1 ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு.2 உனக்கும் எனக்குமிடையே ஓர் உடன்படிக்கையை நான் ஏற்படுத்திக்கொள்வேன்; உன்னை மிகமிகப் பெருகச் செய்வேன்” என்றார்.3 அப்பொழுது ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது:4 “உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.5 இனி உன்பெயர் ஆபிராம் அன்று; ‘ஆபிரகாம்’ என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில், எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன்.6 மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர்.7 தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன்.8 நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்” என்றார்.⒫9 மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் தலைமுறைதோறும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.10 நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்.11 உங்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.12 தலைமுறை தலைமுறையாக எட்டு நாள் ஆன உங்கள் ஆண்குழந்தை ஒவ்வொன்றுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டும். அக்குழந்தை வீட்டில் பிறந்திருந்தாலும், உன் வழிமரபைச் சாராமல் வேற்றினத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டிருந்தாலும், அப்படியே செய்ய வேண்டும்.13 உன்வீட்டில் பிறந்த குழந்தைக்கும் விலைக்கு வாங்கியதற்கும் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு, என் உடன்படிக்கை உன் உடலில் என்றுமுள்ள உடன்படிக்கையாக இருக்கும்.14 தன் உடலில் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆண்மகனும், என் உடன்படிக்கையை மீறியதால், தன் இனத்தாரிடமிருந்து விலக்கப்படுவான்” என்றார்.⒫15 பின்பு, கடவுள் ஆபிரகாமிடம், “உன் மனைவியைச் ‘சாராய்’ என அழைக்காதே. இனிச் ‘சாரா’ என்பதே அவள் பெயர்.16 அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்” என்றார்.17 ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, “நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.18 ஆபிரகாம் கடவுளிடம், “உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்” என்றார்.19 கடவுள் அவரிடம், “அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ ‘ஈசாக்கு’ எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.20 இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர்களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும்.21 ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்” என்றார்.22 அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.⒫23 பின்னர், ஆபிரகாம் தம் மகன் இஸ்மயேலுக்கும் தம் வீட்டில் பிறந்த எல்லாருக்கும், தாம் விலைக்கு வாங்கிய எல்லாருக்கும், அதாவது, தம் வீட்டில் இருந்த ஒவ்வொரு ஆணுக்கும், கடவுள் தமக்குக் கூறியபடியே அதே நாளில் அவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்தார்.24 ஆபிரகாமுக்கு அவர் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது அவருக்கு வயது தொண்ணூற்றொன்பது.25 அவர் மகன் இஸ்மயேலுக்கு அவன் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது, அவனுக்கு வயது பதின்மூன்று.26 ஆபிரகாமுக்கும் அவர் மகன் இஸ்மயேலுக்கும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது.27 அவருக்குச் செய்யப்பட்டதுபோல அவர் வீட்டில் பிறந்தவர்கள், வேற்றினத்தாரிடமிருந்து அவர் விலைக்கு வாங்கியவர்கள் ஆகிய எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.