யாத்திராகமம் 9 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போய் அவனைப் பார்த்து, ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர்: என்னைத் தொழுதுக்கொள்ளும்படி என் ஜனங்களைப் போக அனுமதி!
2 நீ விடாப்பிடியாக அவர்களை அனுப்ப மறுத்தால்,
3 உனது பண்ணை மிருகங்களுக்கு எதிராக கர்த்தர் தமது வல்லமையைப் பயன்படுத்துவார். ஒரு கொடிய நோயால் உனது குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், பசுக்கள், ஆடுகள், ஆகியவை பாதிக்கப்படும்படியாகக் கர்த்தர் செய்வார்.
4 எகிப்தியரின் மிருகங்களுக்கும், இஸ்ரவேலரின் மிருகங்களுக்கும் கர்த்தர் வித்தியாசம் காட்டுவார். இஸ்ரவேல் ஜனங்களின் மிருகங்கள் எதுவும் சாகாது.
5 இது நடப்பதற்குரிய காலத்தை கர்த்தர் குறித்துவிட்டார். நாளை இதனை இத்தேசத்தில் கர்த்தர் நிறைவேற்றுவார் என்று சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.
6 மறுநாள் காலையில் எகிப்தின் பண்ணை மிருகங்கள் அனைத்தும் மடிந்தன. ஆனால் இஸ்ரவேலருக்குரிய மிருகங்கள் எதுவும் மரிக்கவில்லை.
7 இஸ்ரவேலரின் மிருகங்களில் ஏதேனும் மரித்திருக்கிறதா என்று பார்ப்பதற்குப் பார்வோன் ஆட்களை அனுப்பினான். இஸ்ரவேலரின் மிருகங்கள் எதுவும் மரிக்கவில்லை என்று பார்வோன் அறிந்தும் பிடிவாதமாகவே இருந்தான். அவன் ஜனங்களைப் போக அனுமதிக்கவில்லை.
8 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “உலையிலுள்ள சாம்பலை உங்கள் கைகளில் அள்ளிக்கொள்ளுங்கள். மோசே, நீ பார்வோனுக்கு முன்பாக உன் கைகளிலுள்ள சாம்பலைக் காற்றில் வீசு.
9 எகிப்து தேசம் முழுவதும் இச்சாம்பல் பரவி தூளாக இது மாறும். அந்தத் தூள் ஒரு மனிதன் மீதோ, ஒரு மிருகத்தின்மீதோ பட்டவுடன் தோலின் மீது கொப்புளங்கள் ஏற்படும்” என்றார்.
10 எனவே மோசேயும், ஆரோனும் ஒரு உலையிலிருந்து சாம்பலை அள்ளிக்கொண்டனர். பின் அவர்கள் போய் பார்வோனுக்கு முன்னே நின்று, மோசே சாம்பலைக் காற்றில் தூவினான். ஜனங்களின் மீதும், மிருகங்களின் மீதும் கொப்புளங்கள் தோன்றின.
11 மோசே இவ்வாறு செய்வதை மந்திரவாதிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏனெனில் மந்திரவாதிகளின் மீதும் கொப்பளங்கள் தோன்றியிருந்தன. எகிப்து தேசமெங்கும் இவ்வாறு நிகழ்ந்தது.
12 ஆனால் பார்வோன் பிடிவாதமாக இருக்கும்படி கர்த்தர் செய்தார். எனவே மோசேக்கும், ஆரோனுக்கும் செவிசாய்க்க, பார்வோன் விரும்பவில்லை. கர்த்தர் கூறியவாறே இது நடந்தது.
13 பின்பு கர்த்தர் மோசேயிடம், “காலையில் எழுந்து பார்வோனிடம் போ. எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர், ‘எனது ஜனங்கள் என்னைத் தொழுதுக்கொள்வதற்குப் போக அனுமதி கொடு!
14 நீ அவ்வாறு செய்யாவிட்டால் எனது முழு சக்தியையும் உனக்கும், உனது அதிகாரிகளுக்கும், உனது ஜனங்களுக்கும் எதிராக அனுப்புவேன். அப்போது என்னைப் போன்ற தேவன் இவ்வுலகில் எவரும் இல்லை என்பதை நீ அறிவாய்.
15 என் வல்லமையைப் பயன்படுத்தி ஒரு நோயை ஏற்படுத்தி அதனால் உன்னையும், உனது ஜனங்களனை வரையும் பூமியிலேயே இராதபடி அழிக்கமுடியும்.
16 ஆனால் என் வல்லமையை உங்களுக்குக் காட்டுவதற்காகவே உங்களை இங்கு வைத்திருக்கிறேன். அப்போது உலகமெங்குமுள்ள ஜனங்கள் என்னைக் குறித்து அறிந்துக்கொள்வார்கள்!
17 எனது ஜனங்களுக்கு எதிராகவே நீ இன்னும் இருக்கிறாய். அவர்களை விடுதலை செய்வதற்கு நீ அனுமதிக்கவில்லை.
18 எனவே நாளைக்கு இதே நேரத்தில், ஒரு கொடிய கல்மழை காற்றை வீசச் செய்வேன். எகிப்து தேசத்தில் இன்றுவரை அதைப் போன்ற புயல்காற்று வீசியதே இல்லை.
19 இப்போதே உனது மிருகங்களை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிடு. வயல்களில் காணப்படும் உனக்குரிய பொருள் எது வாயினும் அதைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிடு. ஏனெனில் வயலில் இருக்கும் எந்த மனிதனாயினும் சரி, மிருகமாயினும் சரி, அது கொல்லப்படும். அனைத்து பொருட்களின் மீதும் கல்மழை காற்று வீசும் என்று சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.
20 கர்த்தரின் செய்திக்குப் பார்வோனின் அதிகாரிகளில் சிலர் செவிசாய்த்தனர். அவர்கள் தங்கள் மிருகங்களையும், அடிமைகளையும், வீடுகளுக்குள் விரைவாகச் சேர்த்தனர்.
21 ஆனால் மற்றவர்கள் கர்த்தரின் செய்தியை ஒரு பொருட்டாய் எண்ணவில்லை. அவர்கள் வயல்களிலிருந்த எல்லா அடிமைகளையும் மிருகங்களையும் விட்டுவிட்டனர்.
22 கர்த்தர் மோசேயிடம், “உன் கைகளை மேலே உயர்த்து. எகிப்து முழுவதும் கல்மழை பொழியத் துவங்கும். எகிப்தின் வயல்களிலுள்ள எல்லா ஜனங்கள், விலங்குகள் மற்றும் செடிகளின் மீதும் கல்மழை விழ ஆரம்பிக்கும்” என்றார்.
23 மோசே தனது கைத்தடியை உயர்த்தினான். இடி, மின்னல், புயல் ஆகியவை எகிப்தைப் பாதிக்குமாறு கர்த்தர் செய்தார்.
24 எகிப்தில் புயல் வீசியபோது மின்னல் அதனூடே தோன்றியது. எகிப்து ஒரு தேசமான பின்னர், அங்கு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் இதுவேயாகும்.
25 புயல், எகிப்தின் வயல்களிலிருந்த எல்லாவற்றையும், ஜனங்கள், மிருகங்கள், தாவரங்கள் அனைத்தையும் அழித்தது. வயல்களின் மரங்களைப் புயல் வீழ்த்தியது.
26 எபிரெய ஜனங்கள் வாழ்ந்த கோசேன் தேசத்தில் மட்டும் புயலின் பாதிப்பு ஏற்படவில்லை.
27 பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைத்து அவர்களிடம், “இம்முறை நான் பாவம் செய்தேன். கர்த்தர் நீதியானவர். நானும் எனது ஜனங்களும் குற்றம் செய்தோம்.
28 தேவன் அனுப்பிய புயலும், இடியும், கல்மழையும் கொடியவை. புயலை நிறுத்தும்படியாக தேவனிடம் விண்ணப்பியுங்கள். நான் நீங்கள் போவதற்கு அனுமதிப்பேன். நீங்கள் இங்குத் தங்க வேண்டியதில்லை” என்றான்.
29 மோசே பார்வோனிடம், “நான் நகரத்தை விட்டுப் புறப்பட்டதும் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தபடியே என் கைகளை உயர்த்துவேன். இடியும் கல்மழையும் நின்றுபோகும், இந்த பூமியில் கர்த்தர் இருக்கிறார் என்பதை அப்போது நீ அறிவாய்.
30 ஆனால் நீயும் உனது அதிகாரிகளும் உண்மையாகவே கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவில்லை என்பதை நான் அறிவேன்” என்றான்.
31 சணல் பயிர்களில் ஏற்கெனவே கதிர்களும், வாற்கோதுமைப் பயிரில் பூக்களும் தோன்றியிருந்தன. இச்செடிகள் அனைத்தும் அழிந்தன.
32 ஆனால் கோதுமையும், கம்பும், பிற தானியங்களைக் காட்டிலும் தாமதமாக அறுவடை ஆகும். எனவே இவை அழிக்கப்படவில்லை.
33 மோசே பார்வோனிடமிருந்து புறப்பட்டு நகரத்திற்கு வெளியேபோய் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்ய கரங்களை உயர்த்தினான். உடனே கல்மழையும், புயலும், இடியும்கூட நின்றுபோனது.
34 மழை, புயல், இடி ஆகியவை நின்றுபோயின என்பதைக் கண்ட பார்வோன் மீண்டும் தவறு செய்தான். அவனும், அவனது அதிகாரிகளும் மீண்டும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.
35 இஸ்ரவேல் ஜனங்களை விடுதலை செய்ய பார்வோன் மறுத்தான். மோசேயின் மூலமாக கர்த்தர் கூறியபடியே இது நிகழ்ந்தது.