சங்கீதம் 66 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
2 அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்! துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!
3 அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்! தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது! உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள். அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.
4 உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும். ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும்.
5 தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்! அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும்.
6 தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார். மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள்.
7 தேவன், அவரது மிகுந்த வல்லமையயால் உலகத்தை ஆளுகிறார். எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார். ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது.
8 ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள், உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள்.
9 தேவன் நமக்கு உயிரைத் தந்தார். தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார்.
10 ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார்.
11 தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர். கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர்.
12 எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர். நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர். ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர்.
13 எனவே நான் உமது ஆலயத்திற்குப் பலிகளைக் கொண்டுவருவேன். நான் தொல்லையில் சிக்குண்டபோது உதவிக்காக உம்மைக் கேட்டேன். உமக்குப் பல பொருத்தனைகளைப் பண்ணினேன். இப்போது, நான் பொருத்தனைப் பண்ணினதை உமக்குக் கொடுக்கிறேன்.
15 நான் பாவப்பரிகார பலிகளை உமக்குக் கொடுக்கிறேன். நான் ஆட்டுக் கடாக்களோடு நறுமணப்பொருட்களைப் புகையிடுவேன். நான் உமக்குக் காளைகளையும் செம்மறி ஆடுகளையும் தருவேன்.
16 தேவனைத் தொழுதுக்கொள்கிற எல்லா ஜனங்களே, வாருங்கள். தேவன் எனக்குச் செய்தவற்றை உங்களுக்குக் கூறுவேன்.
17 நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன்.
18 என் இருதயம் தூய்மையாயிருந்தது. எனவே என் ஆண்டவர் நான் கூறியவற்றைக் கேட்டார்.
19 தேவன் நான் கூறியவற்றைக் கேட்டார். தேவன் என் ஜெபத்தைக் கேட்டார்.
20 தேவனைத் துதியுங்கள், தேவன் என்னிடம் பாராமுகமாக இருக்கவில்லை, அவர் என் ஜெபத்தைக் கேட்டார். தேவன் அவரது அன்பை என்னிடம் காட்டியருளினார்.