1 “தாகமாயுள்ள ஜனங்களே! தண்ணீரைக் குடிக்க வாருங்கள்! உங்களிடம் பணம் இல்லாவிட்டால் வருந்தவேண்டாம். வாருங்கள் உங்கள் வயிறு நிறையும்வரை குடியுங்கள், உண்ணுங்கள்! பாலுக்கும் திராட்சைரசத்திற்கும் விலையில்லை.
2 உண்மையான உணவாக இல்லாதவற்றுக்காக ஏன் நீ உன் பணத்தை வீணடிக்கிறாய்? உன்னை உண்மையாகவே திருப்தி செய்யாத வேலைகளை ஏன் நீ செய்கிறாய்? என்னை மிக நெருக்கமாக கவனி! நீ மிக நல்ல உணவை உண்பாய். உன் ஆத்துமாவைத் திருப்திப்படுத்தும் உணவை உண்டு மகிழலாம்.
3 நான் சொல்லுகிறவற்றை நெருக்கமாகக் கவனி. என்னைக் கவனி. அதனால் உன் ஆத்துமா வாழும். என்னிடம் வா. நான் என்றென்றும் தொடரும் ஒரு உடன்படிக்கையை உன்னோடு செய்வேன். நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையைப் போன்று அது இருக்கும். நான் அவனை நேசிப்பேன், என்றென்றும் அவனுக்கு வேண்டியவனாக இருப்பேன் என்று தாவீதுக்கு வாக்குறுதிச் செய்தேன். நீ அந்த உடன்படிக்கையை நம்பலாம்.
4 அனைத்து நாடுகளுக்கும் எனது வல்லமையின் சாட்சியாக நான் தாவீதைப் படைத்தேன். பல நாடுகளுக்கு அவன் ஒரு தலைவனாகவும், தளபதியாகவும் வருவான் என்று நான் வாக்களித்தேன்.”
5 உனக்குத் தெரியாத நாடுகள் பல உள்ளன. ஆனால் அந்த நாடுகளை அழைப்பாய். அந்த நாடுகள் உன்னை அறியாது. ஆனால் அவை உன்னிடம் ஓடிவரும். இது நடக்கும், ஏனென்றால், உனது தேவனாகிய கர்த்தர் இதை விரும்புகிறார். இது நடக்கும், ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன்னை மகிமைப்படுத்துகிறார்.
6 இது மிக தாமதமாவதற்கு முன்னால் நீ கர்த்தரைத் தேட வேண்டும். அவர் அருகில் இருக்கும்போதே, இப்பொழுது நீ அவரை அழைக்கவேண்டும்.
7 கெட்டவர்கள் கெட்ட வழியில் செல்வதை நிறுத்தவேண்டும். அவர்கள் தீயவற்றை நினைப்பதை நிறுத்தவேண்டும். அவர்கள் மீண்டும் கர்த்தரிடம் வரவேண்டும். பிறகு கர்த்தர் அவர்களுக்கு ஆறுதல் தருவார். அந்த ஜனங்கள் கர்த்தரிடம் வருவார்கள் ஏனென்றால், நமது தேவன் அவர்களை மன்னிக்கிறார்.
8 கர்த்தர் கூறுகிறார், “உங்களது சிந்தனைகள் எனது சிந்தனைகளைப் போன்று இல்லை. உனது வழிகள் எனது வழிகளைப் போன்றில்லை.
9 வானங்கள் பூமியைவிட உயரமானவை. அதேபோன்று, என் வழிகள் உன் வழிகளைவிட உயர்வானவை. என் சிந்தனைகள் உன் சிந்தனைகளைவிட உயர்வானவை” கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார்.
10 “வானத்திலிருந்து மழையும் பனியும் பெய்கிறது. அவை தரையைத் தொட்டுத் குளிரச் செய்யும்வரை, திரும்ப வானத்துக்குப் போகாது. பிறகு தரையில் தாவரங்கள் முளைத்து வளரும். இத்தாவரங்கள் விவசாயிகளுக்கு விதைகளை உருவாக்கும். ஜனங்கள் இந்தத் தானியங்களைப் பயன்படுத்தி தமக்கு உண்ண அப்பத்தைத் தயார் செய்கிறார்கள்.
11 இதே வழியில், எனது வார்த்தைகள் என் வாயை விட்டு வரும். அவை எதையும் செய்யாமல் வெறுமனே என்னிடம் திரும்பாது. எனது வார்த்தைகள் எதைச் செய்யவேண்டுமென்று நான் அனுப்புகிறேனோ அவற்றைச் செய்யும்! எனது வார்த்தைகள் எதைச் செய்ய நான் அனுப்பினேனோ அதை வெற்றிகரமாகச் செய்யும்!
12 “எனது வார்த்தைகள் மகிழ்ச்சியோடு வெளியே சென்று சமாதானத்தைக் கொண்டுவரும். மலைகளும் குன்றுகளும் மகிழ்ச்சியோடு ஆடத்தொடங்கும். வயலிலுள்ள மரங்கள் எல்லாம் தம் கைகளைத் தட்டும்.
13 முட்செடிப் புதருக்குப் பதிலாக அவ்விடங்களில் பருத்த தேவதாரு மரங்கள் வளரும். களைகள் இருந்த இடத்தில் பசுமையான மரங்கள் வளரும். இவை கர்த்தருடைய புகழைப் பரப்பும். கர்த்தர் வல்லமையுடையவர் என்பதற்கு இவை சான்றாகும். இந்தச் சான்றுகள் ஒருபோதும் அழியாது.”
ஏசாயா 55 ERV IRV TRV