லேவியராகமம் 14:10எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு வயதான பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், போஜனபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.
லேவியராகமம் 14:11சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அவ்வஸ்துக்களையும் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
லேவியராகமம் 14:12பின்பு ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,
லேவியராகமம் 14:13பாவநிவாரணபலியும் சர்வாங்க தகனபலியும் இடும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.
லேவியராகமம் 14:14அந்தக் குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலது கையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசக்கடவன்.
லேவியராகமம் 14:15பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடது கையில் வார்த்து,
லேவியராகமம் 14:16தன் இடது கையிலுள்ள எண்ணெயில் தன் வலது கையின் விரலைத் தோய்த்து, தன் விரலினால் ஏழுதரம் அந்த எண்ணெயில் எடுத்து, கர்த்தருடைய சந்நிதியில் தெளித்து,
லேவியராகமம் 14:17தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், முந்தப் பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,
லேவியராகமம் 14:18தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
லேவியராகமம் 14:19ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்க தகனபலியைக்கொன்று,
லேவியராகமம் 14:20சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான்.
லேவியராகமம் 14:21அவன் இம்மாத்திரம் செய்யத் திராணியற்ற தரித்திரனாயிருந்தால், அவன் தன் பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியையும், போஜனபலிக்கு எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்,
லேவியராகமம் 14:22தன் திராணிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி,
லேவியராகமம் 14:23தான் சுத்திகரிக்கும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆசாரியனிடத்துக்குக் கொண்டுவருவானாக.
லேவியராகமம் 14:24அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் போஜனபலியாக அசைவாட்டி,
லேவியராகமம் 14:25குற்றநிவாரணபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,
லேவியராகமம் 14:26அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,
லேவியராகமம் 14:27தன் இடது கையிலுள்ள எண்ணெயிலே தன் வலது விரலைத் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளித்து,
லேவியராகமம் 14:28தன் உள்ளங்கையிலிருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலது கையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்திலே பூசி,
லேவியராகமம் 14:29தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,
லேவியராகமம் 14:30பின்பு, அவன் தன் திராணிக்கும் தகுதிக்கும் தக்கதாய்க் காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,
லேவியராகமம் 14:31அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, போஜனபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
லேவியராகமம் 14:32தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கக் கூடாத குஷ்டரோகியைக் குறித்த பிரமாணம் இதுவே என்றார்.