யாத்திராகமம் 28 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 எனக்குக் குருத்துவப்பணி புரிவதற்காக உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோரையும் இஸ்ரயேல் மக்கள் நடுவிலிருந்து அழைத்துவா.2 உன் சகோதரன் ஆரோனுக்காக மாண்பும், அழகும் பொருந்திய திருவுடைகள் செய்வாய்.3 திறமையால் நான் நிரப்பியுள்ள வல்லுநர்கள் எல்லாரிடமும் சொல்; எனக்குக் குருத்துவப்பணி புரியுமாறு ஆரோனைத் திருநிலைப்படுத்துவதற்காக அவர்கள் திருவுடைகள் செய்வார்கள்.4 செய்யப்பட வேண்டிய உடைகளாவன; மார்புப்பட்டை, ஏப்போது, அங்கி, கோடிட்ட உள்ளாடை, தலைப்பாகை, இடைக்கச்சை ஆகியவை. இவ்வாறே, எனக்குக் குருத்துவப்பணி புரியும்படி உன் சகோதரன் ஆரோனுக்காகவும் அவன் புதல்வர்களுக்காகவும் திருவுடைகள் செய்யப்படட்டும்.5 பொன்னையும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பயன்படுத்தி,6 பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் கைதேர்ந்த வேலைப்பாடுடன் ஏப்போதை அமைக்கட்டும்.7 அதற்கு இரு தோள்பட்டைகள் செய்து அதன் இரு பக்கத்து ஓரங்களிலும் அதை இணைத்துவிடு.8 ஏப்போதை இணைக்கும் தோள்பட்டை, அதன் ஒரு பகுதியாகவும், அதைப் போலவே பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பெறும்.9 பன்னிற மணிக்கற்கள் இரண்டு எடுத்து அவற்றின்மேல் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைப் பொறித்துவைப்பாய்.10 அறுவர் பெயர்களை ஒரு கல்லிலும் ஏனைய அறுவர் பெயர்களை இரண்டாம் கல்லிலுமாக அவர்களது பிறப்பு வரிசைப்படியே அவற்றில் பொறித்துவிடு.11 கல்வேலைப்பாடாயும், முத்திரைவெட்டுப்போன்றும், இஸ்ரயேல் புதல்வர் பெயர்களை இரண்டு கற்களிலும் பொறித்து, அவற்றைப் பொன்னிழைப் பின்புலத்தில் பதித்து வைப்பாய்.12 இவ்விரு கற்களையும் ஏப்போதின் தோள்பட்டையில் பொருத்திவிடு. இவை இஸ்ரயேல் மக்களின் நினைவுக் கற்களாகும். ஆரோன் அவர்கள் பெயர்களைத் தம் இரு தோள்களிலும் ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாகத் தாங்கி நிற்பான்.13 பொன் வேலைப்பாட்டுடன் பதக்கங்கள் செய்.14 பின்னர், பசும் பொன்னால் பின்னல் வடிவில் இரு சங்கிலிகள் செய்து, சங்கிலிகளைப் பதக்கங்களில் பொருத்துவாய்.15 தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் அமையவேண்டும். அதைப் பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்வாய்.16 அது இரண்டாக மடிந்ததாயும், நீளம் ஒரு சாண், அகலம் ஒரு சாண் என்று சதுர வடிவமானதாயும் இருக்க வேண்டும்.17 அதை நிரப்புமாறு அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதிப்பாய். முதல் வரிசையில் பதுமராகம், புட்பராகம், மரகதம்;18 இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்;19 மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்;20 நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல் — இவை யாயும் பொன்னிழைப் பின் புலத்தில் பதிக்கப்படட்டும்.21 இந்தக் கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம், பன்னிரண்டு குலங்கங்களுக்காகப் பன்னிரன்டு பெயர்களும் பொறிக்கப்பட்டு முத்திரைபோல் விளங்கும்.22 மார்புப் பட்டைமேல் பொருத்த, பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப் பசும்பொன்னால் செய்யவேண்டும்.23 மார்புப் பட்டைக்காக இரு பொன் வளையங்களை செய்து, அந்த இரு வளையங்களையும் மார்புப்பட்டையின் இரு மூலைகளிலும் பொருத்துவாய்.24 இரு பொன் சங்கிலிகளையும் மார்புப் பட்டையின் மூலைகளிலுள்ள இரு வளையங்களில் மாட்டிவிடு.25 சங்கிலிகளின் மற்ற இரு முனைகளையும் இரு பதக்கங்களில் மாட்டுவாய். இவற்றை ஏப்போதின் தோள்பட்டையோடு, முன்புறமாய்ப் பொருத்துவாய்.26 இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை மார்புப் பட்டையின் இரு விளிம்புகளில் உட்புற ஓரங்களில் ஏப்போதை அடுத்து இணைப்பாய்.27 மேலும், இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை ஏப்போதின் இரு தோள் பட்டைகளின் முன்பக்கம் கீழ்ப்பகுதியில் அது இணையுமிடத்தில், ஏப்போதின் பின்னலழகுக் கச்சைக்கு மேலே கோர்த்துவிடு.28 பின்னர், மார்புப் பட்டையின் வளையங்களை ஏப்போதின் வளையங்களோடு, நீல நாடாவால் இணைத்துக் கட்டு. இவ்வாறு மார்புப்பட்டை ஏப்போதின் பின்னலழகுக் கச்சையிலிருந்து அகலாமலும் ஏப்போதின் மேல்படிந்தும் நிற்கும்.29 ஆரோன் திருத்தலத்திற்குள் செல்கையில், தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையின் மேலுள்ள இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைத் தம் நெஞ்சின் மேல் தாங்கி நிற்பான். அவை ஆண்டவர் திருமுன் நீங்காத நினைவுச் சின்னமாகத் திகழும்.30 தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையில், ஊரிமையும்* தும்மியையும்* இட்டு வைப்பாய். ஆரோன் ஆண்டவர் திருமுன் செல்கையில், அவையும் அவன் நெஞ்சின்மேல் கிடக்கும். இவ்வாறு ஆரோன், ஆண்டவர் திருமுன் செல்லும்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களுக்கான தீர்ப்பைத் தம் நெஞ்சின்மேல் தாங்கி நிற்பான்.31 ஏப்போதின் அங்கி முழுவதும் நீல நிறத்தில் செய்வாய்.32 அதில் தலை நுழைய ஒரு திறப்பும், அதனைச் சுற்றி, மேலாடைகளின் திறப்பில் அமைவது போன்று, நெசவு வேலைப்பாடுள்ள ஒரு கரையும், அமைந்திருக்கட்டும். ஆக, அது கிழியாதிருக்கும்.33 அதன் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்பட்டாலும் மாதுளைத் தொங்கலும், சுற்றிலும் அதனிடையே பொன்மணிகளும் பொருத்துவாய்.34 ஒரு பொன்மணி, ஒரு மாதுளைத் தொங்கல், பின்னும் ஒரு பொன்மணி, ஒரு மாதுளைத் தொங்கல் என்று அங்கியின் விளிம்பெங்கும் அமைத்திடு.35 திருப்பணி புரிகையில் ஆரோன் இதனை அணிந்திருக்க வேண்டும். இதனால் அவன் ஆண்டவர் திருமுன் தூயகத்தில் நுழைகையிலும் வெளி வருகையிலும் அதன் ஒலி கேட்கும். இல்லையெனில் அவன் சாவான்.⒫36 பசும் பொன்னால் ஒரு பட்டம் செய்து, அதன் மேல் “ஆண்டவருக்கு அர்ப்பணம்” என்று முத்திரைபோல் பொறித்து வைத்து,37 அதனை ஒரு நீல நாடாவால் தலைப்பாகைமேல் இணைத்துக்கட்டு; தலைப்பாகையின் முன்புறம் அது நிற்கும்.38 அது ஆரோனின் நெற்றிமேல் நிற்கட்டும். இஸ்ரயேல் மக்களைப் புனிதமாக்கும் திருப்பொருள்கள், அவர்கள் அளிக்கும் புனிதப் படையல்கள் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகளை ஆரோன் சுமந்து கொள்ளவும். இதனால் யாவும் ஆண்டவர் திருமுன் ஏற்கப் பெறவும், அது எப்போதும் அவன் நெற்றிமேல் நிற்கட்டும்.⒫39 மேலும், மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி செய்யவேண்டும். தலைப்பாகையையும் மெல்லிய நார்ப்பட்டால் நெய்வாய். பின்னல் வேலைப்பாட்டுடன் ஓர் இடைக்கச்சையையும் செய்வாய்.⒫40 ஆரோனின் புதல்வர்களுக்குத் தேவையான அங்கிகளும், இடைக் கச்சைகளும், தலைப்பாகைகளும் மாண்பும் அழகும் பொருந்தியனவாய் செய்யப்படட்டும்.41 இவற்றால் உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர்களையும் நீ உடுத்துவாய். அவர்களுக்கு அருள்பொழிவு செய்து, அவர்களைத் திருநிலைப்படுத்தி அர்ப்பணிப்பாய். அவர்கள் எனக்கு குருத்துவப்பணி புரிவார்கள்.42 அவர்களின் பிறந்தமேனி மறைவதற்காக இடுப்பு முதல் தொடைகள் வரை நீண்டிருக்கும் அளவில் மெல்லிய நார்ப்பட்டால் கால்சட்டைகள் செய்வர்.43 சந்திப்புக்கூடாரத்திற்குப் போகும்போதும், தூயதலத்தில் பணிபுரியுமாறு பலிபீடத்தை அணுகும்போதும், ஆரோனும் அவன் புதல்வர்களும் இவற்றை அணிந்திருப்பார்கள். இல்லாவிடில், அவர்கள் குற்றத்துக்குள்ளாகிச் சாவார்கள். அவனுக்கும், அவனுக்குப்பின் அவன் வழிமரபினர்க்கும், மாறாத கட்டளை இது.யாத்திராகமம் 28 ERV IRV TRV