யாத்திராகமம் 22 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆட்டையோ மாட்டையோ ஒருவர் திருடி வெட்டி விட்டால் அல்லது விற்றுவிட்டால் ஒரு மாட்டுக்கு ஐந்து மாடு என்றும், ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடு என்றும் ஈடுகட்டுவார்.⒫2 திருடர் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டுத் தாக்குண்டு இறந்து போனால் அவருக்காக இரத்தப்பழி இல்லை.3 கதிரவன் உதித்தபின் இது நிகழ்ந்திருந்தால், இரத்தப்பழி உண்டு. அவர் ஈடுகொடுத்தேயாக வேண்டும். திருட்டுக்கு ஈடாக அவரிடம் எதுவுமே இல்லையெனில் அவர் விற்கப்படுவார்.4 அவர் திருடின மாடோ கழுதையோ ஆடோ உயிருடன் அவர் கையில் கண்டுபிடிக்கப்பட்டால் இருமடங்காக ஈடு கொடுப்பார்.⒫5 ஒருவர் இன்னொருவர் வயலிலோ, திராட்சைத் தோட்டத்திலோ கால்நடைகளை மேயவிட்டால், அல்லது அவிழ்த்து விட்டவை பிறர் வயலில் மேய்ந்துவிட்டால், தம் வயலின் சிறந்த விளைச்சலினின்றும், தம் திராட்சைத் தோட்டத்தின் சிறந்த பலனினின்றும் ஈடுசெய்வார்.⒫6 தீப்பிடித்து, முட்புதர்களில் பரவி, தானியக் குவியலோ விளைந்த பயிரோ வயலோ எரிந்துவிட்டால், தீயை மூட்டியவர் ஈடுகொடுத்தே ஆகவேண்டும்.⒫7 ஒருவர் பிறரிடம் பணத்தையோ, பொருள்களையோ பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்க, அவை அம்மனிதர் வீட்டிலிருந்து களவுபோய், திருடர் கண்டுபிடிக்கப்பட்டால் திருடர் இருமடங்காக ஈடு செய்ய வேண்டும்.8 திருடர் கண்டுபிடிக்கப்படாவிடில், பிறர் பொருள்களில் வீட்டுத் தலைவர் கை வைத்தாரா இல்லையா என மெய்ப்பிக்க அவர் கடவுள்முன் நிற்பார்.⒫9 நம்பிக்கைத்துரோகம் எதிலும் — அது மாடு, கழுதை, ஆடு, உடை அல்லது வேறு எதுபற்றியதானாலும் — ‘இது என்னுடையது’ என இருவரும் கூறினால் வழக்கு கடவுளிடம் வர வேண்டும். கடவுள் யாரைக் குற்றவாளியாகத் தீர்ப்பிடுவாரோ அவர் இருமடங்காகப் பிறருக்கு ஈடுசெய்ய வேண்டும்.⒫10 ஒருவர் பிறரிடம் கழுதை, மாடு, ஆடு, அல்லது வேறொரு விலங்கைப் பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்கையில் அது இறந்துபோனால், அல்லது காயப்பட்டுவிட்டால், அல்லது யாரும் பார்க்காத வேளையில் ஓட்டிச் செல்லப்பட்டால்,11 அவர் பிறரது உடைமையில் தாம் கைவைக்கவில்லை என்பதற்கு ஆண்டவர்மேல் இடும் ஆணை அவர்களுடைய வழக்கை முடிவு செய்யும். உரிமையாளர் அதை ஏற்றுக் கொள்வார். மற்றவர் ஈடுகொடுக்க வேண்டியதில்லை.12 ஆனால், அவருடன் இருக்கும்போது அது திருடப்பட்டால், அதன் உரிமையாளருக்கு அவர் ஈடு செய்ய வேண்டும்.13 அது விலங்கினங்களால் பீறித் துண்டாக்கப்பட்டிருந்தால், பீறப்பட்டத்தைச் சான்றாகக் கொண்டுவருவார். அவர் ஈடுசெய்ய வேண்டியதில்லை.⒫14 ஒருவர் பிறரிடமிருந்து இரவலாகப் பெற்றுக்கொண்டது, உரிமையாளர் அதன் அருகில் இல்லாத வேளையில் காயப்பட்டுவிட்டால் அல்லது இறந்துவிட்டால் அவர் அதற்கு ஈடு செய்யத்தான் வேண்டும்.15 உரிமையாளர் அதன்கூட இருந்திருந்தால், அவர் ஈடுகொடுக்க வேண்டியதில்லை. அது வாடகைக்கு எடுக்கப்பட்டதென்றால் வாடகை செலுத்தப்பட்டால் போதும்.16 திருமண ஒப்பந்தமாகாத கன்னிப்பெண்ணை ஒருவன் வசப்படுத்தி அவளோடு படுத்தால், மனைவிக்குரிய பரியம் கொடுத்து அவளை வைத்துக் கொள்ள வேண்டும்.17 ஆனால், அவள் தந்தை அவளை அவனுக்குக் கொடுக்க முற்றிலும் மறுத்தால், கன்னிப் பெண்ணுக்குரிய பரியத்துக்குச் சமமான பணம் அவன் கட்டவேண்டும்.⒫18 சூனியக்காரி எவளையும் உயிரோடு விட்டுவைக்காதே.⒫19 விலங்கோடு புணர்பவன் எவனும் கொல்லப்படவே வேண்டும்.⒫20 ஆண்டவருக்கேயன்றி, வேறு தெய்வங்களுக்குப் பலியிடுபவன் அழித்தொழிக்கப்பட வேண்டும்.⒫21 அந்நியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில், எகிப்து நாட்டில் நீங்களும் அந்நியராயிருந்தீர்கள்.22 விதவை, அநாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.23 நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.24 மேலும், என்சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர்.⒫25 உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே.26 பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு.27 ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில், நான் இரக்கமுடையவர்.⒫28 கடவுளை நீ பழிக்காதே. உன் மக்களின் தலைவனைச் சபிக்காதே.29 உன் பெருகிய விளைச்சலையும், வழிந்தோடும் இரசத்தையும் எனக்குப் படைக்கத் தாமதிக்காதே. உன் புதல்வருள் தலைப்பேறானவனை எனக்கு அர்ப்பணிப்பாய்.30 உன் மாடுகள், ஆடுகள் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் நீ அவ்வாறே செய்வாய். குட்டி ஏழு நாள் தன் தாயோடு இருக்கட்டும். எட்டாம் நாளன்று அதை எனக்கு அளிப்பாய்.31 என் முன்னிலையில் நீங்கள் தூயவராய் இருங்கள். வயல் வெளியில் பீறப்பட்டுக் கிடக்கும் இறைச்சியை நீங்கள் உண்ண வேண்டாம். அதை நாய்களுக்குப் போடுங்கள்.யாத்திராகமம் 22 ERV IRV TRV