ஆதியாகமம் 29 IRV ஒப்பிடு Tamil Indian Revised Version
1 யாக்கோபு பயணம்செய்து, கிழக்கு தேசத்தாரிடத்தில் போய்ச் சேர்ந்தான்.
2 அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே சேர்க்கப்பட்டிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணறு ஒரு பெரிய கல்லினால் மூடப்பட்டிருந்தது.
3 அந்த இடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றை மூடியிருக்கும் கல்லை மேய்ப்பர்கள் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்பிருந்ததுபோல கிணற்றை மூடிவைப்பார்கள்.
4 யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரர்களே, நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றார்கள்.
5 அப்பொழுது அவன்: நாகோரின் மகனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.
6 அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவனுடைய மகளாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.
7 அப்பொழுது அவன்: இன்னும் அதிக நேரமிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற நேரமல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான்.
8 அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றை மூடியிருக்கிற கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.
9 அவர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
10 யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய மகளாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
11 பின்பு யாக்கோபு ராகேலை முத்தம்செய்து, சத்தமிட்டு அழுது,
12 தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் மகனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.
13 லாபான் தன் சகோதரியின் மகனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைத் தழுவி முத்தம்செய்து, தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாக லாபானுக்குச் சொன்னான்.
14 அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.
15 பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.
16 லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள்; மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல்.
17 லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்ப்பதற்கு அழகுள்ளவளாக இருந்தாள்.
18 யாக்கோபு ராகேல் மீது பிரியப்பட்டு: உம்முடைய இளைய மகளாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருடங்கள் வேலை செய்கிறேன் என்றான்.
19 அதற்கு லாபான்: நான் அவளை வேறொருவனுக்குக் கொடுக்கிறதைவிட, அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தங்கியிரு என்றான்.
20 அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்தான்; அவள் மேலிருந்த பிரியத்தினாலே அந்த வருடங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.
21 பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறிவிட்டதால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.
22 அப்பொழுது லாபான் அந்த இடத்து மனிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து விருந்துசெய்தான்.
23 அன்று இரவிலே அவன் தன் மகளாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.
24 லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் மகளாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
25 காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்பு ஏன் என்னை ஏமாற்றினீர் என்றான்.
26 அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இந்த இடத்தின் வழக்கம் இல்லை.
27 இவளுடைய ஏழு நாட்களை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருடங்கள் என்னிடத்திலே வேலைசெய் என்றான்.
28 அப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழு நாட்களை நிறைவேற்றினான். அப்பொழுது தன் மகளாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
29 மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் மகளாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
30 யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைவிட ராகேலை அவன் அதிகமாக நேசித்து, பின்னும் ஏழு வருடங்கள் அவனிடத்தில் வேலை செய்தான்.
31 லேயாள் அற்பமாக எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.
32 லேயாள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் கணவன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள்.
33 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: நான் அற்பமாக எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள்.
34 பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: என் கணவனுக்கு மூன்று மகன்களைப் பெற்றதால் அவர் இப்பொழுது என்னோடு சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள்.
35 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள்; பின்பு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோனது.