ஆதியாகமம் 34 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 யாக்கோபுக்கு லேயா பெற்றெடுத்த மகளான தீனா அந்நாட்டு மகளிரைப் பார்க்க வெளியே புறப்பட்டுப் போனாள்.2 இவ்வியனான ஆமோரின் மகனும் அந்நாட்டின் தலைவனுமான செக்கேம் அவளைக் கண்டு தூக்கிச்சென்று அவளுடன் உறவு கொண்டு சிறுமைப்படுத்தினான்.3 யாக்கோபின் மகள் தீனாவிடம் அவன் மனம் மேலும் ஈர்க்கப்பெற, அவன் அப்பெண்ணின்மேல் காதல் கொண்டு அவளது மனத்தைக் கவரும் முறையில் பேசினான்.4 எனவே, செக்கேம் தன் தந்தை ஆமோரிடம், “இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்துவையுங்கள்” என்று கூறினார்.⒫5 தம் மகள் தீனா தீட்டுப்படுத்தப்பட்டாள் என்று யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவருடைய புதல்வர் புல்வெளியில் மந்தைகளோடு இருந்தனர். எனவே, அவர்கள் திரும்பி வரும்வரை யாக்கோபு அமைதியாய் இருந்தார்.6 செக்கேமின் தந்தை ஆமோர் யாக்கோபோடு பேச வந்தார்.7 யாக்கோபின் புதல்வர் இதைப்பற்றிக் கேள்விப்பட்டுப் புல்வெளியிலிருந்து வந்தனர். அவர்கள் துயரமும் கடுஞ் சீற்றமும் கொண்டனர். ஏனெனில், யாக்கோபின் மகளுடன் உறவு கொண்டதால் செய்யத் தகாததைச் செய்து செக்கேம் இஸ்ரயேலை அவமானப்படுத்தினான் என்று நினைத்தனர்.⒫8 அப்பொழுது ஆமோர் அவர்களை நோக்கி, “என் மகன் செக்கேமின் மனம் உங்கள் மகள்மீது ஈர்க்கப்பட்டுள்ளது. அவளை அவனுக்கு மணமுடித்துத் தாருங்கள்.9 நீங்கள் எங்களோடு கலப்பு மணம் செய்துகொள்ளுங்கள். உங்கள் பெண்களை எங்களுக்குக் கொடுத்து எங்கள் பெண்களை உங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.10 நீங்கள் எங்களோடு இந்நாட்டில் எங்கும் தங்கலாம். அதில் குடியிருந்து, வணிகம் செய்து, செல்வம் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.11 அப்பொழுது செக்கேம் தீனாவின் தந்தையையும், சகோதரர்களையும் நோக்கி, “உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைக்கட்டும். நீங்கள் கேட்பதைத் தருவேன்.12 பெண்ணுக்குரிய பணமும் பரிசமும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள். நீங்கள் கேட்பதைத் தருவேன். பெண்ணை மட்டும் எனக்கு மணமுடித்துத் தாருங்கள்” என்றான்.⒫13 யாக்கோபின் புதல்வர் தங்கள் சகோதரியைச் செக்கேம் தீட்டுப்படுத்தியதால், அவனையும் அவன் தந்தை ஆமோரையும் நோக்கிக் கபடமாய்க் கூறிய மறுமொழியாவது;14 “நீங்கள் கேட்டபடி செய்ய எங்களால் முடியாது. ஏனெனில், விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஆடவனுக்கு எங்கள் சகோதரியைக் கொடுப்பது அவமானமாகும்.15 ஆனால், நீங்களும் உங்களுள் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் செய்து கொண்டால் மட்டும்16 எங்கள் பெண்களை உங்களுக்குக் கொடுத்து உங்கள் பெண்களை எங்களுக்கு எடுத்துக்கொள்வோம். உங்களிடையே வாழ்ந்து ஓரினமாக ஆவோம்.17 எங்கள் சொற்படி நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள இசையாவிட்டால் நாங்கள் எங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விடுவோம்” என்றனர்.⒫18 அவர்கள் சொன்னது ஆமோருக்கும் அவன் மகன் செக்கேமுக்கும் நலமாகத் தோன்றியது.19 அந்த இளைஞன் யாக்கோபின் மகள்மீது கொண்ட காதலினால் அவர்கள் சொன்னதை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தவில்லை. மேலும், அவன் தன் தந்தை வீட்டார் அனைவரிடையிலும் பெருமதிப்புக்குரியவனாய் இருந்தான்.20 எனவே, ஆமோரும் அவன் மகன் செக்கேமும் தம் நகரவாயிலுக்கு வந்து மக்களை நோக்கி,21 “இந்த மனிதர்கள் நம்முடன் நட்புறவு கொள்பவர்கள். ஆகவே, நம் நாட்டில் குடியிருந்து வணிகம் செய்யட்டும். அவர்கள் வாழ்வதற்கு நம் நாட்டில் நிறைய நிலம் இருக்கிறது. அவர்களிடம் பெண் எடுத்து, அவர்களுக்குப் பெண் கொடுப்போம்.22 ஆனால், இவர்கள், தாங்கள் செய்து கொண்டது போல, நம் ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டால் மட்டும் நம்முடன் ஒரே இனமாகச் சேர்ந்து வாழ இசைவு தருகிறார்கள்.23 அப்படிச் செய்தால் அவர்களுடைய மந்தைகள், சொத்துக்கள், அனைத்துக் கால்நடைகள் ஆகியன நமக்குரியன ஆகுமன்றோ! எனவே, நாம் அவர்களுக்கு ஒப்புதல் கொடுப்போம். அவர்களும் நம்முடன் குடியிருக்கட்டும்” என்றார்கள்.24 ஆகவே, நகரவாயிலுக்கு வெளியே வந்த அனைவரும் ஆமோரும் அவன் மகன் செக்கேமும் கூறியதை ஏற்றுக் கொண்டனர். நகரிலிருந்த அனைத்து ஆண்களும் செய்து கொண்டனர்.⒫25 மூன்றாம் நாளன்று அவர்கள் அனைவரும் வலியால் வருந்தியபோது, யாக்கோபின் புதல்வர்களும் தீனாவின் சகோதரர்களுமான சிமியோன், லேவி என்னும் இருவரும் அவரவர் வாளை எடுத்துக் கொண்டு, சந்தேகம் எழாதபடி நகருக்குள் புகுந்து அனைத்து ஆண்களையும் வெட்டி வீழ்த்தினர்.26 அவர்கள் ஆமோரையும், அவன் மகன் செக்கேமையும் வாளினால் வெட்டி வீழ்த்தியபின் தீனாவை செக்கேம் வீட்டினின்று அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.27 அதன்பின் யாக்கோபின் புதல்வர்கள் வந்து, வெட்டுண்டவர்களின் சடலத்தின் மீது மிதித்துச் சென்று தங்கள் சகோதரியைத் தீட்டுப்படுத்திய அந்நகரைக் கொள்ளையிட்டனர்.28 நகரிலும் வெளிப்புறத்திலும் இருந்த அவர்களுடைய ஆடு, மாடு, கழுதைகளைக் கைப்பற்றினர்.29 அவர்களுடைய எல்லாச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டு, எல்லாக் குழந்தைகள் பெண்டிரையும் கைதிகளாக்கி, வீடுகளிலிருந்த அனைத்தையும் கொள்ளையடித்தனர்.30 யாக்கோபு சிமியோனையும் லேவியையும் நோக்கி, “நீங்கள் என்னைத் தொல்லைக்கு உட்படுத்திவிட்டீர்கள். இந்நாட்டில் வாழ்வோரிடத்திலும் கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என்னை இழிவுப்படுத்திவிட்டீர்கள். என்னிடமோ சில ஆள்களே உள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து என்னைத் தாக்கினால் நானும் என் குடும்பத்தாரும் அழிந்து போவோம்” என்றார்.31 அதற்கு, “அவன் மட்டும் எங்கள் சகோதரியை ஒரு விலைமாதைப் போல நடத்தலாமோ?” என்று அவர்கள் மறுமொழி கூறினர்.