எண்ணாகமம் 9 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 எகிப்து நாட்டிலிருந்து அவர்கள் வெளியேறி வந்த இரண்டாம் ஆண்டு முதல் மாதம் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் மோசேயோடு பேசினார். அவர் கூறியதாவது:2 இஸ்ரயேல் மக்கள் குறிக்கப்பட்ட காலத்தில் பாஸ்காவைக் கொண்டாடட்டும்.3 இம்மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப்பொழுதில் குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் அதைக் கொண்டாடுவீர்கள்; அதன் எல்லா விதிமுறைகளின்படியும் எல்லா ஒழுங்குகளின்படியும் நீங்கள் அதைக் கொண்டாட வேண்டும்.4 அவ்வாறே, பாஸ்காவைக் கொண்டாடும்படி மோசே இஸ்ரயேல் மக்களிடம் கூறினார்.5 அவர்கள் முதல் மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப் பொழுதில் சீனாய்ப் பாலைநிலத்தில் பாஸ்காவைக் கொண்டாடினார்கள். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் இஸ்ரயேல் மக்கள் செய்தனர்.6 ஒருவனின் பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டதை முன்னிட்டுச் சிலர் அந்நாளில் பாஸ்காவைக் கொண்டாட முடியவில்லை; அவர்கள் அந்நாளில் மோசேயிடமும் ஆரோனிடமும் வந்தனர்.7 அந்த ஆள்கள் மோசேயிடம், “ஒருவனின் பிணத்தைத் தொட்டதால் நாங்கள் தீட்டுப்பட்டிருக்கிறோம்; ஆண்டவருக்கான காணிக்கையைக் குறித்த காலத்தில் செலுத்த இஸ்ரயேல் மக்களிடையே நாங்கள் மட்டும் ஏன் விலக்கப்படவேண்டும்?” என்று கேட்டனர்.8 அவர் அவர்களிடம், “உங்களைப் பற்றி ஆண்டவர் இடும்கட்டளை என்னவென்று நான் கேட்டறியும்வரை பொறுத்திருங்கள்” என்றார்.⒫9 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:10 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: உங்களிலும் உங்களுக்குப் பின் வரும் தலைமுறைகளிலும் எவனாவது ஒரு பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டிருந்தால் அல்லது நெடும் பயணத்தில் ஈடுபட்டிருந்தால் அவனும் ஆண்டவருக்குப் பாஸ்காவைக் கொண்டாடவேண்டும்.11 இரண்டாம் மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப் பொழுதிலேயே அவர்கள் கொண்டாட வேண்டும்; அவர்கள் புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்பான கீரைகளோடும் அதை உண்பார்கள்.12 அவர்கள் காலை வரை எதையும் மீதி வைக்கவோ அதன் எலும்பு எதையும் முறிக்கவோ கூடாது; எல்லா விதிமுறைகளின்படியும் அவர்கள் பாஸ்காவைக் கொண்டாடுவார்கள்.13 ஆனால், ஒருவன் தீட்டுப்படாதிருந்தும் பயணத்தில் ஈடுபடாதிருந்தும் பாஸ்காவைக் கொண்டாடாது ஒதுங்கியிருந்தால், அவன் தன் மக்களிலிருந்து விலக்கப்படுவான்; ஏனெனில், அவன் ஆண்டவருக்கு உரிய காணிக்கையைக் குறித்த காலத்தில் செலுத்தவில்லை; அந்த ஆள் தன் பாவப்பழியைச் சுமப்பான்.14 உங்களோடு தங்கியிருக்கும் வேற்றினத்தவன் ஒருவன், ஆண்டவருக்குப் பாஸ்காவைக் கொண்டாட விரும்பினால், பாஸ்காவின் விதிமுறைகள், ஒழுங்குகளுக்கேற்ப அவன் செய்யவேண்டும்; வேற்று நாட்டவனுக்கும், சொந்த நாட்டவனுக்கும் இருக்க வேண்டியது ஒரே விதிமுறையே.15 திரு உறைவிடம் எழுப்பப்பட்ட நாளில் மேகம் “திரு உறைவிடத்தை, அதாவது உடன்படிக்கை திருஉறைவிடத்தை மூடியது; அது திரு உறைவிடத்தின் மேல் மாலைமுதல் காலைவரை நெருப்பு மயமாய் இருந்தது.16 இது தொடர்ந்து நிகழ்ந்தது; மேகம் மூடியது; இரவில் நெருப்பு மயமாய் இருந்தது.17 கூடாரத்தின் மேலேயிருந்து மேகம் எழும்பிச் சென்றபோது இஸ்ரயேல் மக்கள் புறப்படுவர்; மேகம் தங்கி இருந்த இடத்தில் இஸ்ரயேல் மக்கள் பாளையம் இறங்குவர்.18 ஆண்டவர் கட்டளைப்படியே இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டனர்; ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் பாளையம் இறங்கினர்; மேகம் திருஉறைவிடத்தின்மேல் தங்கி இருந்த நாளெல்லாம் அவர்களும் பாளையத்தில் தங்கியிருந்தனர்.19 மேகம் திருஉறைவிடத்தின்மேல் பல நாள்கள் தொடர்ந்திருந்தபோது கூட இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் வார்த்தையைக் கடைப்பிடித்தனர்; அவர்கள் புறப்படவில்லை.20 சில வேளைகளில் மேகம் திருஉறைவிடத்தின்மேல் சில நாள்களே இருந்தது; ஆண்டவர் கட்டளைப்படி அவர்கள் பாளையத்தில் தங்கியிருந்தனர்; பின் ஆண்டவர் கட்டளைப்படி அவர்கள் புறப்பட்டனர்.21 சில நேரங்களில் மேகம் மாலைமுதல் காலைவரை தங்கியிருந்தது; காலையில் மேகம் எழும்பிச் சென்றதும் அவர்கள் புறப்பட்டனர்.22 இரண்டு நாள்கள் மட்டுமோ, ஒரு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட நாள்களோ மேகம் திருஉறைவிடத்தின்மேல் தொடர்ந்து தங்கியிருந்தால் இஸ்ரயேல் மக்களும் பாளையத்திலேயே தங்கியிருந்தனர்; அவர்கள் புறப்படவில்லை.23 ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் பாளையமிறங்கி, ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டபடி அவர்கள் ஆண்டவர் வார்த்தையைக் கடைப்பிடித்தனர்.எண்ணாகமம் 9 ERV IRV TRV