எரேமியா 26 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு:2 “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்று கொண்டு, அங்கு வழிபாடு செலுத்தவரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே.3 ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீயவழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக் கொள்வேன்’.⒫4 நீ அவர்களிடம் சொல்லவேண்டியது: ‘ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும்,5 நீங்கள் செவி சாய்க்காதபொழுதும் நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பி வைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில்,6 இக்கோவிலைச் சீலோவைப் போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்.”⒫7 ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர்.8 மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, “நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்” என்று கூச்சலிட்டனர்.9 “இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் ஏரேமியாவைச் சூழ்ந்து கொண்டனர்.⒫10 யூதாவின் தலைவர்கள் இதைப்பற்றிக் கேள்வியுற்று அரண்மனையிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்று அங்கே “புதுவாயில்” அருகே அமர்ந்தார்கள்.11 குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, “இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்; ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்” என்று முறையிட்டனர்.⒫12 அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது: “நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பியுள்ளார்.13 எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்ளுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனைபற்றி ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொள்வார்.14 இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன். நல்லது எனவும் நேரியது எனவும் நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள்.15 ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்; என்னை நீங்கள் கொல்வீர்களாகில், மாசற்ற இரத்தப்பழி உங்கள் மேலும், இந்நகர் மேலும், அதில் குடியிருப்போர் மேலும் உறுதியாக வந்து விழும். ஏனெனில் இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்.”⒫16 பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும் குருக்களையும் இறைவாக்கினரையும் நோக்கி, “கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்; ஏனெனில் நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே இவன் நம்மிடம் பேசியுள்ளான்” என்றார்கள்.17 உடனே நாட்டின் மூப்பர்களுள் சிலர் எழுந்து, மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது:18 “யூதாவின் அரசரான எசேக்கியாவின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்கா இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தார். அவர் யூதா மக்கள் எல்லாரையும் நோக்கி, ‘படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: வயல்வெளியைப் போல் சீயோன் உழப்படும்; எருசலேம் பாழடைந்து மண்மேடாக மாறும். கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்,’ என்று சொன்னார்.19 இதற்காக யூதாவின் அரசரான எசேக்கியாவும் யூதா நாடு முழுவதும் அவரைக் கொன்று போட்டார்களா? எசேக்கியா ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய உதவியைக் கெஞ்சி மன்றாடவில்லையா? இதனால் ஆண்டவர் அவர்களுக்கு அறிவித்திருந்த தண்டனையைக் குறித்துத் தமது மனத்தை மாற்றிக்கொள்ளவில்லையா? நாமோ நமக்கே பெரும் தீங்கை விளைவித்துக்கொள்ளப் போகிறோம்.⒫20 ஆண்டவர் பெயரால் இறைவாக்கு உரைத்த இன்னொருவரும் இருந்தார்; அவர் கிரியத்து எயாரிமைச் சார்ந்த செமாயாவின் மகன் உரியா ஆவார். அவரும் எரேமியாவைப் போலவே இந்நகருக்கும் இந்நாட்டுக்கும் எதிராக இறைவாக்கு உரைத்திருந்தார்.21 யோயாக்கிம் அரசரும் அவருடைய படைவீரர்களும் தலைவர்கள் அனைவரும் உரியா சொன்னதைக் கேட்டனர். உடனே அரசர் அவரைக் கொல்ல முயன்றார். ஆனால் உரியா அதை அறிந்து அச்சமுற்று எகிப்துக்குத் தப்பி ஓடிவிட்டார்.22 அரசர் யோயாக்கிமோ அக்போரின் மகன் எல்னாத்தானையும், அவனோடு சில ஆள்களையும் எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.23 அவர்கள் எகிப்திலிருந்து உரியாவை இழுத்து வந்து, அரசர் யோயாக்கிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அரசரோ அவரை வாளுக்கு இரையாக்கி, அவருடைய சடலத்தைப் பொதுமக்கள் கல்லறையில் வீசி எறிந்தார்.”⒫24 ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.