1 இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.
2 அவர்கள் ரெவிதீமிலிருந்து பயணம் புறப்பட்டு, சீனாய் வனாந்திரத்திற்கு வந்து, அந்த வனாந்திரத்தில் முகாமிட்டார்கள்; இஸ்ரவேலர்கள் அங்கே மலைக்கு எதிராக முகாமிட்டார்கள்.
3 மோசே தேவனிடம் ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தார்களுக்குச் சொல்லவும், இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,
4 நான் எகிப்தியர்களுக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய இறக்கைகளின்மேல் சுமந்து, உங்களை என் அருகிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
5 இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
6 நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்ஜியமும் பரிசுத்த தேசமுமாக இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.
7 மோசே வந்து மக்களின் மூப்பர்களை அழைத்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.
8 அதற்கு மக்கள் எல்லோரும் ஒன்றாக, கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று மறுமொழி சொன்னார்கள். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடம் தெரிவித்தான்.
9 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடு பேசும்போது மக்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடம் வருவேன் என்றார். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான்.
10 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மக்களிடம் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து,
11 மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும்; மூன்றாம் நாளில் கர்த்தர் எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக சீனாய் மலையின்மேல் இறங்குவார்.
12 மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
13 ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியப்பட்டு, அல்லது வில் எய்யப்பட்டுச் சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடு வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாகத் தொனிக்கும்போது, அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரவேண்டும் என்றார்.
14 மோசே மலையிலிருந்து இறங்கி, மக்களிடம் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள்.
15 அவன் மக்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியிடம் சேராமல் இருங்கள் என்றான்.
16 மூன்றாம் நாள் அதிகாலையில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டானது; முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள்.
17 அப்பொழுது மக்கள் தேவனுக்கு எதிராகபோக, மோசே அவர்களை முகாமிலிருந்து புறப்படச்செய்தான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
18 கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
19 எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாகத் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
20 கர்த்தர் சீனாய்மலையிலுள்ள உச்சியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் உச்சியில் வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: மக்கள் பார்ப்பதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடம் வராதபடியும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடியும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.
22 கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களை அழிக்காதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.
23 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், மக்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.
24 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், மக்களும், கர்த்தர் தங்களை அழிக்காதபடி, எல்லையைக் கடந்து கர்த்தரிடம் வராமல் இருக்கவேண்டும் என்றார்.
25 அப்படியே மோசே இறங்கி மக்களிடம் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.
யாத்திராகமம் 19 ERV IRV TRV