ஆகாய் 2 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 ஏழாவது மாதத்தின் இருபத்தியோராம் நாளன்று, கர்த்தரிடமிருந்து ஆகாய்க்கு ஒரு செய்தி வந்தது.
2 யூதாவின் ஆளுநரும், செயல்த்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும் தலைமை ஆசாரியனான யோத்சதாக்கின் மகன் யோசுவாவுக்கும், மற்றுமுள்ள அனைத்து ஜனங்களுக்கும் இவற்றைச் சொல்:
3 “உங்களில் எத்தனை பேர் இந்த ஆலயத்தைப் பார்த்து, ஏற்கெனவே அழிக்கப்பட்ட ஆலயத்தோடு ஒப்பிடுவீர்கள்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் முதல் ஆலயத்தோடு ஒப்பிடும்போது இந்த ஆலயம் ஒன்றுமில்லை என்று எண்ணுகிறீர்களா?
4 ஆனால் இப்பொழுது, ‘செருபாபேலே, அதைரியப்பட வேண்டாம்!’ என்று கர்த்தர் கூறுகிறார். ‘தலைமை ஆசாரியனாகிய யோத்சதாக்கின் மகனாகிய யோசுவாவே, அதைரியப்பட வேண்டாம்! அனைத்து ஜனங்களே, மனம் தளர வேண்டாம். இந்த வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள். ஏனென்றால் நான் உங்களோடு இருக்கிறேன்.’ சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
5 “‘நீங்கள் எகிப்தை விட்டு வரும்போது நான் உங்களோடு ஒரு உடன்படிக்கை செய்தேன். நான் எனது வாக்குறுதியைக் காப்பாற்றியிருக்கிறேன். எனது ஆவி உங்களோடு இருக்கிறது. எனவே அச்சப்பட வேண்டாம்!’
6 ஏனென்றால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறார், ‘கொஞ்ச காலத்திற்குள்ளே, நான் மீண்டும் எல்லாவற்றையும் அசையச் செய்வேன். நான் பரலோகத்தையும் பூமியையும் அசையச் செய்வேன். நான் கடலையும் வறண்ட நிலத்தையும் அசையச் செய்வேன்.
7 நான் தேசங்களையும் அசையச் செய்வேன். ஒவ்வொரு தேசத்திலிருந்தும் செல்வத்துடன் ஜனங்கள் உன்னிடம் வருவார்கள். பிறகு நான் இந்த ஆலயத்தை மகிமையால் நிரப்புவேன்.’ சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறிக் கொண்டிருக்கிறார்.
8 அவர்களின் வெள்ளி முழுவதும் எனக்குச் சொந்தமானது. தங்கம் முழுவதும் எனக்குரியது. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறிக்கொண்டிருக்கிறார்.
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘இந்த ஆலயம் முந்தைய ஆலயத்தைவிட மிக அழகுள்ளதாகவும், மாட்சிமை பொருந்தியதாகவும் இருக்கும். நான் இந்த இடத்துக்குச் சமாதானத்தைக் கொண்டுவருவேன்.’ சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறிக்கொண்டிருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக்கொள்!”
10 பெர்சியாவின் அரசனான தரியுவின் இரண்டாம் ஆண்டில் ஒன்பதாம் மாதம் இருபத்தி நான்காம் தேதியில், ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தருடைய வார்த்தை வந்தது.
11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், நீ ஆசாரியர்களிடத்தில் நியாயப்பிரமாணம் இதைப் பற்றி என்ன சொல்லுகிறது என்று கேட்க கட்டளையிடுகிறார்.
12 “ஒருவேளை ஒருவன் தன் ஆடை மடிப்புக்குள் கொஞ்சம் இறைச்சியைக் கொண்டுபோகிறான். அந்த இறைச்சி பலிக்குரிய பகுதியாகும். எனவே அது பரிசுத்தமாகிறது. அந்த ஆடைகள் கொஞ்சம் அப்பத்தையோ, சமைத்த உணவையோ, திராட்சை ரசம், எண்ணெய் அல்லது மற்ற உணவையோ தொட்டால் பரிசுத்தமாகுமா? ஆடைப்பட்ட அந்தப் பொருட்களும் பரிசுத்தமாகுமா?” ஆசாரியர்கள், “இல்லை” என்றனர்.
13 பிறகு ஆகாய், “ஒருவன் மரித்த உடலைத் தொட்டால் பின்னர் அவன் தீட்டாகிறான். இப்பொழுது, அவன் எதையாவது தொட்டால், அவையும் தீட்டாகுமா?” என்று கேட்டான். ஆசாரியர், “ஆமாம், அவையும் தீட்டாகும்” என்றனர்.
14 பிறகு ஆகாய், “தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘இந்த ஜனங்களைக் குறிக்கும் இது உண்மையாகும். அவர்கள் எனக்கு முன்னால் தூய்மையும் பரிசுத்தமும் இல்லாதவர்கள். எனவே அவர்கள் கைகளால் தொடுகிற எதுவுமே தீட்டாகும. பலிபீடத்திற்கு கொண்டு வருகிற எதுவுமே தீட்டாகும்.
15 “‘இன்றைக்கு முன்பு நடந்த இவற்றைப்பற்றி நினைத்துப்பாருங்கள். கர்த்தருடைய ஆலயத்தை நீங்கள் கட்டுவதற்கு முன் உள்ளதை நினைத்துப் பாருங்கள்.
16 ஜனங்கள் 20 மரக்கலம் தானியம் இருக்குமென்று விரும்பினார்கள். ஆனால் அம்பாரத்தில் 10 மரக்கலம் தானியம்தான் இருந்தது. ஜனங்கள் 50 ஜாடி திராட்சைரசம் இருக்குமென்று விரும்பினார்கள். ஆனால் 20 ஜாடி இரசமே ஆலையின் தொட்டியில் இருந்தது.
17 ஏனென்றால், நான் உங்களைத் தண்டித்தேன். உங்கள் பயிர்களை அழிப்பதற்குரிய நோய்களை அனுப்பினேன். நான் கல் மழையை உங்கள் கைகளால் செய்தவற்றை அழிக்க அனுப்பினேன். நான் இவற்றைச் செய்தேன். ஆனால் நீங்கள் இன்னமும் என்னிடம் வரவில்லை.’ கர்த்தரே இவற்றைச் சொன்னார்” என்றான்.
18 கர்த்தர், “இன்று ஒன்பதாம் மாதம் இருபத்தி நான்கம் தேதி. நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டு முடித்திருக்கிறீர்கள். எனவே இன்றிலிருந்து என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள்.
19 அம்பாரத்தில் இன்னும் தானியம் இருக்கிறதா? இல்லை. திராட்சை கொடிகள், அத்தி மரங்கள், மாதளஞ் செடிகள், ஒலிவமரங்கள் ஆகியவற்றைப் பாருங்கள். அவை பழங்களைத் தருகின்றனவா? இல்லை. ஆனால் இன்று முதல் நான் உங்களை ஆசீர்வதிப்பேன்!” என்றார்.
20 இன்னொரு செய்தி கர்த்தரிடமிருந்து ஆகாய்க்கு இம்மாதத்தின் இருபத்தி நான்காம் நான் வந்தது. இதுதான் செய்தி:
21 “யூதாவின் ஆளுநரான செருபாபேலிடம் செல்லுங்கள். நான் பரலோகத்தையும், பூமியையும் அசைப்பேன் என்று அவனிடம் சொல்லுங்கள்.
22 நான் பல அரசர்களையும் அரசுகளையும் தூக்கி எறிவேன். இவ்வரசுகளின் வலிமையை நான் அழித்துப்போடுவேன். நான் இரதங்களையும், அதில் பயணம் செய்வோரையும் அழித்துப்போடுவேன். அந்தப் படை வீரர்கள் இப்பொழுது நண்பர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வரும் நாட்களில் எதிரிகளாக வாளினால் ஒருவரையொருவர் கொன்றுப் போடுவார்கள்.
23 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறிக் கொண்டிருக்கிறார். செயல்த்தியேலின் மகனாகிய செருபாபேலே, நீ என்னுடைய வேலைக்காரன். நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்நேரத்தில், நான் உன்னை முத்திரை மோதிரமாகச் செய்வேன். நான் இவற்றைச் செய்திருக்கிறேன் என்பதற்கு நீயே அத்தாட்சியாக இருப்பாய்!” என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொன்னார்.