ஏசாயா 21 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 கடல் வனாந்தரத்தைப் பற்றிய துயரச் செய்தி: வனாந்தரத்திலிருந்து ஏதோ வந்து கொண்டிருக்கிறது. இது நெகேவிலிருந்து வந்து கொண்டிருக்கும் காற்று போல் உள்ளது. இது பயங்கரமான நாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
2 ஒரு பயங்கரமான நிகழ்ச்சி நடக்கப்போவதை நான் பார்த்திருக்கிறேன், துரோகிகள் உனக்கு எதிராகத் திரும்பியதை நான் பார்க்கிறேன். ஜனங்கள் உன் செல்வத்தை எடுத்துக்கொள்வதை நான் பார்க்கிறேன். ஏலாமே! போய் ஜனங்களுக்கு எதிராகப் போரிடு! மேதியாவே! நகரத்தை சுற்றி உன் படைகளை நிறுத்தி அதனைத் தோற்கடி! இந்த நகரத்தில் உள்ள கெட்டவற்றையெல்லாம் முடித்து வைப்பேன்.
3 அந்தப் பயங்கரமானவற்றை நான் பார்த்தேன். இப்பொழுது நான் பயப்படுகிறேன். பயத்தால் என் வயிறு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வலியானது பிரசவ வலி போன்றுள்ளது. நான் கேள்விப்பட்ட செய்திகள் எல்லாம் என்னை அச்சம்கொள்ளச் செய்கிறது. நான் பார்த்தவை எல்லாம் என்னைப் பயத்தால் நடுங்கச் செய்கிறது.
4 நான் கவலைப்படுகிறேன். நான் பயத்தால் நடுங்கிக்கொண்டிருக்கிறேன். என் இன்பமான மாலைப்பொழுது பயமுள்ள இரவாயிற்று.
5 எல்லாம் நன்றாக இருக்கிறது என்று ஜனங்கள் நினைத்தனர். “மேசையைத் தயார் செய்யுங்கள்! சாப்பிடுங்கள், குடியுங்கள்!” என்று ஜனங்கள் சொன்னார்கள். அதே நேரத்தில் படை வீரர்கள், “காவல்காரரை நிறுத்துங்கள்! அதிகாரிகளே எழுந்து உங்கள் கேடயங்களைப் பளபளப்பாக்குங்கள்!” என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.
6 எனது ஆண்டவர் என்னிடம், “போய், நகரத்தைக் காவல் செய்ய ஒருவனைக் கண்டுபிடி. அவன் தான் பார்ப்பதையெல்லாம் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.
7 காவல்காரன் குதிரைவீரர்கள், கழுதைகள் அல்லது ஒட்டகங்கள் ஆகியவற்றின் வரிசையைப் பார்த்தால் அவன் கவனமாக மிகக்கவனமாக உற்றுக்கேட்க வேண்டும்” என்று சொன்னார்.
8 பிறகு, ஒரு நாள், காவல்காரன் “சிங்கம்” என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்தான். “அவன், என் ஆண்டவனே! ஒவ்வொரு நாளும் நான் காவல் கோபுரத்தில் காத்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு இரவிலும் நான் நின்றுகொண்டு காவல் செய்தேன்.
9 பாருங்கள்! அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்! நான் மனிதர்கள் மற்றும் குதிரை வீரர்களின் வரிசைகளைப் பார்க்கிறேன்” என்று காவல்காரன் சொல்லிக் கொண்டிருந்தான். பிறகு, ஒரு தூதுவன், “பாபிலோன் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. பாபிலோன் தரையில் விழுந்துவிட்டது. அங்குள்ள பொய்த் தெய்வங்களின் சிலைகள் எல்லாம் தரையில் வீசப்பட்டு துண்டுகளாக உடைக்கப்பட்டிருக்கின்றன” என்று சொன்னான்.
10 ஏசாயா, “எனது ஜனங்களே! இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து நான் கேட்ட, எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் மாவு எந்திரத்தில் போடப்பட்ட தானியம் போன்று அரைக்கப்படுவீர்கள்.”
11 தூமா பற்றி துயரச் செய்தி. யாரோ ஒருவன் என்னை ஏதோமிலிருந்து அழைத்தான். அவன், “காவல்காரனே! இரவு எவ்வளவு போயிற்று? இரவு முடிய இன்னும் எவ்வளவு நேரமிருக்கிறது?” என்று கேட்டான்.
12 அந்தக் காவல்காரன், “விடிற்காலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் மீண்டும் இரவு வரும். கேட்பதற்கு ஏதாவது இருந்தால், பிறகு மீண்டும் வந்து கேளுங்கள்” என்றான்.
13 அரேபியா பற்றிய துயரமான செய்தி. அரேபியாவின் வனாந்திரத்தில் திதானிய பயணிகள் சில மரங்களின் அருகில் இரவில் தங்கினார்கள்.
14 சில தாகமுள்ள பயணிகளுக்கு அவர்கள் தண்ணீரைக் கொடுத்தார்கள். தேமாவின் ஜனங்கள் பயணிகளுக்கு உணவு கொடுத்தார்கள்.
15 ஜனங்கள் வாள்களுக்கும், வில்லுகளுக்கும் தப்பி ஓடுகிறார்கள். அந்த வாள்கள் அழிக்கத் தயாராயிருந்தன. அந்த வில்லுகள் எய்யப்பட தயாராயிருந்தன. கடினமான போரிலிருந்து அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
16 எனது கர்த்தராகிய ஆண்டவர், நடக்கப் போகிறவற்றையெல்லாம் எனக்குச் சொன்னார். “ஒரு ஆண்டில் (கூலிக்காரனுடைய கால எண்ணிக்கையைப்போன்று) கேதாருடைய மகிமை எல்லாம் போய்விடும்.
17 அந்த நேரத்தில், மிகச் சில வில் வீரர்களும் கேதாரின் சிறந்த படை வீரர்கள் மட்டுமே உயிரோடு விடப்படுவார்கள்” என்று கர்த்தர் சொன்னார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவற்றையெல்லாம் எனக்குச் சொன்னார்.