சங்கீதம் 83 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 தேவனே, அமைதியாய் இராதேயும்! உமது செவிகளை மூடிக்கொள்ளாதேயும்! தேவனே தயவாய் எதையாவது பேசும்.
2 தேவனே, உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள். உமது பகைவர்கள் உடனே தாக்குதல் ஆரம்பிக்கக்கூடும்.
3 உமது ஜனங்களுக்கு எதிராக அவர்கள் இரகசிய திட்டஙகளை வகுக்கிறார்கள். நீர் நேசிக்கும் ஜனங்களுக்கு எதிராக உமது பகைவர்கள் திட்டங்களை கலந்து ஆலோசிக்கிறார்கள்.
4 பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம். பின்பு ஒருநாளும் ஒருவனும் ‘இஸ்ரவேல்’ என்னும் பெயரை நினைவு கூரமாட்டான்.”
5 தேவனே, அந்த ஜனங்கள் எல்லோரும் உமக்கும் நீர் எங்களோடு செய்த உமது உடன்படிக்கைக்கும் எதிராகப் போராட ஒருமித்துக் கூடினார்கள்.
6 அப்பகைவர்கள் எங்களை எதிர்க்க ஒருமித்துச் சேர்ந்தார்கள். இஸ்மவேலராகிய ஏதோமியரும், மோவாபியரும், ஆகாரின் சந்ததியினரும், கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், பெலிஸ்தரும், தீருவில் வசிக்கும் ஜனங்களும், ஆகிய எல்லோரும் எங்களை எதிர்க்க ஒருமித்துக் கூடினார்கள்.
8 அசீரியரும்கூட அந்த ஜனங்களோடு சேர்ந்தார்கள். லோத்தின் சந்ததியினர் மிகுந்த வல்லமை பெறும்படிச் செய்தார்கள்.
9 தேவனே, மீதியானியரைத் தோற்கடித்ததைப் போலவும் கீசோன் நதியருகே சிசெரா மற்றும் யாபீன் ஜனங்களைத் தோற்கடித்ததைப்போலவும் பகைவனைத் தோற்கடியும்.
10 நீர் அவர்களை எந்தோரில் தோற்கடித்தீர். அவர்கள் சரீரங்கள் நிலத்தில் விழுந்து அழிந்தன.
11 தேவனே, பகைவனின் தலைவர்களைத் தோற்கடியும். ஓரேபுக்கும் சேபுக்கும் செய்தபடியே செய்யும். சேபாவுக்கும் சல்முனாவுக்கும் செய்தபடியே செய்யும்.
12 தேவனே, அந்த ஜனங்கள் உமது தேசத்தை விட்டுப் போகும்படியாக எங்களை வற்புறுத்த விரும்பினார்கள்!
13 தேவனே, அந்த ஜனங்களைக் காற்றில் பறக்கும் பதராகப் பண்ணும். காற்றுப் பறக்கடிக்கும் புல்லைப்போல் அந்த ஜனங்களைச் சிதறடியும்.
14 நெருப்பு காட்டை அழிப்பதைப்போலவும் பெருநெருப்பு மலைகளைச் சுடுவது போலவும் பகைவனை அழித்துப்போடும்.
15 தேவனே, புயலில் அலைக்கழிக்கப்படும் துகளைப்போல அந்த ஜனங்களை துரத்திவிடும். அவர்களை அசையும், அவர்களைப் பெருங்காற்றைப்போல நின்று பறக்கடியும்.
16 தேவனே அவர்கள் உண்மையிலேயே சோர்வுடையவர்கள் என்பதை அந்த ஜனங்கள் அறியும்படி அவர்களுக்குப் போதியும். அப்போது அவர்கள் உமது நாமத்தை தொழுதுகொள்ள விரும்புவார்கள்!
17 தேவனே, அந்த ஜனங்களை அச்சுறுத்தி, அவர்கள் என்றென்றும் வெட்கமடையச் செய்யும். அவர்களை இழிவுப்படுத்தி, அழித்துப்போடும்.
18 அப்போது நீரே தேவனென்று அவர்கள் அறிவார்கள். உமது நாமம் யேகோவா என்பதையும் அவர்கள் அறிவார்கள். மிக உன்னதமான தேனாகிய நீர் உலகம் முழுவதற்கும் தேவன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.