நெகேமியா 8 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்றுகூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருநூலைக் கொண்டுவருமாறு திருநூல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர்.2 அவ்வாறே ஏழாம் மாதம் முதல்நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார்.3 தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர்.⒫4 திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மர மேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அருகே வலப்பக்கத்தில் மத்தித்தியா, சேமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசேயா ஆகியோரும், இடப்பக்கத்தில் பெதாயா, மிசாவேல், மல்கியா, ஆசும், அசுபதீனா, செக்கரியா, மெசுல்லாம் ஆகியோரும் நின்று கொண்டிருந்தார்கள்.5 எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள்.6 அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி “ஆமென்! ஆமென்!” என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.⒫7 மேலும் லேவியரான ஏசுவா, பானி, செரேபியா, யாமின், கூபு, சபத்தாய், ஓதியா, மாசேயா, கெலிற்றா, அசரியா, யோசபாத்து, அனான், பெலாயா ஆகியோர் சட்டத்தை மக்களுக்கு விளக்கினார்கள். மக்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.8 மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.⒫9 ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுதுபுலம்ப வேண்டாம்” என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக்கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள்.10 அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று கூறினார்.⒫11 எனவே லேவியர் எல்லா மக்களையும் நோக்கி, “அமைதியாயிருங்கள்; ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள்” எனச் சொல்லி அழுகையை அமர்த்தினார்கள்.12 எல்லா மக்களும் அவர்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளைப் புரிந்துகொண்டதால், உண்ணவும், குடிக்கவும், உணவு அனுப்பவும், மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுச் சென்றார்கள்.13 இரண்டாம் நாள் அனைத்து மக்களின் குலத்தலைவர்களும், குருக்களும், லேவியர்களும், திருநூல் வல்லுநரான எஸ்ராவிடம் திருச்சட்டத்தின் சொற்களைக் கற்றுக்கொள்ளக் கூடி வந்தார்கள்.14 அப்பொழுது அவர்கள், “ஏழாம் மாதத் திருவிழாக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கூடாரங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று ஆண்டவர் மோசே வழியாகத் தந்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள்.15 ஆகையால், “திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, கூடாரங்கள் அமைப்பதற்கு மலைகளுக்குச் சென்று ஒலிவக் கிளைகள், காட்டு ஒலிவக் கிளைகள், மிருதுச்செடி கிளைகள், பேரீச்ச ஓலைகள் மற்றும் அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டு வாருங்கள்” என்று தங்களுடைய நகரங்கள் எல்லாவற்றிலும் எருசலேமிலும் பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்கள்.⒫16 எனவே மக்கள் புறப்பட்டுச் சென்று, அவற்றைக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும், தம் வீட்டின் மேல்மாடியிலும் தங்கள் முற்றங்களிலும், கடவுளின் இல்லமுற்றங்களிலும், தண்ணீர் வாயில் வளாகத்திலும், எப்ராயிம் வாயில் வளாகத்திலும் தமக்குக் கூடாரங்கள் அமைத்துக் கொண்டார்கள்.17 அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த சபையார் அனைவரும் கூடாரங்கள் அமைத்து அக்கூடாரங்களில் தங்கினர். நூனின் மகன் யோசுவாவின் காலத்திலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதம் செய்ததில்லை. அன்று பெருமகிழ்ச்சி நிலவியது.18 எஸ்ரா முதல்நாள் தொடங்கிக் கடைசிநாள்வரை கடவுளின் திருச்சட்டநூலை உரக்க வாசித்தார். அவர்கள் ஏழு நாளளவும் திருவிழாக் கொண்டாடினர். சட்ட ஒழுங்கின்படி, எட்டாம் நாள் பெரும் சபையைக் கூட்டினர்.நெகேமியா 8 ERV IRV TRV