1 ⁽கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது; முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது.⁾

2 ⁽இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே; தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்.⁾

3 ⁽நேர்மையானவர்களின் நல்லொழுக்கம் அவர்களை வழிநடத்தும்; நம்பிக்கைத் துரோகி களின் வஞ்சகம் அவர்களைப் பாழ்படுத்தும்.⁾

4 ⁽கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது; நேர்மையான நடத் தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.⁾

5 ⁽குற்றமில்லாதவர்களின் நேர்மை அவர்களின் வழியை நேராக்கும்; பொல்லார் தம் பொல்லாங்கினால் வீழ்ச்சியுறுவர்.⁾

6 ⁽நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்; நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித்திட்டத்தில் தாங்களே பிடிபடுவார்கள்.⁾

7 ⁽பொல்லார் எதிர்நோக்கியிருந்தது அவர்கள் சாகும்போதும் கிட்டாமலே மறைந்துபோகும்; அவர்கள் எதிர் நோக்கியிருந்த செல்வம் கிடைக்காமற்போகும்.⁾

8 ⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர்; பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்.⁾

9 ⁽இறைப்பற்று இல்லாதோர் தம் பேச்சினால் தமக்கு அடுத்திருப்பாரைக் கெடுப்பர்; நேர்மையாளர் தம் அறிவாற்றலால் விடுவிக்கப் பெறுவர்.⁾

10 ⁽நல்லாரின் வாழ்க்கை வளமடைந்தால், ஊரார் மகிழ்ந்து கொண்டாடுவர்; பொல்லார் அழிந்தால் அவர்களிடையே ஆர்ப்பரிப்பு உண்டாகும்.⁾

11 ⁽நேர்மையாளரின் ஆசியாலே, நகர் வளர்ந்தோங்கும்; பொல்லாரின் கபடப் பேச்சாலே அது இடிந்தழியும்.⁾

12 ⁽அடுத்திருப்போரை இகழ்தல் மதிகெட் டோரின் செயல்; நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு;⁾

13 ⁽வம்பளப்போர் மறைசெய்திகளை வெளிப் படுத்திவிடுவர்; நம்பிக்கைக்குரியோரோ அவற்றை மறைவாக வைத்திருப்பர்.⁾

14 ⁽திறமையுள்ள தலைமை இல்லையேல், நாடு வீழ்ச்சியுறும்; அறிவுரை கூறுவார் பலர் இருப்பின், அதற்குப் பாதுகாப்பு உண்டு.⁾

15 ⁽அன்னியருக்காகப் பிணை நிற்போர் அல்லற்படுவர்; பிணை நிற்க மறுப்போர்க்கு இன்னல் வராது.⁾

16 ⁽கனிவுள்ள பெண்ணுக்குப் புகழ் வந்து சேரும்; முயற்சியுள்ள ஆணுக்குச் செல்வம் வந்து குவியும்.⁾

17 ⁽இரக்கமுள்ளோர் தம் செயலால் தாமே நன்மை அடைவர்; இரக்கமற்றோரோ தமக்கே ஊறு விளைவித்துக் கொள்வர்.⁾

18 ⁽பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல; நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர்.⁾

19 ⁽நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்; தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்.⁾

20 ⁽வஞ்சக நெஞ்சினர் ஆண்டவரின் இகழ்ச்சிகுரியவர்; மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவர்.⁾

21 ⁽தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; இது உறுதி; கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது.⁾

22 ⁽மதிகெட்டு நடக்கும் பெண்ணின் அழகு பன்றிக்குப் போட்ட வைர மூக்குத்தி.⁾

23 ⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பங்கள் எப்போதும் நன்மையே பயக்கும்; எதிர்காலம் பற்றிப் பொல்லார் கொள்ளும் நம்பிக்கை தெய்வ சினத்தையே வருவிக்கும்.⁾

24 ⁽அளவின்றிச் செலவழிப்போர் செல்வ ராவதும் உண்டு; கஞ்சராய் வாழ்ந்து வறியவ ராவதும் உண்டு.⁾

25 ⁽ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்; குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.⁾

26 ⁽தானியத்தைப் பதுக்கி வைப்போரை மக்கள் சபிப்பர்; தானியத்தை மக்களுக்கு விற்போரோ ஆசி பெறுவர்.⁾

27 ⁽நன்மையானதை நாடுவோர், கடவுளின் தயவை நாடுவோர் ஆவர்; தீமையை நாடுவோரிடம் தீமைதான் வந்தடையும்.⁾

28 ⁽தம் செல்வத்தை நம்பி வாழ்வோர் சருகென உதிர்வர்; கடவுளை நம்பி வாழ்வோரோ தளிரெனத் தழைப்பர்.⁾

29 ⁽குடும்பச் சொத்தைக் கட்டிக் காக்காத வர்களுக்கு எஞ்சுவது வெறுங்காற்றே; அத் தகைய மூடர்கள் ஞானமுள்ளோர்க்கு அடிமை யாவர்.⁾

30 ⁽நேர்மையான நடத்தை வாழ்வளிக்கும் மரத்திற்கு இட்டுச் செல்லும்; ஆனால், வன்செயல்* உயிராற்றலை இழக்கச் செய்யும்.⁾

31 ⁽நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில், பொல்லாரும் பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!⁾