1 ⁽வெள்ளிக்கு விளைநிலம் உண்டு;␢ பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.⁾

2 ⁽மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது;␢ கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.⁾

3 ⁽மனிதர் இருளுக்கு இறுதி கண்டு,␢ எட்டின மட்டும் தோண்டி,␢ இருட்டிலும் சாவின் இருளிலும்␢ கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.⁾

4 ⁽மக்கள் குடியிருப்புக்குத் தொலையில்␢ சுரங்கத்தைத் தோண்டுவர்;␢ வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்;␢ மனிதரிடமிருந்து கீழே இறங்கி␢ ஊசலாடி வேலை செய்வர்.⁾

5 ⁽மேலே நிலத்தில் உணவு விளைகின்றது;␢ கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.⁾

6 ⁽நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்;␢ பொன்துகளும் அதில் கிடைக்கும்.⁾

7 ⁽அதற்குச் செல்லும் பாதையை,␢ ஊன் உண்ணும் பறவையும் அறியாது;␢ கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.⁾

8 ⁽வீறுகொண்ட விலங்குகள்␢ அதன் மேல் சென்றதில்லை;␢ சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.⁾

9 ⁽கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்;␢ மலைகளின் அடித்தளத்தையே␢ பெயர்த்துப் புரட்டிடுவர்.⁾

10 ⁽பாறைகள் நடுவே␢ சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்;␢ விலையுயர் பொருளையே␢ அவர்களது கண் தேடும்.⁾

11 ⁽ஒழுகும் ஊற்றுகளைத்␢ தடுத்து நிறுத்துகின்றனர்;␢ மறைவாய் இருப்பதை␢ ஒளிக்குக் கொணர்கின்றனர்.⁾

12 ⁽ஆனால், ஞானம்␢ எங்கே கண்டெடுக்கப்படும்?␢ அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?⁾

13 ⁽மனிதர் அதன் மதிப்பை உணரார்;␢ வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.⁾

14 ⁽‘என்னுள் இல்லை’ என உரைக்கும் ஆழ்கடல்;␢ ‘என்னிடம் இல்லை’ என இயம்பும் பெருங்கடல்.⁾

15 ⁽தங்கத்தைக் கொடுத்து␢ அதைப் பெறமுடியாது; வெள்ளியால்␢ அதன் விலையை நிறுக்க இயலாது.⁾

16 ⁽ஓபீர்த் தங்கமும் கோமேதகமும்␢ அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!⁾

17 ⁽பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா;␢ பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.⁾

18 ⁽மணியும் பவளமும் அதற்கு இணையில்லை;␢ மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.⁾

19 ⁽எத்தியோப்பிய புட்பராகம்␢ அதற்கு இணையல்ல;␢ பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.⁾

20 ⁽அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்?␢ எங்குள்ளது அறிவின் உறைவிடம்?⁾

21 ⁽வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும்␢ ஒளிந்துள்ளது;␢ வானத்துப் பறவைகளுக்கும்␢ மறைவாய் உள்ளது.⁾

22 ⁽படுகுழியும் சாவும் பகர்கின்றன;␢ அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது;⁾

23 ⁽அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்;␢ அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!⁾

24 ⁽ஏனெனில், வையகத்தின் எல்லை வரை␢ அவர் காண்கின்றார்;␢ வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.⁾

25 ⁽காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது,␢ நீரினை அளவையால் அளந்தபோது,⁾

26 ⁽மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது,␢ இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,⁾

27 ⁽அவர் ஞானத்தைக் கண்டார்;␢ அதைப்பற்றி அறிவித்தார்;␢ அதை நிலைநாட்டினார்;␢ இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.⁾

28 ⁽அவர் மானிடர்க்குக் கூறினார்;␢ ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்;␢ தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.⁾

யோபு 28 ERV IRV TRV