ரூத் 2 IRV ஒப்பிடு Tamil Indian Revised Version
1 நகோமிக்கு அவளுடைய கணவனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பெயருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.
2 மோவாபிய பெண்ணாகிய ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமோ, அவர் பின்னே போய் கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.
3 அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பின்னே பொறுக்கினாள்; தற்செயலாக அவள் சென்ற அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாக இருந்தது.
4 அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடு இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
5 பின்பு போவாஸ் அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
6 அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் மறுமொழியாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடு வந்த மோவாபியப் பெண்பிள்ளை.
7 அறுக்கிறவர்களின் பின்னே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடம் கேட்டுக்கொண்டாள்; காலை துவங்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரம்தான் ஆனது என்றான்.
8 அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறு வயலுக்கு போகாமலும், இந்த இடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடு இரு.
9 அவர்கள் அறுப்பு அறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பின்னே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களிடத்திற்குப் போய், வேலைக்காரர்கள் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.
10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நிய தேசத்தைச் சேர்ந்தவளாக இருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயவு கிடைத்தது என்றாள்.
11 அதற்கு போவாஸ் மறுமொழியாக: உன் கணவன் மரணமடைந்தபின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், நீ பிறந்த தேசத்தையும் விட்டு, இதற்கு முன்னே நீ அறியாத மக்களிடம் வந்ததும் எல்லாம் எனக்கு விபரமாகத் தெரிவிக்கப்பட்டது.
12 உன் செயல்களுக்குத் தகுந்த பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய சிறகுகளின்கீழ் அடைக்கலமாக வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
13 அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமமாக இல்லாவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளாகிய என்னோடு தயவாகப் பேசினீரே என்றாள்.
14 பின்பு போவாஸ் சாப்பாட்டு நேரத்தில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்தைப் சாப்பிட, புளிப்பான திராட்சை ரசத்திலே உன் அப்பத் துண்டுகளைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பு அறுக்கிறவர்களின் அருகில் உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீதியானதை வைத்துக்கொண்டாள்.
15 அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஒன்றும் சொல்லவேண்டாம்.
16 அவள் பொறுக்கிக்கொள்ளும்படி அவளுக்காக அரிகளிலே சிலவற்றைச் சிந்திவிடுங்கள், அவளை அதட்டாமல் இருங்கள் என்று கட்டளையிட்டான்.
17 அப்படியே அவள் மாலைநேரம்வரைக்கும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துமுடிக்கும்போது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமையாக இருந்தது.
18 அவள் அதை எடுத்துக்கொண்டு ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமியார் பார்த்தாள்; தான் திருப்தியாகச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்.
19 அப்பொழுது அவளுடைய மாமியார்: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எந்த இடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடம் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமியாருக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரனுடைய பெயர் போவாஸ் என்றாள்.
20 அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனிதன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற பங்காளிகளில் ஒருவனுமாக இருக்கிறான் என்றாள்.
21 பின்னும் மோவாபிய பெண்ணாகிய ரூத்: அவர் என்னை நோக்கி, என்னுடைய அறுவடை எல்லாம் முடியும்வரைக்கும், நீ என் வேலைக்காரிகளோடு இரு என்று சொன்னார் என்றாள்.
22 அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனிதர்கள் உன்னை எதிர்க்காதபடி நீ அவனுடைய வேலைக்காரிகளோடு போகிறது நல்லது என்றாள்.
23 அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் முடியும்வரைக்கும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடு இருந்து, தன் மாமியாரோடு வாழ்ந்தாள்.