1 எலியா செய்த அனைத்தையும் பொய்வாக்கினர் அனைவரையும் அவர் வாளினால் கொன்றதையும் ஆகாபு ஈசபேலுக்குத் தெரிவித்தான்.

2 எனவே, ஈசபேல் எலியாவிடம் தூது அனுப்பி, “நீ அவர்களது உயிரைப் பறித்தது போல், நானும் நாளை இந்நேரத்திற்குள் உன் உயிரைப் பறிக்காவிடில், தெய்வங்கள் எனக்குத் தண்டனை கொடுக்கட்டும்” என்று சொல்லச் சொன்னாள்.

3 ஆகவே, அவர் அச்சமுற்று, தம் உயிரைக் காத்துக் கொள்ளுமாறு தப்பி ஓடினார். யூதாவிலிருந்து பெயேர்செபாவை அடைந்ததும் அங்கே தம் பணியாளனை விட்டு விட்டு,

4 அவர் பாலை நிலத்தில் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டுமெனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக் கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.”

5 பின்னர், அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார். அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றார்.

6 அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக் கொண்டார்.

7 ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு; ஏனெனில், நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்றார்.

8 அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.⒫

9 அவர் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவரது வாக்கு அவருக்கு வந்தது. அவர் “எலியா! நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று வினவினார்.

10 அதற்கு அவர், “படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால், இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர். உம் பலிபீடங்களைத் தகர்த்து விட்டனர். உம் இறைவாக்கினரை வாளால் கொன்றுவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்” என்றார்.

11 அப்போது ஆண்டவர், “வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன்” என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால், ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை.

12 நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது.

13 அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது.

14 அதற்கு அவர், “படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால், இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறி விட்டனர்; உம் பலிபீடங்களைத் தகர்த்து விட்டனர். உம் இறைவாக்கினரை வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்” என்றார்.

15 அப்போது ஆண்டவர் அவரிடம், “நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் நோக்கிச் செல். அவ்விடத்தை அடைந்தவுடன் அசாவேலைச் சிரியாவுக்கு மன்னனாகத் திருப்பொழிவு செய்.⒫

16 நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாக திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்.

17 அசாவேலின் வாளுக்குத் தப்பினவனை ஏகூ கொல்லட்டும், ஏகூவின் வாளுக்குத் தப்பினவனை எலிசா கொல்லட்டும்.

18 ஆயினும், பாகாலுக்கு மண்டியிடாமலும் அவனை முத்தி செய்யாதவர்களுமான ஏழாயிரம் பேரை மட்டும் நான் இஸ்ரயேலில் விட்டுவைப்பேன்” என்றார்.

19 எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார்.

20 எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன்” என்றார். அதற்கு அவர், “சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!” என்றார்.

21 எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

1 இராஜாக்கள் 19 ERV IRV TRV