யோபு 27 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 பின்பு யோபு தன் விரிவுரையைத் தொடர்ந்தான். அவன்,
2 “உண்மையாகவே, தேவன் உயிரோடிருக்கிறார். தேவன் உண்மையாக வாழ்வதைப்போல, அவர் உண்மையாக என்னோடு அநீதியாய் நடக்கிறார். ஆம், சர்வ வல்லமையுள்ள தேவன் என் வாழ்க்கையைக் கசப்பாக்கினார்.
3 ஆனால் என்னில் உயிருள்ளவரையிலும் தேவனுடைய உயிர்மூச்சு என் மூக்கில் இருக்கும் மட்டும்
4 என் உதடுகள் தீயவற்றைப் பேசாது, என் நாவு ஒருபோதும் பொய் கூறாது.
5 நீங்கள் சொல்வது சரியென நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் மரிக்கும் நாள் மட்டும், நான் களங்கமற்றவன் என்று தொடர்ந்து சொல்வேன்.
6 நான் செய்த நல்லவற்றைத் கெட்டியாகப் (இறுகப்) பிடித்துக்கொள்வேன். நியாயமாக நடப்பதை விட்டுவிடமாட்டேன். நான் வாழும்வரை என் மனச்சாட்சி என்னை உறுத்தாது.
7 ஜனங்கள் எனக்கெதிராக எழுந்து நிற்கிறார்கள். தீயோர் தண்டிக்கப்படுவதைப் போல என் பகைவர்கள் தண்டனை பெறுவார்கள் என நம்புகிறேன்.
8 ஒருவன் தேவனைப்பற்றிக் கவலைப்படாவிட்டால், அவன் மரிக்கும்போது, அவனுக்கு ஒரு நம்பிக்கையுமில்லை. தேவன் அவன் உயிரை எடுக்கும்போது, அம்மனிதனுக்கு நம்பிக்கை எதுவுமில்லை.
9 அத்தீயவனுக்குத் தொல்லைகள் விளையும், அவன் தேவனை நோக்கி உதவி வேண்டுவான். ஆனால் தேவன் அவனுக்குச் செவிசாய்க்கமாட்டார்!
10 சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பேசுவதில் அவன் களிப்படைந்திருக்க வேண்டும். எப்போதும் அம்மனிதன் தேவனிடம் ஜெபம் செய்திருக்க வேண்டும்.
11 “தேவனுடைய வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய திட்டங்களை நான் உங்களிடம் மறைக்கமாட்டேன்.
12 உங்கள் சொந்தக் கண்களால் தேவனுடைய வல்லமையைக் கண்டிருக்கிறீர்கள். எனவே அந்தப் பயனற்ற காரியங்களை நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்?
13 தீயோருக்காக தேவன் திட்டமிட்டது இதுவே சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து கொடியோர் இதையே பெறுவார்கள்.
14 தீயவனுக்குப் பல பிள்ளைகள் இருக்கலாம். ஆனால் அவனது பிள்ளைகள் மரிப்பார்கள். தீயவனின் பிள்ளைகளுக்கு உண்பதற்கு போதிய உணவு இராது.
15 அவனது எல்லாப் பிள்ளைகளும் மரிப்பார்கள். அவனது விதவை அவனுக்காகத் துக்கப்படமாட்டாள்.
16 தீயோனுக்குத் துகளைப்போன்று மிகுதியான வெள்ளி கிடைக்கலாம். களிமண் குவியலைப்போன்று அவனிடம் பல ஆடைகள் இருக்கலாம்.
17 ஆனால் அவனது ஆடைகள் நல்லவனுக்குக் கிடைக்கும். களங்கமற்ற ஜனங்கள் அவனது வெள்ளியைப் பெறுவார்கள்.
18 தீயவன் ஒரு வீட்டைக் கட்டலாம், ஆனால் அது நீண்டகாலம் நிலைக்காது. அது ஒரு சிலந்தி வலையைப்போன்றும், காவலாளியின் கூடாரத்தைப்போன்றும் இருக்கும்.
19 தீயவன் ஒருவன் படுக்கைக்குப் போகும்போது, செல்வந்தனாக இருக்கலாம். ஆனால் அவனது கண்களை அவன் திறக்கும்போது, எல்லா செல்வங்களும் மறைந்திருக்கும்.
20 அவன் அச்சமடைவான். அது வெள்ளப் பெருக்கைப் போன்றும், புயல்வீசி எல்லாவற்றையும் அடித்துச் செல்வதைப்போன்றும் இருக்கும்.
21 கிழக்குக் காற்று அவனை அடித்துச் செல்லும், அவன் அழிந்துபோவான். புயல் அவன் வீட்டிலிருந்து அவனை இழுத்துச் செல்லும்.
22 புயலின் வல்லமையிலிருந்து தீயவன் ஓடிப்போக முயல்வான் ஆனால், இரக்கமின்றி புயல் அவனைத் தாக்கும்.
23 தீயவன் ஓடிப்போகும்போது, மனிதர்கள் கைகொட்டுவார்கள். தீயவன் வீட்டைவிட்டு ஓடுகிறபோது, அவர்கள் அவனைப் பார்த்து சீட்டியடிப்பார்கள்.”