இஸ்ரவேல் வீட்டாரே கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்:
எரேமியா 10:2புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.
எரேமியா 10:3ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.
எரேமியா 10:4வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.
எரேமியா 10:5அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 10:6கர்த்தாவே உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.
எரேமியா 10:7ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டிது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.
எரேமியா 10:8அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.
எரேமியா 10:9தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருத்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டானின் கைகளினாலும் செய்யப்பகிடுறது; இளநீலமும், இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.
எரேமியா 10:10கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.
எரேமியா 10:11வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
எரேமியா 10:12அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.
எரேமியா 10:13அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.
எரேமியா 10:14மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.
எரேமியா 10:15அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.
எரேமியா 10:16யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.