1 எருசலேம் ஒரு காலத்தில் ஜனங்கள் நிறைந்த நகரமாக இருந்தது. ஆனால் இப்போது, இந்த நகரம் வனாந்தரமாயுள்ளது! எருசலேம் உலகத்தில் பெரிய நகரங்களுள் ஒன்றாயிருந்தது. ஆனால் இப்போது, அவள் ஒரு விதவையைப் போன்றிருக்கிறாள். அவள் ஒரு காலத்தில் நகரங்களில் இளவரசியைப் போன்றிருந்தாள். ஆனால் இப்பொழுது அடிமையாக்கப்பட்டிருக்கிறாள்.
2 அவள் இரவில் பரிதாபமாக அழுகிறாள். அவளது கண்ணீர் அவளின் கன்னங்களில் உள்ளது. இப்பொழுது யாருமே அவளைத் தேற்றுவாரில்லை. பல நாடுகள் அவளிடம் நட்புடனிருந்தன. இப்பொழுது யாரும் அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை. அவளது அனைத்து நண்பர்களும் அவளுக்கு முதுகைத் திருப்பிக் கொண்டனர். அவளது நண்பர்கள் அவளின் எதிரிகளானார்கள்.
3 யூதா மிகவும் துன்புற்றது. பிறகு, யூதா சிறையெடுக்கப்பட்டது. யூதா மற்ற நாடுகளுக்கு மத்தியில் வாழ்கிறது. ஆனால், அவள் ஓய்வைப் பெற்றிருக்கவில்லை. ஜனங்கள் அவளைத் துரத்திப் பிடித்தார்கள். அவர்கள் அவளைக் குறுகலான பள்ளத்தாக்குகளில் பிடித்தனர்.
4 சீயோனுக்குப் போகிற சாலைகள் மிகவும் துக்கப்படுகின்றன. ஏனென்றால், விடுமுறை நாட்களைக் கழிக்க எவரும் இனிமேல் வருவதில்லை. சீயோனின் அனைத்து வாசல்களும் அழிக்கப்பட்டன. சீயோனின் அனைத்து ஆசாரியர்களும் தவிக்கிறார்கள். சீயோனின் இளம் பெண்கள் கடத்திக் கொண்டுப்போகப்பட்டனர். இவை அனைத்தும் சீயோனுக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது.
5 எருசலேமின் பகைவர்கள் வெற்றி பெற்றார்கள். அவளது பகைவர்கள் வளமடைந்தனர். இது ஏன் நிகழ்ந்தது என்றால், கர்த்தர் அவளைத் தண்டித்தார். அவர் எருசலேமை அவளது பல பாவங்களுக்காகத் தண்டித்தார். அவளது பிள்ளைகள் வெளியேறிவிட்டனர். அவர்களது பகைவர்கள் அவர்களைக் கைப்பற்றி பிடித்துக்கொண்டு போனார்கள்.
6 சீயோன் மகளது அழகு போய்விட்டது. அவளது இளவரசர்கள் மேய்ச்சல் இடத்தைக் கண்டுபிடியாத மான்களைப் போலானார்கள். அவர்கள் பலமில்லாமல் அவர்கள் தம்மை துரத்துகிறவனை விட்டு ஓடிப்போனார்கள்.
7 எருசலேம் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறாள். எருசலேம் தான் பாதிக்கப்பட்டு தன் வீடுகளை இழந்த காலத்தை நினைக்கிறாள். அவள் கடந்த காலத்தில் தான் பெற்றிருந்த இனிய காரியங்களை எண்ணிப் பார்க்கிறாள். அவள் பழைய நாட்களில் பெற்ற சிறந்தவற்றை நினைத்துப் பார்க்கிறாள். அவள் தனது ஜனங்கள் எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்டதை எண்ணிப் பார்க்கிறாள். அவள் தனக்கு உதவ எவரும் இல்லாத நிலையை எண்ணுகிறாள். அவளை அவளது பகைவர்கள் பார்க்கும்போது சிரித்தார்கள். ஏனென்றால், அவள் அழிக்கப்பட்டாள்.
8 எருசலேம் மிக மோசமான பாவங்களைச் செய்தாள். எருசலேம் பாவம் செய்ததால், அவள் அழிக்கப்பட்ட நகரமானாள். ஜனங்கள் அவளது நிலையைக் கண்டு தங்களின் தலைகளை அசைத்து மறுதலிக்கிறார்கள். கடந்த காலத்தில் ஜனங்கள் அவளை மதித்தனர். இப்போது ஜனங்கள் அவளை வெறுக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் அவளை அவமானப்படுத்தினார்கள். எருசலேம் பெருமூச்சுவிட்டு பின்னிட்டுத் திரும்பினாள்.
9 எருசலேமின் ஆடைகள் அழுக்காயின. அவளுக்கு என்ன நிகழப்போகிறது என்பதைப் பற்றி அவள் எண்ணிப் பார்க்கவில்லை. பார் நான் எப்படி காயப்பட்டேன்! அவளது வீழ்ச்சி அதிசயமானது. அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை. “கர்த்தாவே! நான் எவ்வாறு காயப்பட்டேன் என்பதைப் பாரும். எனது பகைவன் தன்னை எவ்வளவு பெரியவனாக நினைக்கிறான் என்பதைப் பாரும்!” என்று சொன்னாள்.
10 பகைவன் தனது கையை நீட்டினான். அவன் அவளது இன்பமான அனைத்தையும் எடுத்துக் கொண்டான். உண்மையில், அவள் தனது ஆலயத்திற்குள் அயல்நாட்டவர்கள் நுழைவதைப் பார்த்தாள், கர்த்தாவே, அந்த ஜனங்கள் எங்கள் சபையில் சேரமுடியாது என்று நீர் சொன்னீர்!
11 எருசலேமின் அனைத்து ஜனங்களும் தவிக்கிறார்கள். அவர்கள் உணவுக்காக அலைகிறார்கள். அவர்கள் தங்கள் நல்ல பொருட்களை உணவுக்காக மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் உயிர் வாழ்வதற்காக இவற்றைச் செய்துகொண்டிருக்கிறார்கள். எருசலேம் சொல்கிறது: “கர்த்தாவே என்னைப் பாரும்! ஜனங்கள் என்னை எப்படி வெறுக்கிறார்கள் பாரும்.
12 சாலை வழியாகக் கடந்து செல்லும் ஜனங்களே, நீங்கள் எனக்காக கவலைப்படுகின்றவர்களாக தெரியவில்லை. ஆனால் என்னைப் பாருங்கள். எனது வலியைப்போன்று வேறுவலி உண்டோ? எனக்கு வந்திருக்கிற வலியைப்போன்று வேறுவலி இருக்கிறதா? கர்த்தர் என்னைத் தண்டித்திருக்கிறது போன்றவலி வேறு உள்ளதோ? அவர் தனது பெருங்கோபமான நாளில் என்னைத் தண்டித்திருக்கிறார்.
13 கர்த்தர் மேலிருந்து நெருப்பை அனுப்பினார், அந்த நெருப்பு எனது எலும்புகளுக்குள் சென்றது. அவர் எனது கால்களுக்கு வலையை விரித்தார். என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார். என்னைப் பாழ்நிலமாகப் பண்ணினார். நாள் முழுவதும் நான் நோயுற்றிருந்தேன்.
14 “எனது பாவங்கள் நுகத்தைப்போன்று கட்டப்பட்டுள்ளது, எனது பாவங்கள் கர்த்தருடைய கைகளில் கட்டப்பட்டுள்ளது. கர்த்தருடைய நுகம் என் கழுத்தில் இருக்கிறது. கர்த்தர் என்னை பலவீனமாக்கியுள்ளார். நான் எதிர்த்து நிற்க முடியாதபடி கர்த்தர் என்னை ஒடுக்குகிற ஜனங்களின் கையில் கொடுத்திருக்கிறார்.
15 கர்த்தர் எனது பலமான படை வீரர்களை மறுத்துவிட்டார். அவ்வீரர்கள் நகரத்திற்குள்ளே இருந்தனர். பிறகு கர்த்தர் ஒரு ஜனக்குழுவை எனக்கு எதிராக கொண்டு வந்தார். என்னுடைய இளம் வீரர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வந்தார். கர்த்தர் ஆலைக்குள்ளே திராட்சைப் பழங்களை மிதிப்பதுபோல யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.
16 “நான் இவை அனைத்தின் நிமித்தம் அழுகிறேன். எனது கண்களில் கண்ணீர் ஓடுகிறது. எனக்கருகில் ஆறுதல் எதுவுமில்லை. என்னைத் தேற்ற எவருமில்லை. எனது பிள்ளைகள் பாழான நிலத்தைப் போன்றிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இருக்கின்றனர். ஏனென்றால் பகைவர்கள் வென்றிருக்கின்றனர்.”
17 சீயோன் தனது கைகளை விரித்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை. கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார். கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு நகரத்தைச் சுற்றி வளைக்கும்படி கட்டளையிட்டார். எருசலேம் அசுத்தமாகியிருக்கிறது. அந்தப் பகைவர்களுக்கு மத்தியில் எருசலேம் அசுத்தமாயிற்று.
18 இப்போது எருசலேம் கூறுகிறாள்: “நான் கர்த்தருக்கு செவிகொடுக்க மறுத்தேன். எனவே, கர்த்தர் இவற்றையெல்லாம் செய்யும் உரிமையைப் பெற்றார். எனவே ஜனங்களே, கவனியுங்கள்! எனது வேதனையைப் பாருங்கள்! எனது இளம் பெண்களும் ஆண்களும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
19 நான் எனது நேசர்களை கூப்பிட்டேன். ஆனால் அவர்கள் என்னை மோசம் பண்ணினார்கள். எனது ஆசாரியர்களும், முதியவர்களும் இந்நகரத்தில் மரித்திருக்கின்றனர். அவர்கள் உணவுக்காக அலைந்திருக்கிறார்கள். அவர்கள் உயிரோடு வாழ விரும்பியிருக்கிறார்கள்.
20 “என்னைப் பாரும் கர்த்தாவே, நான் மிக்க துன்பத்தில் இருக்கிறேன்! எனது உள்மனம் கலங்குகிறது! எனது இதயம் மேலிருந்து கீழ்ப்பக்கம் திரும்பினதுபோல் உள்ளது! என்னுடைய கசப்பான அனுபவங்களின் காரணமாக என் இதயம் இப்படி உணர்கிறது! வீதிகளில் வாள் எனது பிள்ளைகளைக் கொன்றது. வீடுகளுக்குள் மரணம் இருந்தது.
21 “என்னைக் கவனியுங்கள்! ஏனென்றால், நான் தவித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஆறுதல் சொல்ல எவரும் இல்லை! எனது பகைவர்கள் எல்லாரும் என் துன்பத்தைக் கேள்விப்பட்டு, அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். நீர் இவற்றை எனக்குச் செய்ததால், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தண்டனைக்குரிய காலம் வரும் என்று நீர் சொன்னீர். எனது பகைவர்களைத் தண்டிப்பதாகச் சொன்னீர். நீர் என்ன சொன்னீரோ அதை இப்பொழுது செய்யும். நான் இப்பொழுது இருப்பதுபோன்று என் பகைவரும் இருக்கட்டும்.
22 “எனது பகைவர்கள் எவ்வளவு கொடியவர்கள் எனப்பாரும். எனது பாவங்களுக்கெல்லாம் எனக்கு எவ்வாறு செய்தீரோ அதே வழியில் அவர்களுக்கும் செய்யும். இதனைச் செய்யும். ஏனென்றால், நான் மேலும் மேலும் வேதனையடைகிறேன். ஏனென்றால், எனது இதயம் நோயுற்றிருக்கிறது.”
புலம்பல் 1 ERV IRV TRV