யோவான் 16 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 “நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன்.2 உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது.3 தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள்.4 இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்.”⒯“தொடக்கத்திலேயே நான் இவற்றை உங்களிடம் சொல்லவில்லை; ஏனெனில், நான் உங்களோடு இருந்தேன்.5 இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால், உங்களுள் எவரும் ‘நீர் எங்கே போகிறீர்?’ என்று என்னிடம் கேட்காமலேயே6 நான் சொன்னவற்றைக் குறித்து துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்.7 நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.8 அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்.9 பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் ,என்னிடம் அவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.10 நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில், நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காண மாட்டீர்கள்.11 தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில், இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்.⒫12 “நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால், அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.16 “இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்.”17 அப்போது அவருடைய சீடருள் சிலர், “‘இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்றும் ‘நான் தந்தையிடம் செல்கிறேன்’ என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?” என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.18 “இந்தச் ‘சிறிது காலம்’ என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே” என்றும் பேசிக் கொண்டனர்.⒫19 அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்பவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது: “‘இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.20 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.21 பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால், பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்.22 இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால், நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.23 அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.24 இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.25 “நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால், காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப்பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன்.26 அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது ‘உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்’ என நான் சொல்லமாட்டேன்.27 ஏனெனில், தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார்.28 நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.”29 இதைக் கேட்ட அவருடைய சீடர்கள், “இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர்.30 உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்” என்றார்கள்.⒫31 இயேசு அவர்களைப் பார்த்து, “இப்போது நம்புகிறீர்களா!32 இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டு விடுவீர்கள். ஆயினும், நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்.33 என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார்.யோவான் 16 ERV IRV TRV