1 நீரூற்றின் தண்ணீருக்காக மானானது தாகங்கொள்ளுகிறது. அவ்வாறே என் ஆத்துமா தேவனே உமக்காகத் தாகமடைகிறது.
2 என் ஆத்துமா ஜீவனுள்ள தேவனுக்காகத் தாகமடைகிறது. அவரைச் சந்திக்க நான் எப்போது போவேன்?
3 என் பகைவன் எப்போதும் என்னைக் கேலி செய்து, “உன் தேவன் எங்கே? உன்னைக் காப்பாற்றுவதற்காக அவர் இன்னமும் வரவில்லையா?” என்று கேட்கிறபடியால் இரவும் பகலும் என் கண்ணீரே என் உணவாயிற்று.
4 தேவனுடைய ஆலயத்திற்குக் கூட்டத்தினரை வழிநடத்தி நடந்ததையும், பலரோடு ஓய்வு நாளைக் கொண்டாடியதையும், துதித்துப் பாடல்களைப் பாடி மகிழ்ந்ததையும், நான் நினைவு கூரும்போது என் உள்ளம் உடைந்து போகிறது.
5 ஏன் நான் மிகவும் துக்கமாயிருக்க வேண்டும்? ஏன் நான் மிகவும் கலங்கிப்போக வேண்டும்? நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன். அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கும். அவர் என்னை மீட்பார்.
6 என் தேவனே, நான் மிகவும் துக்கமாயிருக்கிறேன். எனவே நான் உம்மைக் கூப்பிட்டேன். யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரைக்கும் பின் மிசார் மலை (சிறுமலை) வரைக்கும் போனேன்.
7 பூமியின் ஆழங்களிலிருந்து பொங்கியெழும் தண்ணீரைப் போன்றும், கடலிலிருந்து அலைகள் தொடர்ந்து எழும்புவதைப் போன்றும், மீண்டும் மீண்டும் தொல்லைகள் என்னைச் சூழ்ந்தன. கர்த்தாவே, உமது அலைகள் என்னைச் சூழ்ந்து தாக்குகின்றன.
8 ஒவ்வொரு நாளும் கர்த்தர் தமது உண்மை அன்பை வெளிப்படுத்துகிறதினால் ஒவ்வொரு இரவும் அவரது பாடல்களை நான் பாடுகிறேன். ஜீவனுள்ள தேவனிடம் நான் ஜெபிக்கிறேன்.
9 என் பாறையான தேவனிடம் நான் பேசுவேன். நான், “கர்த்தாவே, ஏன் என்னை மறந்தீர்? என் பகைவரிடமிருந்து தப்பும் வழியை எனக்கு நீர் ஏன் காட்டவில்லை” என்பேன்.
10 என் பகைவர்கள் என்னை இடைவிடாது கேலி செய்து, “உன் தேவன் எங்கே? உன்னைக் காப்பாற்ற இன்னமும் அவர் வரவில்லையா?” என்று என்னைக் கேட்டு அவர்களின் வெறுப்பைக் காட்டுகிறார்கள்.
11 ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்? ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்? நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன். அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கும். அவர் என்னை மீட்பார்!
சங்கீதம் 42 ERV IRV TRV