நீதிமொழிகள் 25 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽இவையும் சாலமோனின் நீதி மொழிகளே. இவை யூதாவின் அரசராகிய எசேக்கியாவின் அவையினர் தொகுத்து எழுதியவை.⁾2 ⁽மறைபொருள் கடவுளுக்கு மாட்சியாம்; ஆய்ந்தறிதல் அரசருக்குப் பெருமையாம்.⁾3 ⁽அரசரின் உள்ளக் கிடக்கையை ஆராய்ந் தறிய மனிதரால் இயலாது; அது வானத்தின் உயரத்தையும் கடலின் ஆழத்தையும் போன்றது.⁾4 ⁽வெள்ளியினின்று மாசை நீக்கி விடு; அப்பொழுது தட்டார் அதிலிருந்து அழகிய பொருளென்றை உருவாக்குவார்.⁾5 ⁽அரசரின் அவையினின்று கெடுமதி உரைக்கும் பொல்லாரை அகற்றி விடு; அப் பொழுது அவரது ஆட்சி நீதிவழுவா நெறியில் நிலைக்கும்.⁾6 ⁽அரசர் முன்னிலையில் உன்னைப் பெரியவரென்று காட்டிக் கொள்ளாதே; பெரியோ ருக்குரிய இடத்தில் நில்லாதே.⁾7 ⁽பெரியவர் ஒருவருக்கு இடமுண்டாகும்படி நீ கீழிடத்திற்கு அனுப்பப்படுவதைவிட, “நீ மேலிடத்திற்கு வா” என்று அழைக்கப்படுவதே உனக்கு மேன்மை.⁾8 ⁽ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் உடனே வழக்கு மன்றத்திற்குப் போகாதே; நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால் அப்பொழுது நீ என்ன செய்வாய்?⁾9 ⁽அடுத்திருப்பாரோடு உனக்குள்ள வழக்கை அவருடனேயே பேசித் தீர்த்துக்கொள்; வேறொருவரைப் பற்றிய மறைசெய்தியை வெளிப்படுத்தாதே.⁾10 ⁽வெளிப்படுத்தினால் அதைக் கேட்பவர் உன்னை இகழுவார்; உனக்கு வரும் மானக்கேடு நீங்காது.⁾11 ⁽தக்க வேளையில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்.⁾12 ⁽தங்கச் சங்கிலியும் பொற்கடுக்கனும் ஓர் இணையாக அமைவது போல, எச்சரிக்கை கூறும் ஞானியும் அதை விருப்புடன் கேட்பவரும் ஓர் இணையாக அமைவர்.⁾13 ⁽குளிர்ந்த பானம் கோடைக் காலத்தில் எப்படி இருக்குமோ அப்படியே உண்மையான தூதர் தம்மை அனுப்பினவருக்கு இருப்பார்; அவர் தம் தலைவருக்குப் புத்துயிரளிப்பார்.⁾14 ⁽கருமுகிலும் காற்றும் உண்டு; ஆனால் மழை இல்லை; கொடாமலே தன்னைக் கொடைவள்ளல் என்பவனும் இவ்வாறே.⁾15 ⁽பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும்; இனிய நா எலும்பையும் நொறுக்கும்.⁾16 ⁽தேன் கிடைத்தால் அளவோடு சாப்பிடு; அளவை மீறினால் தெவிட்டிப்போகும்; நீ வாந்தியெடுப்பாய்.⁾17 ⁽அடுத்திருப்பார் வீட்டுக்கு அடிக்கடி போகாதே; போனால் சலிப்பு ஏற்பட்டு, அவர் உன்னை வெறுப்பார்.⁾18 ⁽அடுத்திருப்பாருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்பவர், குறுந்தடியையும் வாளையும் கூரிய அம்பையும் ஒத்தவர்.⁾19 ⁽இக்கட்டுக் காலத்தில் ஒரு துரோகியை நம்புவது, சொத்தைப் பல்லையும் நொண்டிக் காலையும் நம்புவதற்குச் சமம்.⁾20 ⁽மனத்துயரமுள்ளவரைப் பாட்டுப் பாடச் செய்தல், குளிரில் உடைகளைக் களைவது போலவும், புண்ணில் காடியை வார்ப்பது போலவும் இருக்கும்.⁾21 ⁽உன் எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடிருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு.⁾22 ⁽இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்; ஆண்டவரும் உனக்குக் கைம்மாறு அளிப்பார்.⁾23 ⁽வட காற்று மழையைத் தோற்றுவிக்கும்; புறங்கூறுதல் சீற்றப் பார்வையைத் தோற்று விக்கும்.⁾24 ⁽மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட குடிசை வாழ்க்கையே மேல்.⁾25 ⁽தொலைவிடத்திலிருந்து வரும் நற்செய்தி, வறண்ட தொண்டைக்குக் கிடைக்கும் குளிர்ந்த நீரை ஒக்கும்.⁾26 ⁽பொல்லாருக்கு இணங்கிவிடும் நேர்மையானவர் கலங்கிய ஊற்றை அல்லது பாழடைந்த கிணற்றை ஒத்திருக்கிறார்.⁾27 ⁽தேனை மிகுதியாகச் சாப்பிடுவது நன்றன்று; புகழ்ச்சியை மிகுதியாக விரும்பவதும் நன்றன்று.⁾28 ⁽தன்னடக்கமில்லா மனிதர் அரண் அழிந்த காவல் இல்லாப் பட்டணம்.⁾