யாத்திராகமம் 7 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவர் மோசேயை நோக்கி, “பார், நான் உன்னைப் பார்வோனுக்குக் கடவுளாக வைத்துள்ளேன். உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான்.2 நான் உனக்குக் கட்டளை இடுவதையெல்லாம் நீ எடுத்துச் சொல்வாய். பார்வோன் தன் நாட்டினின்று இஸ்ரயேல் மக்களைப் போகவிடும்படி அவனிடம் உன் சகோதரன் ஆரோன் பேசுவான்.3 நான் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்துவதோடு எகிப்து நாட்டில் என்னுடைய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் பெருகச் செய்வேன்.4 பார்வோன் உங்களுக்குச் செவிசாய்க்க மாட்டான். எனவே, நான் எகிப்திற்கு எதிராகக் கை ஓங்குவேன். பெரும் தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றியபின் என் மக்களாகிய இஸ்ரயேல் என்னும் படைத்திரளை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்வேன்.5 எகிப்திற்கு எதிராகக் கை ஓங்கி அவர்கள் நடுவினின்று இஸ்ரயேல் மக்களை நான் வெளியேறச் செய்யும்போது ‘நானே ஆண்டவர்’ என எகிப்தியர் அறிந்து கொள்வர்” என்றார்.6 தங்களுக்கு ஆண்டவர் என்ன கட்டளையிட்டாரோ அதையே மோசேயும் ஆரோனும் செய்தனர்.7 பார்வோனிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது மோசேக்கு வயது எண்பது; ஆரோனுக்கு வயது எண்பத்து மூன்று.8 ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி,9 “‘அருஞ்செயல் ஒன்று காட்டி உங்களை மெய்ப்பியுங்கள்’ என்று பார்வோன் உங்களை நோக்கிக் கூறினால் நீ ஆரோனிடம், ‘உன் கோலை எடுத்து, பார்வோன் முன்னிலையில் விட்டெறி. அது பாம்பாக மாறும்’ என்று சொல்” என்றார்.10 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் சென்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கிணங்கச் செயல்பட்டனர். ஆரோன் தமது கோலைப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் விட்டெறிந்ததும், அதுபாம்பாக மாறியது.11 பார்வோன் தன் ஞானிகளையும் சூனியக்காரரையும் வரவழைத்தான். எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் வித்தைகளால் அவ்வாறே செய்தார்கள்.12 அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கோலைக் கீழே இட, அவை பாம்புகளாக மாறின. ஆனால் ஆரோனின் கோல் அவர்கள் கோல்களை விழுங்கிவிட்டது.13 பார்வோனின் மனமோ கடினப்பட்டது. ஆண்டவர் முன்னுரைத்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.14 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “பார்வோனின் மனம் இறுகிப்போய்விட்டது. மக்களைப் போகவிட அவன் மறுக்கிறான்.15 எனவே, காலையில் நீ பார்வோனிடம் போ. அப்பொழுது அவன் தண்ணீரை நோக்கிச் சென்று கொண்டிருப்பான். அவனைச் சந்திப்பதற்காக நீ நைல் நதிக் கரையில் நின்று கொள்; பாம்பாக மாறிய கோலையும் கையில் எடுத்துக்கொள்.16 நீ அவனிடம் கூற வேண்டியது: எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பிவைத்துள்ளார்; அவர் சொல்வது: "பாலைநிலத்தில் எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு. நீயோ இதுவரை செவிசாய்க்கவில்லை.17 கையிலுள்ள கோலால் நானே நைல்நதி நீரை அடிப்பேன். அது இரத்தமாக மாறும்.18 நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுக்கும். எகிப்தியர் நைல்நதி நீரைக் குடிக்க முடியாமல் திணறுவர். இவற்றால் ‘நானே ஆண்டவர்’ என நீ அறிந்துக்கொள்வாய்." என்று ஆண்டவர் கூறுகிறார்” என்று சொல்.19 மேலும், ஆண்டவர் மோசேயிடம், “நீ ஆரோனை நோக்கி ‘உனது கோலை எடு: எகிப்து நாட்டிலுள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகிய அனைத்து நீர்நிலைகள் மேலும் உன் கையை நீட்டு! அவை இரத்தமாக மாறும். ஆக, எகிப்து நாடெங்கும் மரத்தொட்டிகளிலும் கல்தொட்டிகளிலும் இரத்தம் நிற்கும்’ என்று சொல்” என்றார்.⒫20 அவ்வாறே, ஆண்டவர் கட்டளைப்படி மோசேயும் ஆரோனும் செய்தனர். ஆரோன் கோலை உயர்த்திப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் நைல்நதி நீரில் அடித்தார். நைல்நதி முழுவதும் இரத்தமாக மாறியது.21 நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுத்தது. எகிப்தியர் நைல்நதி நீரைப் பருக இயலாமற் போயிற்று. எகிப்து நாடு முழுவதும் இரத்தமயமாகவே இருந்தது.22 இது போலவே எகிப்திய மந்திரவாதிகளும் தம் வித்தைகளால் செய்து காட்டினர். எனவே பார்வோனின் மனம் கடினப்பட்டது. ஆண்டவர் அறிவித்திருந்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.23 பார்வோன் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான். அவன் மனம் இதையும் பொருட்படுத்தவில்லை.24 எகிப்தியர் எல்லோரும் நைல்நதிப் பகுதிகளில் குடிநீருக்காகத் தோண்டினர். ஏனென்றால், நைல்நதி நீரைப் பருக அவர்களால் முடியவில்லை.25 ஆண்டவர் நைல்நதியை அடித்து நாள்கள் ஏழு கடந்தன.