1 கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார். அவர் என் கூப்பிடுதலைக் கேட்டார்.
2 அழிவின் குழியிலிருந்து கர்த்தர் என்னைத் தூக்கியெடுத்தார். சேற்றிலிருந்து என்னைத் தூக்கினார். என்னைத் தூக்கியெடுத்துப் பாறையின் மீது வைத்தார். என் பாதங்களை உறுதியாக்கினார்.
3 தேவனை வாழ்த்திப் பாடும் புதுப்பாடலைக் கர்த்தர் என் வாயில் வைத்தார். எனக்கு நிகழ்ந்த காரியங்களைப் பலர் காண்பார்கள். அவர்கள் தேவனைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் கர்த்தரை நம்புவார்கள்.
4 ஒருவன் கர்த்தரை நம்பினால் அவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான். பிசாசுகளிடமும், பொய்த்தெய்வங்களிடமும் உதவி கேட்டு செல்லாத ஒருவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
5 எனது தேவனாகிய கர்த்தாவே, நீர் அற்புதமான காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கிறீர்! எங்களுக்காக அற்புதமான திட்டங்களை வகுத்திருக்கிறீர்! கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை! நீர் செய்த காரியங்களைக் குறித்து நான் மீண்டும் மீண்டும் கூறுவேன். அவை எண்ணிலடங்காதவை.
6 கர்த்தாவே, நீர் இவற்றை எனக்குத் தெளிவாக்கினீர்! உமக்குப் பலிகளோ, தானியக் காணிக்கைகளோ தேவையில்லை. உமக்குத் தகன பலிகளோ, பாவப்பரிகார பலிகளோ தேவையில்லை.
7 எனவே நான், “இதோ, நானிருக்கிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும். நான் வருகிறேன் புத்தகத்தில் என்னைக் குறித்து இது எழுதப்பட்டிருக்கிறது.
8 என் தேவனே, நீர் விரும்புவதைச் செய்ய நான் விரும்புகிறேன். உமது போதனைகளை நான் படித்திருக்கிறேன்.
9 பலர் கூடிய சபையில் உமது நன்மையின் நற்செய்தியை நான் எடுத்துரைப்பேன். நான் வாய் மூடி மௌனியாயிருப்பதில்லை. கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
10 கர்த்தாவே, உமது நன்மைகளை நான் கூறுவேன். அவற்றை என் இருதயத்தில் மறைத்து வைக்கமாட்டேன். கர்த்தாவே, மீட்படைவதற்கு ஜனங்கள் உம்மை நம்பலாமென நான் அவர்களுக்குக் கூறுவேன். சபையின் ஜனங்களுக்கு நான் உமது தயவையும் உண்மையையும் மறைக்கமாட்டேன்.
11 கர்த்தாவே, என்னிடமிருந்து உமது இரக்கத்தை மறைக்காதேயும். உமது தயவும் உண்மையும் என்னை எப்பொழுதும் பாதுகாக்கட்டும்” என்றேன்.
12 தீயோர் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கைக் கடங்காதவர்கள். என் பாவங்கள் என்னைப் பிடித்தன, நான் அவற்றினின்று தப்ப இயலாது. என் தலைமுடியைக் காட்டிலும் அதிக பாவங்கள் என்னில் உள்ளன. என் தைரியத்தை இழந்துபோனேன்.
13 கர்த்தாவே, என்னிடம் ஓடி வந்து என்னைக் காப்பாற்றும்! கர்த்தாவே, விரைந்து வந்து எனக்கு உதவும்.
14 அத்தீயோர் என்னைக் கொல்ல முயலுகிறார்கள். கர்த்தாவே, அவர்கள் அவமானமும் ஏமாற்றமும் அடையச் செய்யும். அவர்கள் என்னைக் காயப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் அவமானத்தால் ஓடிப்போகட்டும்.
15 அத்தீயோர் என்னைக் கேலி செய்கிறார்கள். அவர்கள் பேசமுடியாதபடி தடுமாறச் செய்யும்.
16 ஆனால் உம்மை நோக்கிப் பார்க்கும் ஜனங்கள் மகிழ்ச்சி அடையட்டும், அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தரைத் துதிப்போம்” என்று கூறட்டும். உம்மால் காப்பாற்றப்பட்டதால் அந்த ஜனங்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
17 ஆண்டவரே, நான் ஏழையும் உதவியற்றவனுமான மனிதன். எனக்கு உதவும், என்னைக் காப்பாற்றும். என் தேவனே, மிகவும் தாமதியாதேயும்.
சங்கீதம் 40 ERV IRV TRV