யோசுவா 8 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவர் யோசுவாவிடம், “அஞ்சாதே, கலங்காதே; உன்னுடன் எல்லாப் போர்வீரர்களையும் சேர்த்துக் கொள். ஆயியை நோக்கிப் புறப்பட்டுச்செல்! இதோ! ஆயியின் மன்னனையும், அதன் மக்களையும், அவனது நகரையும் அவனது நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன்.2 எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல் ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்வாய்; கைப்பற்றப்பட்ட பொருள்களையும் கால்நடைகளையும் உங்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள். நகருக்குப் பின்புறத்தில் ஒரு பதுங்கிடம் அமை” என்றார்.⒫3 அவ்வாறே, யோசுவாவும் எல்லாப் போர்வீரர்களும் ஆயிக்குப் புறப்படத் தயாராயினர். யோசுவா முப்பதாயிரம் வலிமை வாய்ந்த போர் வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினார்.4 அவர்களிடம், “பாருங்கள், நீங்கள் அந்நகருக்குப் பின்புறம் பதுங்கி இருங்கள். நகரிலிருந்து மிகவும் தொலையில் போய்விடாதீர்கள். அனைவரும் தயாராக இருங்கள்.5 நானும் என்னுடன் இருக்கும் மக்கள் எல்லாரும் நகருக்கு அருகில் வருவோம். நம்மைப் பிடிக்க முன்புபோல் அவர்கள் வெளியே வருவார்கள். அவர்கள்முன் நாங்கள் ஓடுவோம்.6 அவர்கள் எங்கள்பின் வெளியே வருவார்கள். நகரிலிருந்து வெகுதூரம் வரும்வரை அவர்களைக் கொண்டுவந்து விடுவோம். அவர்கள் “முன்புபோலத் தப்பி ஓடுகின்றார்கள்” என்று சொல்லிக்கொள்வார்கள். நாங்கள் அவர்கள் முன் ஓடுவோம்.7 நீங்கள் பதுங்கிடத்திலிருந்து எழுந்து நகரைக் கைப்பற்றுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அதை உங்கள் கையில் கொடுப்பார்.8 நீங்கள் நகரைக் கைப்பற்றியதும், அதை நெருப்பினால் எரியுங்கள். கடவுள் கூறியது போலவே செய்யுங்கள். உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கவனமாயிருங்கள்” என்றார்.9 யோசுவா அவர்களை அனுப்ப, அவர்கள் பதுங்கிடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் ஆயிக்கு மேற்காகப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் பதுங்கிக்கொண்டனர். யோசுவா இரவில் மக்கள் நடுவே தங்கினார்.⒫10 யோசுவா வைகறையில் எழுந்து மக்களை எண்ணினார். அவரும் இஸ்ரயேலின் முதியோரும் மக்களுக்கு முன்னே ஆயிக்குச் சென்றனர்.11 அவருடன் இருந்த போர்வீரர்கள் எல்லாரும் புறப்பட்டுச் சென்று, அந்நகருக்கு அருகில் வந்தனர். அவர்கள் ஆயிக்கு வடக்கே பாளையம் இறங்கினார்கள். அவர்களுக்கும் ஆயிக்கும் இடையில் ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.12 யோசுவா ஏறக்குறைய ஐயாயிரம் பேரைக் கூட்டிக் கொண்டு சென்று பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் நகருக்குக் கிழக்கே பதுங்கிடத்தில் தங்கச் செய்தார்.13 மக்கள் நகருக்கு வடக்காகவும், பள்ளத்தாக்கிற்குக் கிழக்காகவும் இருந்த இடத்தில் பாளையம் இறங்கினார்கள். யோசுவா அவ்விரவைப் பள்ளத்தாக்கில் கழித்தார்.14 ஆயியின் மன்னன் இதைக் கண்டதும், அந்நகர மக்கள் காலையில் விரைந்து எழுந்து இஸ்ரயேலுடன் போரிட வெளியே வந்தனர். அவனும் மக்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு, அராபாவுக்குமுன் வந்தனர். நகருக்குப் பின்புறம் எதிரிகள் பதுங்கியிருந்ததை அவன் அறியவில்லை.15 யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அவர்கள் முன் தோற்றவர்கள்போல் பாலைநிலம் நோக்கி ஓடினார்கள்.16 நகரில் இருந்த மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி அவர்களைத் துரத்தினர். அவர்கள் யோசுவாவின்பின் ஓட, நகரிலிருந்து பிரிக்கப்பட்டனர்.17 இஸ்ரயேலைத் துரத்தி ஆயி, பெத்தேல் இவற்றிலிருந்து வெளியே வராதவன் எவனும் இல்லை. அனைவரும் நகரைத் திறந்துவிட்டபடியே வெளியேறி இஸ்ரயேலின் பின்னே ஓடினர்.⒫18 ஆண்டவர் யோசுவாவிடம், “உன் கையிலுள்ள ஈட்டியை ஆயியை நோக்கி ஓங்கு. ஏனெனில், நான் அதை உன் கையில் ஒப்படைப்பேன்” என்றார். அவ்வாறே, யோசுவா தம் கையில் இருந்த ஈட்டியை ஆயியை நோக்கி ஓங்கினார்.19 பதுங்கியிருந்தவர் வேகமாகத் தம் இடத்திலிருந்து எழுந்தனர். யோசுவா கையை ஓங்கியதும் அவர்கள் வேகமாக ஓடிவந்து நகரினுள் புகுந்து அதைக் கைப்பற்றி விரைவாக அந்நகரை நெருப்பால் எரித்தனர்.20 ஆயியின் மக்கள் திரும்பிப் பார்த்தனர். இதோ நகரினின்று எழும்பிய புகை விண்ணை நோக்கிப் போவதைக் கண்டனர். எப்பக்கமும் தப்பியோட அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. பாலைநிலம் நோக்கி ஓடிய இஸ்ரயேல் மக்கள் தங்களைத் துரத்தியவர்மீது திரும்பிப் பாய்ந்தனர்.21 பதுங்கியிருந்தவர்கள் நகரைக் கைப்பற்றியதையும் ஆயியின் புகை மேலே எழும்புவதையும் கண்ட யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் திரும்பிச்சென்று ஆயி மக்களைத் தாக்கினார்.22 இந்நேரத்தில் பதுங்கியிருந்தோரும் நகரிலிருந்து வெளியே வந்து அவர்களைத் தாக்கினர். எனவே, இருபக்கமும் இஸ்ரயேலருக்கு இடையே அவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களுள் ஒருவனும் உயிரோடு தப்பிக்காதபடி அவர்கள் தாக்கப்பட்டனர்.23 இஸ்ரயேலர் ஆயியின் மன்னனை உயிருடன் பிடித்து யோசுவாவிடம் கொண்டுவந்தனர்.⒫24 இஸ்ரயேலர் ஆயி மக்கள் அனைவரையும் பாலை நிலத்தில் துரத்திச் சென்று கொன்றனர்; அனைவரையும் வாள் முனையில் அடியோடு அழித்தனர். பின்னர், இஸ்ரயேலர் அனைவரும் ஆயிக்குத் திரும்பி அதையும் வாள்முனைக்கு இரையாக்கினர்.25 ஆண்களும் பெண்களுமாக அன்று இறந்தவர் பன்னிரண்டாயிரம் பேர். ஆயியின் ஆண்கள் எல்லாருமே அன்று வீழ்ந்தனர்.26 ஆயியின் எல்லா மக்களையும் கொல்லும் வரை, யோசுவா ஈட்டியுடன் ஓங்கிய கையை மடக்கவில்லை.27 யோசுவாவுக்கு ஆண்டவர் கூறியபடியே, கால்நடையையும், நகரின் பொருள்களையும் மட்டும் இஸ்ரயேல் மக்கள் கொள்ளைப் பொருளாக எடுத்துக் கொண்டனர்.28 யோசுவா ஆயியைத் தீக்கிரையாக்கி, அது என்றென்றும் அழிவின் மேடாக இருக்குமாறு செய்தார்.29 அது இன்றுவரை அப்படியே உள்ளது. அவர் ஆயி மன்னனைத் தூக்கிலேற்றினார். கதிரவன் சாய்ந்தவுடன் யோசுவாவின் கட்டளைப்படி அவர்கள் அவன் உடலைத் தூக்கிலிருந்து இறக்கி, நகரின் நுழைவாயிலில் எறிந்தார்கள். அதன் மீது பெரும் கற்குவியலை எழுப்பினர். அது இன்றுவரை உள்ளது.30 இதன்பின் யோசுவா இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏபால் மலையில் ஒரு பீடம் எழுப்பினார்.31 அது ஆண்டவரின் ஊழியராகிய மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடி அமைந்தது. மோசேயின் திருச்சட்டநூலில் எழுதியுள்ளது; 'இரும்புக் கருவிகளைக் கொண்டு செதுக்காத முழுக் கற்களால் பீடம் அமைக்கப்பட வேண்டும்.' அவர்கள் அதன்மீது ஆண்டவருக்கு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தனர்.32 அங்குக் கற்களின் மீது மோசேயின் கட்டளையை யோசுவா இஸ்ரயேலர் முன்னிலையில் எழுதினார்.33 இஸ்ரயேல் மக்களும் வெளிநாட்டவரும் முதியோர், அலுவலர், நீதிபதிகளுடன் பேழைக்கு முன்னே இருமருங்கிலும் நின்றுகொண்டிருந்தனர். லேவியக் குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஏந்திக்கொண்டிருந்தனர். பாதிப்பேர் கெரிசிம் மலை முன்பும், பாதிப்பேர் ஏபால் மலை முன்பும், கடவுளின் ஊழியராகிய மோசே ஏற்கெனவே கட்டளையிட்டபடி, இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி தர நின்றுகொண்டிருந்தனர்.34 அதன்பின் திருச்சட்டநூலில் எழுதியுள்ள அனைத்து ஒழுங்குகளின்படி ஆசிகளையும், சாபங்களையும், சட்டத்தின் எல்லா நியமங்களையும் அவர் வாசித்தார்.35 மோசே கட்டளையிட்ட எல்லாவற்றினின்றும் இஸ்ரயேல் சபைமுன் யோசுவா வாசிக்காதது எதுவுமில்லை. அப்போது பெண்கள், குழந்தைகள், அவர்களிடையே வாழ்ந்த அயலார் ஆகியோரும் உடன் இருந்தனர்.யோசுவா 8 ERV IRV TRV