மத்தேயு 17 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.4 பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார்.8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10 அப்பொழுது சீடர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று கேட்டார்கள்.11 அவர் மறுமொழியாக, “எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே.12 ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே, மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்” என்றார்.13 திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள்.14 அவர்கள் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் அவரை அணுகி அவர் முன் முழந்தாள் படியிட்டு,15 “ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான்.16 உம் சீடர்களிடம் அவனைக் கொண்டுவந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை” என்றார்.17 அதற்கு இயேசு, “நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்று கூறினார்.18 கொண்டுவந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனைவிட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான்.19 பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டார்கள்.20 இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்”21 [“இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது”*] என்றார்.22 கலிலேயாவில் சீடர்கள் ஒன்று திரண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்.23 அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால், அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்.24 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா* தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்டனர்.25 அவர், “ஆம், செலுத்துகிறார்” என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?” என்று கேட்டார்.26 “மற்றவரிடமிருந்துதான்” என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், “அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.27 ஆயினும், நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே, நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக்* காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து” என்றார்.மத்தேயு 17 ERV IRV TRV