லேவியராகமம் 3 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஒருவரது நேர்ச்சை நல்லுறவுப் பலியாய் இருந்தால், அது அவரது மாட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்தப்படும். காளையாகவோ பசுவாகவோ இருந்தால், அவர் பழுதற்ற ஒன்றை ஆண்டவருக்கு முன்பாகக் கொண்டு வருவார்.2 நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்துச் சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் அதனைக் கொல்லவேண்டும். அப்போது ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.3 நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப்பலியாகக் குடல்களைச் செலுத்த வேண்டியது: அவற்றைச் சுற்றிலுமுள்ள கொழுப்பு முழுவதும்4 இரு சிறுநீரகங்களும் அவற்றின்மேல் சிறு குடல்களிடத்தில் இருக்கும் கொழுப்பும் சிறுநீரகங்களோடு கல்லீரலின் மேல் இருக்கிற சவ்வும் ஆகும்.5 ஆரோனின் புதல்வர் அதைப் பலிபீடத்தில் நெருப்பின் மீது உள்ள கட்டைகளில் ஏற்கெனவே வைத்திருக்கும் எரிபலியோடு எரிப்பர். அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி ஆகும்.⒫6 ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக நல்லுறவுப் பலியைத் தம் ஆட்டு மந்தையிலிருந்து செலுத்தினால், அது பழுதற்ற கிடாயாகவோ ஆடாகவோ இருக்கட்டும்.7 ஒருவர் நேர்ச்சையாக ஆட்டைச் செலுத்தினால், அதை ஆண்டவர் திருமுன் கொண்டு வந்து,8 நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்து, சந்திப்புக் கூடாரத்தின் முன்பாக அதனைக் கொல்லவேண்டும். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.9 நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்துவது, அதன் கொழுப்பும், முதுகெலும்பின் அருகில் வெட்டியெடுத்த கொழுப்பு வாலும் குடல்களை மூடிய கொழுப்பும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,10 இரு சிறுநீரகங்களும், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பும், சிறுநீரகங்களை அடுத்து கல்லீரலின்மேல் உள்ள சவ்வும் ஆகும்.11 இவற்றைக் குருக்கள் பலிபீடத்தின்மேல் எரிப்பர். இது ஆண்டவருக்கு உகந்த நெருப்புப்பலி உணவாகும்.⒫12 நேர்ச்சையாக ஒருவர் வெள்ளாட்டுக் கிடாயைச் செலுத்தினால், அதை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து13 அதன் தலைமேல் தம் கையை வைத்துச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்வார். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.14 நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்த வேண்டியது; குடல்களை மூடிய கொழுப்பும் அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,15 இரு சிறுநீரகங்களும் அவற்றின் மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பும் சிறுநீரகங்களோடு கல்லீரல்மேல் இருக்கிற சவ்வும் ஆகும்.16 குருக்கள் பலிபீடத்தின்மேல் அவற்றை எரிப்பர். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி உணவாகும். கொழுப்பு முழுவதும் ஆண்டவருக்குரியது.17 கொழுப்பையோ இரத்தத்தையோ நீங்கள் உண்ணலாகாது. இது உங்கள் உறைவிடம் எங்கும் தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாத நியமமாக விளங்கும்.