எண்ணாகமம் 1 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தர் மோசேயிடம் பேசினார். இது சீனாய் பாலைவனத்தில் நடந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இரண்டாவது ஆண்டின் இரண்டாம் மாதத்தின் முதல் நாளில் இது நடந்தது. கர்த்தர் மோசேயிடம்,
2 “இஸ்ரவேல் ஜனங்கள் தொகையை கணக்கிடு. ஒவ்வொரு மனிதனையும் அவனது குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் பட்டியலிடு.
3 இஸ்ரவேல் ஜனங்களில் இருபது வயது அல்லது அதற்கு மேலுள்ள எல்லா ஆண்களையும் நீயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிடுங்கள். (இந்த ஆண்கள்தான் இஸ்ரவேல் படையில் பணிபுரிய வேண்டும்.) இவர்களை குழுவின்படி கணக்கிடுக.
4 ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களுக்கு உதவுவான். அவனே அந்தக் கோத்திரத்துக்குத் தலைவனாக இருப்பான்.
5 உங்களுக்குத் துணையாக நின்று உங்களுக்கு உதவி செய்பவர்களின் பெயர்கள் பின்வருவதாகும். ரூபனின் கோத்திரத்திலிருந்து சேதேயூருடைய மகன் எலிசூர்;
6 சிமியோனின் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல்;
7 யூதாவின் கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்;
8 இசக்காரின் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல்;
9 செபுலோனின் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்;
10 யோசேப்பின் சந்ததியிலிருந்து யோசேப்பின் மகனான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா; யோசேப்பின் மகனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல்;
11 பென்யமீனின் கோத்திரத்திலிருந்து கீதெயோனின் மகன் அபீதான்;
12 தாணின் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்;
13 ஆசேரின் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் மகன் பாகியேல்
14 காத்தின் கோத்திரத்திலிருந்து தேகுவேலின் மகன் எலியாசாப்;
15 நப்தலியின் கோத்திரத்திலிருந்து ஏனானின் மகன் அகீரா” என்று கூறினார்.
16 இவர்கள் அனைவரும் தங்களுடைய கோத்திரங்களுக்கு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
17 மோசேயும் ஆரோனும் இவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டனர்.
18 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்துக் கூட்டினர். பிறகு, அவர்கள் தங்கள் குடும்பம், மற்றும் கோத்திரங்களின்படி பட்டியலிடப்பட்டனர். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள எல்லா ஆண்களும் பட்டியலிடப்பட்டனர்.
19 கர்த்தருடைய கட்டளையின்படியே மோசே சரியாக செய்து முடித்தான். ஜனங்கள் சீனாய் பாலைவனத்தில் இருக்கும்போதே, மோசே அவர்களை எண்ணிக் கணக்கிட்டான்.
20 அவர்கள் ரூபனின் கோத்திரத்தைக் கணக்கிட்டார்கள். (இஸ்ரவேலின் மூத்த மகன் ரூபன்.) இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் எண்ணிக் கணக்கிடப்பட்டனர். அவர்கள் தம் கும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணி பட்டியலிடப்பட்டனர்.
21 ரூபனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 46,500.
22 சிமியோனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினர். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
23 சிமியோனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களில் மொத்த எண்ணிக்கை 59,300.
24 காத்தின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
25 காத்தின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 45,650.
26 யூதாவின் கோத்திரத்தில் இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
27 யூதாவின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 74,600.
28 இசக்காரின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
29 இசக்காரின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 54,400.
30 செபுலோனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
31 செபுலோனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 57,400.
32 எப்பிராயீமின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். (இவன் யோசேப்பின் மகன்) இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
33 எப்பிராயீமின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 40,500.
34 மனாசேயின் கோத்திரத்தில் உள்ளவர்களை அவர்கள் எண்ணினார்கள். (மனாசேயும் யோசேப்பின் மகன்.) இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
35 மனாசேயின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 32,200.
36 அவர்கள் பென்யமீனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
37 பென்யமீனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 35,400.
38 அவர்கள் தாணின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
39 தாணின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 62,700.
40 ஆசேரின் கோத்திரத்தில் உள்ளவர்களை அவர்கள் எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
41 ஆசேரின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 41,500.
42 அவர்கள் நப்தலியின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
43 நப்தலியின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 53,400.
44 மோசேயும், ஆரோனும், பன்னிரண்டு இஸ்ரவேல் தலைவர்களும், இந்த ஜனங்களை எண்ணினார்கள். (ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஒவ்வொரு தலைவர் இருந்தனர்.)
45 அவர்கள் இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதி கொண்டவர்களை எண்ணினார்கள். ஒவ்வொருவனும், தனது குடும்பத்தோடு பட்டியலிடப்பட்டனர்.
46 அவர்கள் கணக்கிட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 603,550.
47 லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரவேலர்களோடு சேர்த்து எண்ணப்படவில்லை.
48 கர்த்தர் மோசேயிடம்,
49 “லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களை எண்ணவேண்டாம். அவர்களை இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்க்க வேண்டாம்.
50 லேவியர்களிடம், அவர்கள் உடன்படிக்கையின் பரிசுத்தக் கூடாரத்திற்கு பொறுப்பானவர்கள் என்று சொல். அவர்கள் அக்கூடாரத்தையும், அதற்குரிய வேலைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தையும், அதிலுள்ள பொருட்களையும் சுமக்கவேண்டும். அவர்கள் தங்கள் முகாமை அக்கூடாரத்தைச் சுற்றிலும் அமைத்து தங்கியிருந்து, அவற்றைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
51 பரிசுத்தக் கூடாரமானது இடம் பெயரும்போதும், அதற்கான வேலைகளை லேவியர்களே செய்யவேண்டும். பரிசுத்தக் கூடாரமானது நிறுவப்படும்போதெல்லாம் அதற்குரிய வேலைகளையும் லேவியர்களே செய்ய வேண்டும். அவர்களே பரிசுத்தக் கூடாரத்தின் சகல பொறுப்புகளுக்கும் உரியவர்கள். லேவியின் கோத்திரத்தைச் சேராத ஒருவன், பரிசுத்தக் கூடாரத்தின் வேலைகளைச் செய்ய முயன்றால் அவன் கொல்லப்படவேண்டும்.
52 இஸ்ரவேல் ஜனங்கள், தனித்தனிக் குழுக்களாக தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் குடும்பக் கொடியின் அருகிலேயே ஒவ்வொருவனும் தங்கவேண்டும்.
53 ஆனால், லேவியர்கள் தங்கள் முகாமை பரிசுத்தக் கூடாரத்தைச் சுற்றியே அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உடன்படிக்கையின் பரிசுத்தக் கூடாரத்தைப் பாதுகாக்கவேண்டும். அதனால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எவ்விதத் தீமையும் ஏற்படாமல் இருக்கும்” என்றார்.
54 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும், மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கீழ்ப்படிந்தனர்.