ஆதியாகமம் 3 IRV ஒப்பிடு Tamil Indian Revised Version
1 தேவனாகிய கர்த்தர் படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா என்றது.
2 பெண், பாம்பை நோக்கி: நாங்கள் தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களைச் சாப்பிடலாம்;
3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாமலிருக்க அதை சாப்பிடவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.
4 அப்பொழுது பாம்பு, பெண்ணை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
5 நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
6 அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது என்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, சாப்பிட்டு, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்.
7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தி இலைகளைத் தைத்து, தங்களுடைய இடுப்புகளை மறைத்துக்கொண்டார்கள்.
8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவனுடைய மனைவியும் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக விலகி, தோட்டத்தின் மரங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள்.
9 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
10 அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாக இருப்பதால் பயந்து, ஒளிந்துகொண்டேன் என்றான்.
11 அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டாயோ என்றார்.
12 அதற்கு ஆதாம்: என்னுடன் இருப்பதற்காக தேவரீர் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள், நான் சாப்பிட்டேன் என்றான்.
13 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் பெண்ணை நோக்கி: நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன் என்றாள்.
14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் பாம்பை நோக்கி: நீ இதைச் செய்ததால் அனைத்து நாட்டுமிருகங்களிலும் அனைத்து காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
15 உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவளுடைய வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய் என்றார்.
16 அவர் பெண்ணை நோக்கி: நீ கர்ப்பவதியாக இருக்கும்போது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.
18 அது உனக்கு முட்செடிகளை முளைப்பிக்கும்; நிலத்தின் பயிர்வகைகளைச் சாப்பிடுவாய்.
19 நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவள் உயிருள்ள அனைவருக்கும் தாயானவள்.
21 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவனுடைய மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
22 பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனிதன் நன்மை தீமை அறியத்தக்கவனாகி நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் பழத்தையும் பறித்து சாப்பிட்டு, என்றைக்கும் உயிரோடு இல்லாதபடிச் செய்யவேண்டும் என்று,
23 அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
24 அவர் மனிதனைத் துரத்திவிட்டு, வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.