1 “ஒரு மாட்டையோ, ஆட்டையோ திருடுகிற மனிதனை நீ எவ்வாறு தண்டிக்க வேண்டும்? அம்மனிதன் அந்த மிருகத்தைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ, அதனைத் திரும்பக் கொடுக்க முடியாது. எனவே, அவன் திருடிய மாட்டுக்குப் பதிலாக ஐந்து மாடுகளைக் கொடுக்க வேண்டும். அல்லது திருடிய ஒரு ஆட்டிற்காக நான்கு ஆடுகளைக் கொடுக்க வேண்டும். திருட்டுக்காக பணம் கொடுக்க வேண்டும்.
2 அவனுக்கு கொடுக்க எதுவும் சொந்தமில்லையென்றால், அவன் அடிமையாக விற்கப்பட வேண்டும். ஆனால் அந்த மனிதன் தான் திருடிய மிருகத்தை வைத்திருந்தானாகில், தான் திருடிய ஒவ்வொரு மிருகத்திற்காகவும் இரண்டு மிருகங்களைக் கொடுக்க வேண்டும். அது மாடா, கழுதையா, அல்லது ஆடா என்பது ஒரு பொருட்டல்ல. “இரவில் திருடும்படி ஒருவன் ஒரு வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்யும்போது திருடன் கொல்லப்பட்டால், அவன் கொலைக்கு யாரும் பொறுப்பாளி அல்ல. ஆனால் அது பகலில் நடந்தால், அவனைக் கொன்றவன் கொலைக் குற்றவாளியாவான்.
5 “ஒருவன் தன் வயலில் அல்லது திராட்சைத் தோட்டத்தில் நெருப்பு மூட்டக் கூடும். அந்த நெருப்பு பரவி, அடுத்த வயலிலோ அல்லது திராட்சைத் தோட்டத்திலோ பற்றிக்கொள்ள நேர்ந்தால் அயலானின் நஷ்டத்திற்கு ஈடாக அவன் விளைச்சலின் சிறந்த பலனுக்கு ஈடான பணத்தைக் கொடுக்க வேண்டும்.
6 “ஒருவன் வயலின் முட்புதர்களை எரிக்கும்படி நெருப்பு வைக்கக்கூடும். அது பரவி அடுத்தவனின் வயலிலுள்ள பயிர்களையோ, தானியத்தையோ அழித்தால், அழிந்து போனவற்றின் விலையை அழிவுக்குக் காரணமாக இருந்தவன் கொடுக்க வேண்டும்.
7 “ஒரு மனிதன் தனக்குத் தேவையான பணத்தையோ அல்லது பொருட்களையோ அடுத்த வீட்டுக்காரனிடம் கொடுத்து வைக்கச் சொல்லலாம். அவ்வீட்டிலிருந்து அப்பணமோ அல்லது பொருளோ திருடப்பட்டுவிட்டால் திருடனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். திருடன் அகப்பட்டால் அவன் திருடிய பொருளின் இரண்டு மடங்கு விலையைக் கொடுக்க வேண்டும்.
8 ஆனால் திருடன் அகப்படாமல் வீட்டின் எஜமான் குற்ற வாளியாக இருந்தால் தேவன் நியாயந்தீர்ப்பார். வீட்டின் எஜமானன் தேவனுக்கு முன்னே செல்லும்போது, அவன் திருடனாக இருந்தால் தேவன் அவனைத் தண்டிப்பார்.
9 “காணாமற்போன மாடு, கழுதை, ஆடு அல்லது துணிகளைக் குறித்து இருவர் முரண்பட்டால் நீ என்ன செய்ய வேண்டும்? ஒருவன், ‘இது என்னுடையது’ என்றும் இன்னொருவன், ‘இல்லை, அது எனக்குரியது’ என்றும் கூறுகிறான். இருவரும் தேவனுக்கு முன்னே போக வேண்டும். யார் குற்றவாளி என்பதைத் தேவன் தீர்மானிப்பார். குற்றவாளியான மனிதன் அப்பொருளின் இருமடங்கு விலையை மற்றவனுக்குக் கொடுக்கவேண்டும்.
10 “ஒருவன் அடுத்தவனிடம் தனது மிருகத்தைச் சில காலம் கவனித்துக்கொள்ளும்படியாக விடாலாம். அது கழுதை அல்லது மாடு அல்லது ஆடாக இருக்கலாம். யாரும் பார்க்காதபோது ஒருவன் அதனைக் காயப்படுத்தவோ, கொல்லவோ, திருடவோ செய்தால் நீ என்ன செய்ய வேண்டும்?
11 அதைப் பெற்றுகொண்டவன் அம்மிருகத்தைத் தான் திருடவில்லை என்பதை விளக்க வேண்டும். அது உண்மையானால் கர்த்தரின் சந்நிதியில் சென்று நான் திருடவில்லை என்று ஆணையிட வேண்டும். மிருகத்தின் உரிமையாளனும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்டை வீட்டுக்காரன் அந்த மிருகத்திற்காக எந்தப் பணமும் செலுத்த தேவையில்லை.
12 ஆனால் அண்டை வீட்டுக்காரன் மிருகத்தைத் திருடியிருந்தால், அவன் அதற்கான விலையை உரிமையாளனுக்குக் கொடுக்க வேண்டும்.
13 காட்டு மிருகங்கள் அதனைக் கொன்றிருந்தால் அதன் உடலைச் சாட்சியாக அண்டை வீட்டுக்காரன் எடுத்துவர வேண்டும். கொல்லப்பட்ட மிருகத்துக்காக அவன் விலை கொடுக்க வேண்டாம்.
14 “அண்டை வீட்டுக்காரனிடமிருந்து ஒருவன் எதையேனும் இரவல் பெற்றுக்கொண்டால், அவனே அப்பொருளுக்குப் பொறுப் பாளியாவான். ஒரு மிருகம் காயமுற்றாலோ அல்லது மரித்தாலோ அண்டை வீட்டுக்காரன் அம்மிருகத்தின் விலையை உரிமையாளனுக்குக் கொடுக்க வேண்டும். அப்பொருளின் உரிமையாளன் அங்கு இல்லாதிருந்தால், அண்டை வீட்டுக்காரன் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
15 ஆனால் உரிமையாளனே அங்கிருந்தால் அயலான் அதற்கு பொறுப்பேற்க அவசியமில்லை. அண்டை வீட்டுக்காரன் அம்மிருகத்தை வேலைக்குப் பயன்படுத்தும்போது அதற்குக் குத்தகை செலுத்தும் பட்சத்தில் அம்மிருகம் மரித்தாலோ அல்லது காயப்பட்டாலோ அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. மிருகத்தைப் பயன்படுத்தியதற்காக அவன் ஏற்கெனவே கொடுத்த பணமே போதுமானது.
16 “மணமாகாத கன்னியிடம் ஒரு மனிதன் பாலின உறவு கொண்டால், அவன் அவளை மணந்துகொள்ள வேண்டும். அப்பெண்ணின் தந்தைக்குப் பரிசுப் பொருளை அவன் கொடுக்க வேண்டும்.
17 பெண்ணின் தந்தை அவனைத் தன் மகள் மணக்கச் சம்மதிக்காவிட்டாலும் கூட, அவன் அப்பணத்தைக் கொடுத்துத் தீர வேண்டும். அவளுக்குரிய முழு ஈட்டுப் பொருளையும் அவன் செலுத்தியே ஆகவேண்டும்.
18 “எந்தப் பெண்ணையும் மந்திரம் செய்ய நீ அனுமதிக்கக் கூடாது. அவள் மந்திரம் செய்தால் அவள் வாழ அனுமதிக்காதே.
19 “மிருகத்தோடு யாரும் உடலுறவு கொள்ளலாகாது. அவ்வாறு செய்யும் மனிதன் கொல்லப்பட வேண்டும்.
20 “பொய்த் தேவர்களுக்கு ஒருவன் பலி செலுத்தினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே நீங்கள் பலி செலுத்த வேண்டும்.
21 “முன்பு எகிப்தில் அந்நியர்களாக இருந்தீர்கள் என்பதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். எனவே, உங்கள் நாட்டில் வாழும் எந்த அந்நியனையும் ஏமாற்றவோ, காயப்படுத்தவோ கூடாது.
22 “கணவனை இழந்த பெண்களுக்கும், பெற்றோரற்ற குழந்தைகளுக்கும் எந்தத் தீமையும் செய்யாதீர்கள்.
23 விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் ஏதேனும் தீங்கு செய்தீர்களானால் நான் அதை அறிவேன். அவர்கள் பட்ட துன்பத்தைப்பற்றிக் கூறும்போது, நான் கேட்பேன்.
24 எனக்கு மிகுந்த கோபம் உண்டாகும். உங்களைப் பட்டயத்தால் கொல்லுவேன். அப்போது உங்கள் மனைவியர் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் அநாதைகளாவார்கள்.
25 “என் ஜனங்களில் ஏழையான ஒருவனுக்கு நீங்கள் கடனாகப் பணம் கொடுத்தால், அதற்கு வட்டி கேட்காதீர்கள். உடனே அப்பணத்தைத் திருப்பும்படியாக வற்புறுத்தக் கூடாது.
26 நீ கொடுக்கவிருக்கும் பணத்திற்கு அடமானமாக தன் மேற்சட்டையை ஒருவன் கொடுத்தால் சூரியன் மறையும் முன்னர் அந்த மேற்சட்டையைத் திரும்பக் கொடுத்து விடவேண்டும்.
27 அம்மனிதனுக்கு மேற்சட்டை இல்லாமலிருந்தால் உடலைப் போர்த்திக்கொள்ள எதுவுமிராது. அவன் தூங்கும்போது சளிபிடிக்கும். அவன் என்னைக் கூப்பிட்டால் நான் அவனைக் கேட்பேன். நான் இரக்கம் பொருந்தியவராக இருப்பதால் நான் அவனுக்கு செவிகொடுப்பேன்.
28 “நீங்கள் தேவனையோ, ஜனங்கள் தலைவர்களையோ சபிக்கக் கூடாது.
29 “அறுவடையின்போது நீங்கள் முதல் தானியத்தையும், முதல் பழங்களின் ஈற்றையும் எனக்குக் கொடுக்க வேண்டும். வருடத்தின் இறுதிவரைக்கும் காத்திராதீர்கள். “உங்கள் முதற்பேறான மகன்களை எனக்குக் கொடுங்கள்.
30 முதலில் பிறந்த ஆடுகளையும், மாடுகளையும் எனக்குக் கொடுங்கள். முதற்பேறான குட்டியானது தாயுடன், ஏழுநாட்கள் இருக்கட்டும், எட்டாவது நாள் அதை எனக்குக் கொடுங்கள்.
31 “நீங்கள் என் விசேஷ ஜனங்கள். எனவே கொடிய மிருகங்களால் கொல்லப்பட்ட விலங்குகளின் மாமிசத்தை உண்ணாதீர்கள். அந்த மரித்த மிருகத்தை நாய்கள் தின்னட்டும்.
யாத்திராகமம் 22 ERV IRV TRV