ஆதியாகமம் 4 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் “ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்” என்றாள்.2 பின்பு, அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.3 சில நாள்கள் சென்றன. காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான்.4 ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.5 ஆனால், காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது.6 ஆகவே, ஆண்டவர் காயினிடம், “நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?7 நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என்றார்.⒫8 காயின் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.9 ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான்.10 அதற்கு ஆண்டவர், “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.11 இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.12 நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்” என்றார்.13 காயின் ஆண்டவரிடம், “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.14 இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!” என்றான்.15 ஆண்டவர் அவனிடம் “அப்படியன்று; காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்” என்று சொல்லி, காயினைக் கண்டு பிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க ஆண்டவர் அவன் மேல் ஓர் அடையாளம் இட்டார்.16 பின்னர், காயின் ஆண்டவர் திருமுன்னை விட்டுச் சென்று ஏதேனுக்குக் கிழக்கே இருந்த நோது நாட்டில் குடியேறினான்.17 காயின் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் கருவுற்று ஏனோக்கைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது காயின் ஒரு நகரத்தை நிறுவி, அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை வைத்தான்.18 ஏனோக்கிற்கு ஈராது பிறந்தான். ஈராதுக்கு மெகுயாவேல் பிறந்தான். மெகுயாவேலுக்கு மெத்துசாவேல் பிறந்தான். மெத்துசாவேலுக்கு இலாமேக்கு பிறந்தான்.19 இலாமேக்கு இரு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தியின் பெயர் ஆதா; மற்றொருத்தியின் பெயர் சில்லா.20 ஆதா யாபாலைப் பெற்றெடுத்தாள். இவன்தான் ஆடுமாடு மேய்த்துக் கூடாரத்தில் வாழும் மக்களின் தந்தை.21 அவன் சகோதரன் பெயர் யூபால். இவன்தான் யாழ் மீட்டுவோர், குழல் ஊதுவோர் ஆகியோர் அனைவரின் தந்தை.22 சில்லா தூபால்காயினைப் பெற்றெடுத்தாள். இவன் வெண்கலத்தாலும், இரும்பாலும் எல்லாவிதமான கருவிகள் செய்யும் கொல்லன் ஆனான். தூபால்காயினுக்கு நாகமா என்ற சகோதரி இருந்தாள்.⒫23 இலாமேக்கு தன் மனைவியரிடம், “ஆதா, சில்லா, நான் சொல்வதைக் கவனியுங்கள். இலாமேக்கின் மனைவியரே, என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்; என்னைக் காயப்படுத்தியதற்காக ஒருவனை நான் கொன்று விட்டேன்; என்னை அடித்ததற்காக அந்த இளைஞனை நான் கொன்றேன்.24 காயினுக்காக ஏழுமுறை பழிவாங்கப்பட்டால் இலாமேக்கிற்காக எழுபது - ஏழுமுறை பழிவாங்கப்படும்” என்றான்.⒫25 ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் மகன் ஒருவனைப் பெற்று அவனுக்குச் சேத்து* என்று பெயரிட்டாள். “காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்” என்றாள்.26 சேத்துக்கும் மகன் ஒருவன் பிறந்தான்; அவனுக்கு அவன் ஏனோசு என்று பெயரிட்டான். அப்பொழுதே ‘ஆண்டவர்’ என்னும் திருப்பெயரால் அவரை வழிபடலாயினர்.ஆதியாகமம் 4 ERV IRV TRV