1 பிறகு நான் பார்த்தபோது என் முன்னால் ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன். அவர் சீயோன் மலைமீது நின்றுகொண்டிருந்தார். அவரோடு ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் இருந்தனர். அவர்களது நெற்றியில் ஆட்டுக்குட்டியானவரின் பெயரும் அவரது பிதாவின் பெயரும் எழுதப்பட்டு இருந்தது.

2 பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியின் பெரு முழக்கத்தைப்போலவும் ஒரு சத்தம் பரலோகத்தில் ஏற்பட்டதைக் கேட்டேன். அச்சத்தம் சுரமண்டலக்காரர்களால் தம் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது.

3 மக்கள் ஒரு புதிய பாடலைச் சிம்மாசனத்துக்கு முன்பாகவும் நான்கு உயிருள்ள ஜீவன்களின் முன்பாகவும் மூப்பர்களின் முன்பாகவும் பாடினர். அப்புதிய பாடலை ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டுமே கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களே பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். வேறு எவராலும் அப்பாடலைக் கற்றுக்கொள்ளமுடிய வில்லை.

4 அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்களும் பெண்களால் தம்மை மாசுபடுத்திக்கொள்ளாதவர்கள். அவர்கள் தம்மைச் சுத்தமாய் வைத்திருந்தனர். ஆட்டுக்குட்டியானவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவர்கள் பின்தொடர்ந்து செல்கிறவர்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டும் பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டியானவருக்கும் தேவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட முதல் மனிதர்கள்.

5 இவர்கள் பொய் சொல்லும் குற்றத்துக்கு ஆளாகாதவர்கள். இவர்கள் குற்றம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

6 பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான்.

7 அவன் உரத்த குரலில், “தேவனுக்கு பயப்படுங்கள். அவருக்கு புகழ் செலுத்துங்கள். அவர் எல்லா மக்களுக்கும் நீயாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்திருக்கிறது. தேவனை வழிபடுங்கள். அவர் பரலோகத்தைப் படைத்தார். பூமியையும், கடலையும் நீரூற்றுக்களையும் படைத்தார்” என்றான்.

8 பிறகு இரண்டாம் தேவதூதன் முதல் தூதனைப் பின்தொடர்ந்து வந்தான். அவன், “அவள் அழிக்கப்பட்டாள். பாபிலோன் என்னும் மாநகரம் அழிக்கப்பட்டது. அவள் தன் வேசித்தனமானதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லா தேசங்களுக்கும் குடிக்கக் கொடுத்தாள்” என்றான்.

9 மூன்றாவது தேவதூதன் மற்ற இரு தூதர்களையும் பின் தொடர்ந்து வந்தான். அவன் உரத்த குரலில், “எவனொருவன் மிருகத்தையும், மிருகத்தின் உருவத்தையும் வழிபடுகிறானோ, எவனொருவன் மிருகத்தின் அடையாளத்தைத் தன் முன்நெற்றியிலோ, கையிலோ பதித்துக்கொள்கிறானோ அவனுக்குக் கேடு உருவாகும்.

10 அவன் தேவனுடைய கோபமாகிய மதுவைக் குடிப்பான். அவன் ஆட்டுக்குட்டியானவருக்கும், பரிசுத்த தேவதூதர்களுக்கும் முன்பாக அக்கினியாலும் கந்தகத்தாலும் துன்புறுத்தப்படுவான்.

11 அவர்களது வாதையின் புகை சதா காலங்களிலும் எழும்பிக்கொண்டிருக்கும். மிருகத்தையும் அதன் உருவத்தையும் வழிபடுகிறவர்களுக்கும் அதன் பெயரின் அடையாளக் குறியை உடைய மக்களுக்கும் இரவும் பகலும் எக்காலமும் ஓய்வு இருக்காது” என்றான்.

12 இதன் பொருள் யாதெனில் தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும். அவர்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும், இயேசுவில் தம் விசுவாசத்தைப் பற்றிக்கொள்கிறவர்களாகவும் இருக்கவேண்டும்.

13 பிறகு, பரலோகத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டானதைக் கேட்டேன். அது “இதை எழுது: கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்கள் இப்பொழுதிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றது. “ஆமாம் அவர்கள் தங்கள் கடினமான வேலைகளை விட்டுவிட்டு ஓய்வுபெறுவார்கள். அவர்களது செயல்கள் அவர்களோடு தங்கும், இது முற்றிலும் உண்மை” என்று ஆவியானவரும் கூறுகிறார்.

14 நான் பார்த்தபோது எனக்கு முன்னால் ஒரு வெண்ணிற மேகத்தைக் கண்டேன். அம்மேகத்தின் மீது மனித குமாரனைப் போன்ற ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரது தலையில் பொன் கிரீடம் இருந்தது. அவரது கையிலோ கூர்மையான அரிவாள் இருந்தது.

15 பிறகு இன்னொரு தேவதூதன் ஆலயத்திலிருந்து வெளியே வந்தான். அவன் மேகத்தின்மேல் இருப்பவரைப் பார்த்து, “அறுவடைக்கு உரிய காலம் வந்துவிட்டது. பூமியின் பயிரும் முதிர்ந்து விட்டது. எனவே உங்கள் அறிவாளை எடுத்து அறுவடை செய்யுங்கள்” என்றான்.

16 அப்போது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தனது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார். பூமியின் விளைச்சல் அறுவடை ஆயிற்று.

17 பிறகு இன்னொரு தேவதூதன் பரலோகத்திலுள்ள ஆலயத்தை விட்டு வெளியே வந்தான். அவனும் ஒரு கூர்மையான அரிவாளை வைத்திருந்தான்.

18 பின்பு இன்னொரு தேவதூதன் பலிபீடத்தில் இருந்து வெளியே வந்தான். நெருப்பின் மீது இவனுக்கு வல்லமை இருந்தது. கூர்மையான அரிவாளை வைத்திருந்த தேவதூதனை அழைத்து, அவன், “பூமியின் திராட்சைகள் பழுத்திருக்கின்றன. கூர்மையான உன் அரிவாளை எடு. பூமியின் திராட்சைக் குலைகளை கூரிய உன் அரிவாளால் அறுத்துச் சேகரி” என்று உரத்த குரலில் கூறினான்.

19 அதனால் அத்தூதன் அரிவாளைப் பூமியின் மீது நீட்டி பூமியின் திராட்சைப் பழங்களை அறுத்து, தேவனுடைய கோபமாகிய பெரிய ஆலையிலே போட்டான்.

20 நகரத்துக்கு வெளியிலிருந்த அந்த ஆலையிலே திராட்சைப் பழங்கள் நசுக்கப்பட்டன. அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அது குதிரைகளின் தலை உயரத்திற்கு 200 மைல் தூரத்துக்குப் பொங்கி எழுந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 14 ERV IRV TRV