எண்ணாகமம் 33 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 மோசே, ஆரோன் ஆகியோர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டைவிட்டுப் படைத்திரளாக வெளியேறிச் சென்றபோது அவர்கள் பயணம் செய்த பகுதிகள் இவையே;2 அவர்கள் புறப்பட்ட இடங்களை மோசே ஆண்டவர் கட்டளைப்படி படிப்படியாக எழுதி வைத்தார்; அவர்கள் படிப்படியாகத் தங்கிப் புறப்பட்ட இடங்கள் இவையே;3 முதல் மாதம் பதினைந்தாம் நாள் அவர்கள் இராம்சேசிலிருந்து புறப்பட்டனர்; பாஸ்காவின் மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் எகிப்தியர் அனைவரின் பார்வையிலும் வெற்றிக்கை ஓங்கியவராய் வெளியேறினர்.4 ஆண்டவர் அவர்களுக்குச் சாகடித்த தங்கள் எல்லாத் தலைப்பேறுகளையும் அவர்கள் புதைத்துக் கொண்டிருந்தபோது இது நடந்தது; அவர்கள் தெய்வங்கள் மேலும் ஆண்டவர் நீதித் தீர்ப்பு வழங்கினார்.⒫5 இவ்வாறு, இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து புறப்பட்டுச் சுக்கோத்தில் பாளையமிறங்கினர்.6 அவர்கள் சுக்கோத்திலிருந்து புறப்பட்டு, பாலை நிலத்தின் ஓரத்திலுள்ள ஏத்தாமில் பாளையமிறங்கினர்.7 பின் அவர்கள் ஏத்தாமிலிருந்து பயணமாகிப் பாகால் செபோனுக்குக் கிழக்கே பிசுகிரோத்துக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன் பாளையமிறங்கினர்.⒫8 அகிரோத்தின் முன்னிருந்து கிளம்பி அவர்கள் கடல் நடுவே பாலைநிலத்துக்குள் கடந்து சென்றனர்; அவர்கள் ஏத்தாம் பாலை நிலத்தில் மூன்றுநாள் பயணம் செய்து மாராவில் பாளையம் இறங்கினர்.9 பின்பு, மாராவிலிருந்து புறப்பட்டு அவர்கள் ஏலிமுக்கு வந்தனர். ஏலிமில் பன்னிரு நிரூற்றுகளும், எழுபது பேரீச்சை மரங்களும் இருந்தன. அவர்கள் அங்கே பாளையமிறங்கினர்.10 அவர்கள் ஏலிமிலிருந்து பயணமாகிச் செங்கடல் அருகில் பாளையம் இறங்கினர்.11 பின்பு, செங்கடலிலிருந்து கிளம்பி அவர்கள் சீன் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.12 அவர்கள் சீன் பாலை நிலத்திலிருந்து புறப்பட்டுத் தொப்காவில் பாளையம் இறங்கினர்.13 அவர்கள் தொப்காவிலிருந்து பயணமாகி ஆலுசில் பாளையம் இறங்கினர்.14 அவர்கள் ஆலுசிலிருந்து கிளம்பி, இரபிதிமில் பாளையம் இறங்கினர். அங்கு மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை.15 பின், அவர்கள் இரபிதிமிலிருந்து புறப்பட்டு, சீனாய்ப் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.16 சீனாய்ப் பாலை நிலத்திலிருந்து பயணமாகி, அவர்கள் கிப்ரோத்து அத்தாவில் பாளையம் இறங்கினர்.17 கிப்ரோத்து அத்தாவிலிருந்து கிளம்பி, அவர்கள் அட்சரோத்தில் பாளையம் இறங்கினர்.18 அவர்கள் அட்சத்ரோத்திலிருந்து புறப்பட்டு, ரித்மாவில் பாளையம் இறங்கினர்.19 பின், அவர்கள் ரித்மாவிலிருந்து பயணமாகி, ரிம்மோன் பாரேசில் பாளையம் இறங்கினர்.20 ரிம்மோன் பாரேசிலிருந்து கிளம்பி, அவர்கள் லிப்னாவில் பாளையம் இறங்கினர்.21 லிப்னாவிலிருந்து புறப்பட்டு, அவர்கள் இரிசாவில் பாளையம் இறங்கினர்.22 பின்னர், இரிசாவிலிருந்து அவர்கள் பயணமாகிக் கெகேலாதாவில் பாளையம் இறங்கினர்.23 கெகேலாதாவிலிருந்து கிளம்பி, அவர்கள் செபேர் மலையில் பாளையம் இறங்கினர்.24 பின்பு, அவர்கள் செபேர் மலையிலிருந்து புறப்பட்டு, அராதாவில் பாளையம் இறங்கினர்.25 அராதாவிலிருந்து அவர்கள் பயணமாகி, மக்கலோத்தில் பாளையம் இறங்கினர்.⒫26 மக்கலோத்திலிருந்து கிளம்பி, அவர்கள் தாகாத்தில் பாளையம் இறங்கினர்.27 அவர்கள் தாகாத்திலிருந்து புறப்பட்டு, தெராகில் பாளையம் இறங்கினர்.28 தெராகிலிருந்து பயணமாகி, அவர்கள் மித்காவில் பாளையம் இறங்கினர்.29 மித்காவிலிருந்து கிளம்பி, அவர்கள் அசுமோனாவில் பாளையம் இறங்கினர்.30 பின்பு, அசுமோனாவிலிருந்து புறப்பட்டு மோசரோத்தில் பாளையம் இறங்கினர்.⒫31 மோசரோத்திலிருந்து அவர்கள் பயணமாகிப் பெனயாக்கானில் பாளையம் இறங்கினர்.32 பெனயாக்கானிலிருந்து கிளம்பி, அவர்கள் ஓரகித்துகாதில் பாளையம் இறங்கினர்.33 ஓரகித்துகாதிலிருந்து புறப்பட்டு, அவர்கள் யோற்றுபாவில் பாளையம் இறங்கினர்.⒫34 பின்பு யோற்றுபாவிலிருந்து பயணமாகி, அப்ரோனாவில் பாளையம் இறங்கினர்.35 அப்ரோனாவிலிருந்து கிளம்பி, அவர்கள் எட்சியோன்கெபேரில் பாளையம் இறங்கினர்.36 எட்சியோன்கெபேரிலிருந்து அவர்கள் புறப்பட்டு, காதேசு என்னும் சீன் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.37 அவர்கள் காதேசிலிருந்து பயணமாகி, ஏதோம் நாட்டின் ஓரத்திலிருந்த ஓர் மலையில் பாளையம் இறங்கினர்.⒫38 பின்பு, குரு ஆரோன் ஆண்டவர் கட்டளைப்படி ஓர் மலைக்கு ஏறிச் சென்றார்; அவர் அங்கேயே இறந்தார்; இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாற்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் முதலாம் நாளில் இது நடந்தது.39 ஓர் மலையில் ஆரோன் இறந்தபோது அவருக்கு வயது நூற்று இருபத்து மூன்று.⒫40 கானான் நாட்டிலுள்ள நெகேபில் வாழ்ந்த கானானியனான அராது மன்னன் இஸ்ரயேல் மக்கள் வருவதைக் கேள்விப்பட்டான்.41 பின்னர், ‘ஓர்’ மலையிலிருந்து அவர்கள் புறப்பட்டு, சல்மோனாவில் பாளையம் இறங்கினர்.42 சல்மோனாவிலிருந்து பயணமாகி, அவர்கள் பூனோனில் பாளையம் இறங்கினர்.43 பூனோனிலிருந்து கிளம்பி, அவர்கள் ஒபோத்தில் பாளையம் இறங்கினர்.44 அவர்கள் ஒபோத்திலிருந்து புறப்பட்டு, மோவாபின் எல்லையிலுள்ள இய்யாபரிமில் பாளையம் இறங்கினர்.45 இய்யாபரிமிலிருந்து அவர்கள் பயணமாகி, தீபோன்காதில் பாளையம் இறங்கினர்.46 தீபோன் காதிலிருந்து கிளம்பி, அவர்கள் அல்மோன் திப்லாத்தாயிமில் பாளையம் இறங்கினர்.47 அல்மோன் திப்லாத்தாயிமிலிருந்து புறப்பட்டு, அவர்கள் நெபோவுக்கு முன் அபாரிம் மலைகளில் பாளையம் இறங்கினர்.48 அபாரிம் மலைகளிலிருந்து அவர்கள் பயணமாகி, எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையம் இறங்கினர்.⒫49 அவர்கள் யோர்தானை அடுத்த மோவாபுச் சமவெளியில் பெத்தசிமோத்திலிருந்து ஆபெல் சித்திம்வரை இருந்த பகுதியில் பாளையம் இறங்கினர்.50 எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:51 நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்; யோர்தானைக் கடந்து நீங்கள் கானான் நாட்டுக்குள் செல்லுகையில்,52 உங்கள் முன்னிலிருந்து நாட்டின் குடிகள் அனைவரையும் துரத்திவிடுங்கள்; அவர்களின் செதுக்கிய சிலைகள் அனைத்தையும் அழித்துவிடுங்கள்; அவர்களின் வார்ப்புப் படிமங்கள் அனைத்தையும் உடைத்து விடுங்கள்.53 நீங்கள் நாட்டை உடைமையாக்கி அதில் குடியிருப்பீர்கள்; நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி அதை உங்களுக்குத் தந்துள்ளேன்.54 உங்கள் குடும்பங்கள் வாரியாகத் திருவுளச் சீட்டுப் போட்டு நீங்கள் நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுங்கள். குலங்களுள் பெரியவற்றுக்குக் கூட்டியும், சிறியவற்றுக்குக் குறைத்தும் உரிமைச் சொத்து வழங்க வேண்டும். எவ்விடத்திற்காக ஒருவனுக்குச் சீட்டு விழுகிறதோ, அது அவனுக்குரியது. உங்கள் மூதாதையரின் குலங்களின்படியே நீங்கள் உரிமைச் சொத்து பெறுவீர்கள்.55 நாட்டின் குடிகளை உங்கள் முன்னின்று நீங்கள் துரத்தவில்லையெனில் நீங்கள் தங்கியிருக்க அனுமதிப்போர் உங்கள் கண்களைக் குத்தும் கூராணிகளாகவும் உங்கள் விலாவைக் கீறும் முட்களாகவும் இருந்து நீங்கள் குடியிருக்கும் நாட்டில் உங்களைத் துன்புறுத்துவார்கள்.56 நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்கே செய்வேன்.