எரேமியா 42 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 அவர்கள் கெருத் கிம்காமினில் இருக்கும் போது, யோகனானும் ஓசாயாவின் மகனான யெசனியாவும் தீர்க்கதரிசி எரேமியாவிடம் சென்றனர். எல்லாப் படை அதிகாரிகளும் யோகனான் மற்றும் யெசனியாவுடன் சென்றனர். முக்கியத்துவம் குறைந்த ஜனங்களில் இருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை அனைத்து ஜனங்களும் எரேமியாவிடம் சென்றனர்.
2 அந்த ஜனங்களனை வரும் எரேமியாவிடம், “எரேமியா, நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை தயவுசெய்துக் கேளும். யூதாவின் வம்சத்திலிருந்து தப்பிப் பிழைத்த இந்த ஜனங்களுக்காக உமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்யும். எரேமியா, எங்களில் நிறைய பேர் மீதியாக இருக்கவில்லை என்பதை நீர் பார்க்கமுடியும். ஒரு காலத்தில் நாங்கள் ஏராளமாக இருந்தோம்.
3 எரேமியா, நாங்கள் எங்கே போக வேண்டும், நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று உமது தேவனாகிய கர்த்தர் என்ன கூறுகிறார் என்று கர்த்தரிடம் ஜெபம்செய்துக்கேளும்” என்றனர்.
4 பிறகு, எரேமியா தீர்க்கதரிசி, “நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்கிறேன். நீங்கள் கேட்டுக்கொண்டபடி நான் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்கிறேன். கர்த்தர் சொல்கிற எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்வேன். நான் உங்களிடமிருந்து எதையும் மறைக்கமாட்டேன்” என்றான்.
5 பிறகு, அந்த ஜனங்கள் எரேமியாவிடம், “நாங்கள், உமது தேவனாகிய கர்த்தர் சொன்னபடி செய்யாவிட்டால், பிறகு கர்த்தரே எங்களுக்கு எதிரான உண்மையான நம்பிக்கையுள்ள சாட்சியாக இருப்பார் என்று நம்புவோம். உமது தேவனாகிய கர்த்தர் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவே உம்மை அனுப்பியுள்ளார் என அறிகிறோம்.
6 நாங்கள் அச்செய்தியை விரும்புகிறோமா அல்லது அச்செய்தியை விரும்பவில்லையா என்பது ஒரு பொருட்டன்று. நமது தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் அடிபணிவோம். நாங்கள் உம்மை எங்களுக்கான செய்தியை அறியவே அனுப்புகிறோம். அவர் என்ன சொல்கிறாரோ அதற்கு நாங்கள் அடிபணிவோம். பிறகு எங்களுக்கு நல்லவை நடக்கும். ஆம் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணிவோம்” என்றனர்.
7 பத்து நாட்கள் முடிந்ததும், கர்த்தரிடமிருந்து செய்தி எரேமியாவிற்கு வந்தது.
8 பிறகு எரேமியா, கரேயாவின் மகனான யோகனானையும் அவனுடனிருந்த படை அதிகாரிகளையும் சேர்ந்து அழைத்தான். எரேமியா, முக்கியத்துவம் குறைந்த ஆட்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஆட்கள்வரை அனைத்து ஜனங்களையும் அழைத்தான்.
9 பிறகு அவர்களிடம் எரேமியா, “இஸ்ரவேலர்களின் தேவனாகிய ஆண்டவர் கூறுவது இதுதான், நீங்கள் என்னை அவரிடம் அனுப்பினீர்கள். நான் தேவனோடு வழக்காடி நான் அவரிடத்தில் நீங்கள் கேட்க விரும்பியதை கேட்டேன். கர்த்தர் சொல்கிறது இதுதான்.
10 ‘ஜனங்களாகிய நீங்கள் யூதாவில் தங்கினால் நான் உங்களைப் பலமுள்ளவர்களாகச் செய்வேன். நான் உங்களை அழிக்கமாட்டேன். நான் உங்களை நடுவேன். நான் உங்களைத் தள்ளமாட்டேன். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால், நான் உங்களுக்கு ஏற்படுத்திய பயங்கரமான செயல்களுக்காக வருத்தப்படுகிறேன்.
11 இப்போது நீங்கள் பாபிலோன் அரசனுக்குப் பயப்படுகிறீர்கள். ஆனால் பாபிலோன் அரசனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்’ இதுதான் கர்த்தருடைய வார்த்தை, ‘ஏனென்றால் நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களைக் காப்பாற்றுவேன். நான் உங்களை விடுவிப்பேன். நான் உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவிப்பேன்.
12 நான் உங்களிடம் தயவாய் இருப்பேன். பாபிலோனின் அரசனும் உங்களை இரக்கத்தோடு நடத்துவான். அவன் உங்களை திரும்பவும் உங்கள் நாட்டுக்குக் கொண்டு வருவான்.’
13 ஆனால் நீங்கள், ‘நாங்கள் யூதாவில் தங்கமாட்டோம்’ என்று சொல்லலாம். அவ்வாறு நீங்கள் சொன்னால் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணிய மறுக்கிறீர்கள்.
14 நீங்கள், ‘இல்லை. நாங்கள் போய் எகிப்தில் வாழ்வோம். எகிப்திலே நாங்கள் போரினிமித்தமாக கவலைப்படமாட்டோம். நாங்கள் எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கமாட்டோம். எகிப்தில் நாங்கள் பசியோடு இருக்கமாட்டோம்’ என்று சொல்லலாம்.
15 நீங்கள் அவ்வாறு சொன்னால், பிறகு கர்த்தர் சொல்லும் வார்த்தையைக் கேளுங்கள். யூதாவில் உயிர் பிழைத்தவர்களே கேளுங்கள். இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது: ‘நீங்கள் எகிப்துக்குப் போய் வாழ வேண்டும் என்று முடிவு செய்தால் பிறகு இவை எல்லாம் நிகழும்.
16 நீங்கள் போரின் வாளுக்கு அஞ்சுகிறீர்கள். ஆனால் இது அங்கே உங்களைத் தோற்கடிக்கும். நீங்கள் பசியைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். ஆனால் எகிப்தில் நீங்கள் பசியோடு இருப்பீர்கள். நீங்கள் அங்கே மரிப்பீர்கள்.
17 எகிப்துக்குச் செல்லவேண்டும் என்று முடிவு செய்த ஒவ்வொருவரும் வாள் அல்லது பசி அல்லது பயங்கர நோயால் மரிப்பார்கள். எகிப்துக்குப் போகிற ஒருவனும் உயிர் பிழைக்கமாட்டான். நான் அவர்களுக்குக் கொண்டு வருகிற பயங்கரமானவற்றிலிருந்து ஒருவன் கூட தப்பிக்கமாட்டான்.’
18 “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘எருசலேமிற்கு எதிராக கோபத்தை நான் காண்பித்தேன். எருசலேமில் வாழ்ந்த ஜனங்களை நான் தண்டித்தேன். அதே வழியில் எகிப்திற்குச் செல்கிற ஒவ்வொருவரிடமும் எனது கோபத்தைக் காட்டுவேன். மற்றவர்களுக்குத் தீமை ஏற்படுவதைப்பற்றி ஜனங்கள் பேசும்போது உங்களை சான்றாகக் காட்டுவார்கள். நீங்கள் ஒரு சாப வார்த்தைப்போன்று ஆவீர்கள். ஜனங்கள் உங்களை எண்ணி அவமானம் அடைவார்கள். ஜனங்கள் உங்களை நிந்திப்பார்கள். நீங்கள் யூதாவை மீண்டும் பார்க்கமாட்டீர்கள்.’
19 “யூதாவில் உயிர் பிழைத்தவர்களே, கர்த்தர் உங்களுக்கு, ‘எகிப்திற்குப் போக வேண்டாம்’ என்று நான் இப்பொழுது எச்சரிக்கிறேன்.
20 நீங்கள் தவறு செய்துக்கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் மரணத்துக்குக் காரணம் ஆகும். நீங்கள் என்னிடம், ‘எங்களுக்காக எங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய். கர்த்தர் என்ன செய்யவேண்டுமென்று சொல்கிறாரோ அனைத்தையும் சொல். நாங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறோம்’ என்றீர்கள்.
21 எனவே இன்று, நான் உங்களிடம் கர்த்தருடைய செய்தியைச் சொல்லியிருக்கிறேன். ஆனால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. அவர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்து நீங்கள் செய்யவேண்டியவற்றை உங்களுக்கு சொல்ல சொன்னதை எல்லாம் நீங்கள் செய்யாமலிருக்கிறீர்கள்.
22 எனவே, இப்போது நீங்கள் உறுதியாக புரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் எகிப்திற்குச் சென்று வாழ விரும்புகிறீர்கள். ஆனால் எகிப்தில் இவை எல்லாம் உங்களுக்கு ஏற்படும். நீங்கள் வாள் அல்லது பசி அல்லது பயங்கரமான நோயால் மரிப்பீர்கள்” என்றான்.