ஏசாயா 41

fullscreen1 தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம்.

fullscreen2 கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வரவழைத்தவர் யார்? ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி,

fullscreen3 அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்?

fullscreen4 அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்ட தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.

fullscreen5 தீவுகள் அதைக் கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து,

fullscreen6 ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்.

fullscreen7 சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான்.

fullscreen8 என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதன் ஆபிரகாமின் சந்ததியே,

fullscreen9 நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து, நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.

fullscreen10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

fullscreen11 இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.

fullscreen12 உன்னோடே போராடினவர்களைத்தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.

fullscreen13 உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

fullscreen14 யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

fullscreen15 இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

fullscreen16 அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பாய்.

fullscreen17 சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

fullscreen18 உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்கி

fullscreen19 வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்திம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.

fullscreen20 கர்த்தருடைய கரம் அதைச்செய்தது என்றும் இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்.

fullscreen21 உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார்.

fullscreen22 அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவன் இன்னவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும்.

fullscreen23 பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; அல்லது நன்மையாவது தீமைίாவது செய்யுங்கள்; அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாய்க் கூடி அதைப்பார்ப்போம்.

fullscreen24 இதோ, நீங்கள் சூனியத்திலும் சூனியமாயிருக்கிறீர்கள்; உங்கள் செயல் வெறுமையிலும் வெறுமையானது; உங்களைத் தெரிந்துகொள்ளுகிறவன் அருவருப்பானவன்.

fullscreen25 நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவேன், அவன் வருவான்; சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்.

fullscreen26 நாம் அதை அறியும்படியாக ஆதியில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே.

fullscreen27 முதல் முதல், நானே, சீயோனை நோக்கி: இதோ, அவைகளைப் பாரென்று சொல்லி எருசலேமுக்கு சுவிசேஷகரைக் கொடுக்கிறேன்.

fullscreen28 நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்குங் காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை.

fullscreen29 இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.