1 பிறகு நான் சொன்னேன்: “இஸ்ரவேல் நாட்டின் தலைவர்களே! மற்றும் இஸ்ரவேல் நாட்டின் அதிகாரிகளே, இப்போது கவனியுங்கள் நீதி என்றால் என்ன என்று உங்களுக்கு தெரிய வேண்டும்.

2 ஆனால் நீங்கள் நல்லவற்றை வெறுத்து தீமையை நேசிக்கிறீர்கள். நீங்கள் ஜனங்களின் தோலை உரிப்பீர்கள். அவர்களின் எலும்புகளில் உள்ள தசையைப் பிடுங்குவீர்கள்.

3 நீங்கள் எனது ஜனங்களை அழித்தீர்கள். அவர்களின் தோலை நீக்குவீர்கள். அவர்களின் எலும்பை உடைத்தீர்கள். நீங்கள் அவர்களது சதையை பானையில் போடப்படும் மாமிசத்தைப்போன்று துண்டு பண்ணினீர்கள்.

4 எனவே, நீங்கள் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் அவர் பதில் சொல்லமாட்டார். இல்லை, கர்த்தர் உங்களிடமிருந்து தன் முகத்தை மறைத்துக்கொள்வார். ஏனென்றால் நீங்கள் தீயவற்றைச் செய்கிறீர்கள்!”

5 சில பொய்த் தீர்க்கதரிகள் கர்த்தருடைய ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். கர்த்தர் அந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றி இதனைச் சொல்கிறார். “இந்தத் தீர்க்கதரிசிகள் வயிற்றுக்காக உழைக்கிறவர்கள். உணவு கொடுக்கும் ஜனங்களுக்குச் சமாதானம் வரும் என்று உறுதி கூறுவார்கள். ஆனால் உணவு கொடுக்காதவர்களிடத்தில் அவர்களுக்கு எதிராக போர் வரும் என்று உறுதி கூறுவார்கள்.

6 “அதனால்தான் இது உங்களுக்கு இரவைப் போன்றது. அதனால்தான் உங்களுக்குத் தரிசனம் கிடைப்பதில்லை. எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதைப் பற்றிய தரிசனத்தை நீங்கள் பார்க்க முடியாது. எனவே இது உனக்கு அந்தகாரம் போன்றது. இந்தச் சூரியன் தீர்க்கதரிசிகள் மேல் அஸ்தமித்திருக்கிறது. அவர்களால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்க்க முடியாது. எனவே, இது அவர்களுக்கு அந்தகாரம் போன்றிருக்கும்.

7 தீர்க்கதரிசிகள் வெட்கப்படுகிறார்கள். திர் காலத்தை குறித்து சொல்கிறவர்கள் அவமானப்படுகிறார்கள். அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் தேவன் அவர்களோடு பேசமாட்டார்.”

8 ஆனால் கர்த்தருடைய ஆவி என்னை நன்மையினாலும், பலத்தினாலும், வல்லமையினாலும் நிரப்பியிருக்கிறது. ஏன்? அதனால் நான் யாக்கோபிடம் அவனது பாவங்களைச் சொல்லுவேன். ஆமாம், நான் இஸ்ரவேலிடம் அவனது பாவங்களைச் சொல்லுவேன்!

9 யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேலின் ஆள்வோர்களே, என்னைக் கவனியுங்கள். நீங்கள் முறையான வாழ்வை வெறுக்கீறீர்கள். ஏதாவது ஒன்று நேராக இருந்தால் நீங்கள் அதை கோணலாக மாற்றுகிறீர்கள்.

10 நீங்கள் ஜனங்களைக் கொன்று, சீயோனைக் கட்டுகிறீர்கள். ஜனங்களை ஏமாற்றி எருசலேமைக் கட்டுகிறீர்கள்.

11 எருசலேமில் உள்ள நீதிபதிகள் வழக்கு மன்றத்தில் யார் வெல்வார்கள் என்று சொல்ல உதவிட லஞ்சம் பெறுகிறார்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் ஜனங்களுக்குக் கற்பிப்பதற்கு முன்னால் பணம் பெறுகிறார்கள். ஜனங்களின் தீர்க்கதரிசிகளுக்கு எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் பணம் கொடுக்கவேண்டும். பிறகு அந்தத் தலைவர்கள் கர்த்தருடைய உதவியை எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள், “எங்களுக்கு தீயவை எதுவும் நடக்காது. கர்த்தர் எங்களோடு வாழ்கிறார்” என்றனர்.

12 தலைவர்களே, உங்களால், சீயோன் அழிக்கப்படும். இது உழப்பட்ட வயல் போன்றிருக்கும். எருசலேம் கற்களின் குவியலாய் மாறும். ஆலயம் உள்ள மலைகள் காட்டு முட்புதர்கள் அதிகம் வளர்ந்து வெறுமையான மலையாகும்.