1 அப்னேர் எபிரோனில் இறந்ததைக் கேட்டதும், சவுலின் மகன் இஸ்பொசேத்து நிலைகுலைந்தான். அனைத்து இஸ்ரயேலும் கலங்கியது.

2 சவுலின் மகனிடம் இரண்டு படைத்தலைவர்கள் இருந்தனர். ஒருவன் பெயர் பானா; மற்றவன் பெயர் இரேக்காபு; பென்யமின் குலத்தைச் சார்ந்த பெயரோத்தில் வாழும் ரிம்மோன் என்பவனின் புதல்வர்கள் இவர்கள். பெயரோத்தும் பென்மியனியரைச் சார்ந்ததாகவே கருதப்பட்டது.

3 பெயரோத்தியர் கித்தாயிமுக்குத் தப்பியோடி, இந்நாள்வரை அங்கே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.⒫

4 சவுலின் மகன் யோனத்தானுக்கு மெபிபொசேத்து என்ற மகன் ஒருவன் இருந்தான். இஸ்ரயேலிலிருந்து சவுல், யோனத்தான் ஆகியோரைப் பற்றிய செய்தி வந்தபோது அவனுக்கு வயது ஐந்து. அவனுடைய செவிலித் தாய் அவனைத் தூக்கிக்கொண்டு தப்பி ஓடுகையில் விரைந்து சென்றதால், அவன் கீழே விழுந்து கால் முடமானான்.⒫

5 பெயரோத்தைச் சார்ந்த ரிம்மோனின் புதல்வர்களான இரேக்காபும் பானாவும் உச்சிவேளையில் இஸ்பொசேத்தின் வீட்டுக்கு வந்தார்கள். நண்பகல் வேளையில் அவன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான்.

6 கோதுமை கொண்டு செல்பவர்களைப்போல் நடுவீட்டிற்கு வந்து, அவனது வயிற்றில் ஊடுருவக் குத்திவிட்டு, இரேக்காபும் அவனுடைய சகோதரன் பானாவும் தப்பிவிட்டார்கள்.

7 இவ்வாறு, அவர்கள் வீட்டினுள் நுழைந்து, தன் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்தபோது அவனை ஊடுருவக் குத்திக் கொன்று தலையை வெட்டினார்கள். அத்தலையை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் அராபா வழியாகப் பயணம் செய்தார்கள்.

8 இஸ்பொசேத்தின் தலையை எபிரோனில் இருந்த தாவீதிடம் கொண்டு வந்தார்கள். “உமது உயிரைப் பறிக்கத் தேடிய உம் எதிரி சவுலின் மகன் இஸ்பொசேத்தின் தலை இதோ! ஆண்டவர் எம் தலைவராம் அரசர் சார்பாக சவுலையும் அவனுடைய வாரிசையும் பழிவாங்கிவிட்டார்” என்று அவர்கள் கூறினார்கள்.⒫

9 பெயரோத்தைச் சார்ந்த ரிம்மோனின் புதல்வர்களான இரேக்காபையும் அவனுடைய சகோதரன் பானாவையும் நோக்கி தாவீது இவ்வாறு கூறினார்: “அனைத்து துயரங்களினின்றும் என்னை விடுவித்த வாழும் ஆண்டவர் பெயரால் ஆணையிட்டுச் சொல்கிறேன்.

10 ‘இதோ சவுல் இறந்து விட்டான்’ என்று எனக்குச் சொல்ல வந்தவன், தான் நற்செய்தி கொண்டு வந்ததாகவே நினைத்தான், நானோ அவனைப் பிடித்துச் சிக்லாகில் கொன்றேன். அவனுக்கு நான் வெகுமதியாகக் தந்தது அதுவே.

11 இப்பொழுது குற்றமற்றவனைத் தீயவர்கள் அவன் வீட்டிலே, அவனது படுக்கையிலேயே கொன்றுவிட்டார்கள். அவனது இரத்தத்தைச் சிந்திய பழிக்கு ஈடாக உங்களை நான் உலகினின்றே அழித்துவிட மாட்டேனா?”

12 தாவீது ஆணையிட, அவர்தம் பணியாளர் அவர்களைக் கொன்றனர்; கைகளையும் கால்களையும் வெட்டியபின் அவர்களை எபிரோன் குளத்தருகே தொங்கவிட்டனர்; இஸ்பொசேத்தின் தலையை எடுத்து எபிரோனில் அப்னேரின் கல்லறைக்கு அருகே புதைத்தனர்.

2 சாமுவேல் 4 ERV IRV TRV