சகரியா 13

fullscreen1 அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.

fullscreen2 அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்திலிராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும் அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

fullscreen3 இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவனை நோக்கி: நீ கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறபடியால் நீ உயிரோடிருக்கப்படாது என்று சொல்லி, அவனைப் பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள்.

fullscreen4 அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய்சொல்லும்படிக்கு இனி மயிர்ப்போர்வையைப் போத்துக்கொள்ளாமல்,

fullscreen5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.

fullscreen6 அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதில் உண்டானவைகள் என்பான்.

fullscreen7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.

fullscreen8 தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.

fullscreen9 அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.