1 சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார். சாராவின் வயது இதுவே.2 கானான் நாட்டிலுள்ள எபிரோன் என்ற கிரியத்து அர்பா நகரில் சாரா இறந்தார். அவருக்காகப் புலம்பி அழுவதற்காக ஆபிரகாம் சென்றார்.3 பிறகு, சடலம் இருந்த இடத்தைவிட்டு அவர் எழுந்து இத்தியரிடம் சென்று சொன்னது:4 “நான் உங்களிடையே அந்நியனும் அகதியுமாய் இருக்கிறேன். என் வீட்டில் இறந்தாரை நான் அடக்கம் செய்வதற்கான கல்லறை நிலத்தை உங்களுக்குரிய சொத்திலிருந்து எனக்கு விற்று விடுங்கள்” என்று கேட்டார்.5 இத்தியர் ஆபிரகாமுக்கு மறுமொழியாக;6 “எம் தலைவரே! கேளும். நீர் எங்களிடையே ஒரு வலிமைமிக்க தலைவராய் இருக்கிறீர். எங்கள் கல்லறைகளில் சிறந்த ஒன்றில் உமது வீட்டில் இறந்தாரை அடக்கம் செய்யலாம். உம் வீட்டில் இறந்தாரை தன் கல்லறையில் நீர் அடக்கம் செய்ய எங்களுள் எவனும் மறுக்க மாட்டான்” என்றனர்.7 அப்போது ஆபிரகாம் எழுந்து, அந்நாட்டு மக்களாகிய இத்தியர் முன் தாழ்ந்து வணங்கி,8 அவர்களை நோக்கி, “என் வீட்டில் இறந்தாரை நல்லடக்கம் செய்வதை நீங்கள் விரும்பினால், நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் சோகாரின் மகனான எப்ரோனிடம் எனக்காகப் பரிந்து பேசி,9 அவருக்குச் சொந்தமானதும் அவரது வயலின் மூலையில் இருப்பதுமான மக்பேலா குகையை எனக்குத் தரும்படி செய்யுங்கள். உங்களிடையே எனக்கு உடைமையான கல்லறை நிலம் இருக்குமாறு முழு விலைக்கு எனக்கு அதை விற்றுவிடும்படி கேளுங்கள்” என்றார்.⒫10 இத்தியனான எப்ரோன் மற்ற இத்தியரோடு அமர்ந்திருந்தான். அவன் நகரவாயிலுக்கு வரும் இத்தியர் அனைவரும் கேட்கும்படி, ஆபிரகாமை நோக்கி,11 “வேண்டாம், என் தலைவரே! நான் சொல்வதைக் கேளும். நிலத்தையும் அதிலுள்ள குகையையும் உமக்கு நான் கொடுத்து விடுகிறேன். என் இனத்தார் முன்னிலையிலேயே அதை நான் உமக்குக் கொடுத்து விடுகிறேன். உம் வீட்டில் இறந்தாரை அங்கு அடக்கம் செய்வீராக” என்றான்.12 அப்போது ஆபிரகாம் அந்நாட்டு மக்கள்முன் தாழ்ந்து வணங்கி,13 அவர்கள் கேட்கும்படியாக எப்ரோனை நோக்கி, “நான் சொல்வதைத் தயவு செய்து கேளும். நிலத்திற்கான பணத்தைத் தருகிறேன். பெற்றுக் கொள்ளும். அப்பொழுதுதான் என் வீட்டில் இறந்தோரை அங்கு நான் அடக்கம் செய்வேன்” என்றார்.⒫14 அதற்கு எப்ரோன் ஆபிரகாமை நோக்கி,15 “என் தலைவரே! என் வார்த்தையைக் கேளும். நீர் கேட்கிற நிலம் நானூறு வெள்ளிக் காசுகள்தான் பெறும். நமக்குள்ளே இது என்ன? உம் வீட்டில் இறந்தாரை அடக்கம் செய்துகொள்ளும்” என்றான்.16 எப்ரோன் சொன்னதற்கு இசைந்த ஆபிரகாம் இத்தியர் முன்னிலையில் பேசியபடி நானூறு வெள்ளிக்காசுகளை அன்றைய வணிக வழக்கிற்கேற்ப நிறுத்துக் கொடுத்தார்.⒫17 இவ்வாறு, மக்பேலாவில், மம்ரே அருகில் எப்ரோனுக்குச் சொந்தமான நிலமும், அதிலிருந்த குகையும், நிலத்திலும் அதன் எல்லையைச் சுற்றிலும் இருந்த எல்லா மரங்களும்18 நகர வாயிலுக்கு வரும் அனைத்து இத்தியர் முன்னிலையிலும் ஆபிரகாமுக்கு உடைமையாயின.19 இவ்வாறு, மம்ரே அருகில் மக்பேலா நிலத்தின் கல்லறையில் ஆபிரகாம் தம் மனைவி சாராவை அடக்கம் செய்தார். இதுவே கானான் நாட்டில் இருக்கும் எபிரோன்.20 இவ்வாறு, அந்நிலமும் அதிலிருந்த குகையும் இத்தியரிடமிருந்து ஆபிரகாமுக்கு உடைமையான கல்லறை நிலமாக உறுதி செய்யப்பட்டது.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.