1 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ பார்வோனிடம் போ. நான் அவன் மனத்தையும் அவன் அலுவலரின் மனத்தையும் கடினப்படுத்தியதன் நோக்கம்:2 என் அருஞ்செயல்களை அவன் முன்னிலையில் நிலைநாட்டுவதும், எகிப்துக்கு எதிராக நான் போராடி அவர்களிடையே நான் செய்த அருஞ்செயல்கள் பற்றி நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வதும் ஆகும். இதன் மூலம் நானே ஆண்டவர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்றார்.⒫3 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் சென்று அவனை நோக்கி, “எபிரேயரின் கடவுளான ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; எவ்வளவு காலம் நீ எனக்குப் பணிய மறுப்பாய்? எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு.4 ஏனெனில், நீ என் மக்களை அனுப்பிவிட மறுத்தால்,5 நாளைய தினமே உன் எல்லைகளுக்குள் வெட்டுக்கிளிகள் வரச்செய்வேன். யாருமே தரையைப் பார்க்கமுடியாத அளவுக்கு அவை நாட்டை நிரப்பிவிடும். கல்மழைக்குத் தப்பி உங்களுக்கென எஞ்சி நிற்பதை அவை தின்று தீர்க்கும். வயல்வெளியில், தளிர்விடும் உங்கள் மரங்கள் அனைத்தையும் அவை தின்றழிக்கும்.6 வீடுகளும், உன் அலுவலர் அனைவரின் வீடுகளும், எகிப்தியர் அனைவரின் வீடுகளும் அவற்றால் நிரம்பும். இது, உன் தந்தையரும் உன் தந்தையரின் தந்தையரும் இந்நாட்டில் வாழத் தொடங்கிய நாள்முதல் இன்று வரை கண்டிராத ஒன்றாகும்” என்றார். பின்னர், மோசே பார்வோனை விட்டகன்றார்.⒫7 பார்வோனின் அலுவலர் அவனை நோக்கி, “எவ்வளவு காலம் இவன் நமக்குக் கண்ணியாக அமைவானோ? தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யும்படி அந்த மனிதர்களை நீர் அனுப்பிவிடும். எகிப்து அழிந்து கொண்டிருப்பது இன்னும் உமக்குத் தெரியவில்லையா?” என்றனர்.8 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் அழைத்துக் கொண்டுவரப்பட்டனர். அவன் அவர்களை நோக்கி, “போங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால், போகவேண்டியவர் யார் யார்?” என்று கேட்டான்.9 அதற்கு மோசே, “எங்களிடையேயுள்ள இளைஞரோடும் முதியவரோடும் நாங்கள் போவோம். எங்கள் புதல்வரோடும் புதல்வியரோடும், எங்கள் ஆட்டுமந்தையோடும் எங்கள் மாட்டு மந்தையோடும் நாங்கள் போவோம். ஏனெனில், இது எங்களுக்கு ‘ஆண்டவரின் திருவிழா’ ஆகும்” என்றார்.10 பார்வோன் அவர்களை நோக்கி, “உங்களை உங்கள் குழந்தைகளோடு நான் அனுப்பி வைத்தால், ஆண்டவர் தாம் உங்களைக் காக்க வேண்டும்! பாருங்கள், உங்கள்முன் உள்ளது தீமையே!11 இதெல்லாம் வேண்டாம். உங்களில் ஆண்கள் மட்டும் போய் ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். நீங்கள் விரும்பியதும் இதுவே!” என்றான். இதன் பின் பார்வோன் அவர்களைத் தன் முன்னிலையிலிருந்து துரத்திவிட்டான்.12 ஆண்டவர் மோசேயை நோக்கி, “கல் மழைக்குத் தப்பி நாட்டில் நிற்கும் எல்லாப் பயிர் பச்சைகளையும் தின்று தீர்க்க எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வரும்படியாக எகிப்து நாட்டின் மேல் உன்கையை நீட்டு” என்றார்.13 மோசே எகிப்து நாட்டின்மேல் தம் கோலை நீட்டவே, ஆண்டவரும் அன்றைய பகல் இரவு முழுவதும் நாட்டில் கீழ்க்காற்று வீசச்செய்தார். காலையானபோது கீழ்க்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தது.14 மிகப்பெருந்திரளான வெட்டுக்கிளிகள் எகிப்து நாடெங்கும் வந்திறங்கி எகிப்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவின. இதுபோன்று அதற்கு முன்போ பின்போ இருந்ததில்லை.15 அவை நாடெங்கும் நிரம்பிவிட்டதால், நாடே இருண்டு போயிற்று. கல்மழைக்குத் தப்பி நாட்டில் நின்றிருந்த பயிர் பச்சை முழுவதையும், மரத்தின் பழங்கள் அனைத்தையும் அவை தின்றுவிட்டன. எகிப்து நாடெங்குமே மரங்களிலும் வயல்வெளி பயிர்களிலும் பச்சையாக எதுவுமே விட்டுவைக்கப்படவில்லை.16 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக அழைத்து அவர்களை நோக்கி, “உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும் தவறு செய்து விட்டேன்.17 இந்த ஒருமுறையும் என்பிழையைப் பொறுத்துக்கொண்டு இந்தச் சாவையும் என்னிடமிருந்து அகற்றிவிடும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்” என்றான்.18 மோசேயும் பார்வோனிடமிருந்து அகன்று ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் மிக வலுவான மேல்காற்று வீசச் செய்தார்.19 அது வெட்டுக்கிளிகளை வாரிக்கொண்டு அவற்றைச் செங்கடலில்* வீசியெறிந்தது. வெட்டுக்கிளிகளில் ஒன்றைக்கூட அது எகிப்தின் எல்லைகளுக்குள் விட்டுவைக்கவில்லை.20 ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப்போகச் செய்தார். அவனும் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.21 மீண்டும் ஆண்டவர் மோசேயிடம், “எகிப்து நாட்டின்மேல் இருள் ஏற்படவும் இருளில் அவர்கள் தடுமாறவும் உன் கையை வானோக்கி நீட்டு” என்றார்.22 மோசே வானத்தை நோக்கித் தம் கையை நீட்டினார். மூன்று நாள்களாக எகிப்து நாட்டைக் காரிருள் கவ்வியிருந்தது.23 மூன்று நாள்களாக ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. தான் அமர்ந்த இடத்திலிருந்து எவனும் எழும்பவும் இல்லை. மாறாக, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் உறைவிடங்களில் வெளிச்சம் இருந்தது.24 பார்வோன் மோசேயை வரவழைத்து, “நீங்கள் போய் ஆண்டவருக்கு வழிபாடு செலுத்துங்கள். உங்கள் ஆட்டுமந்தையையும் மாட்டு மந்தையையும் மட்டும் விட்டுச் செல்லுங்கள். உங்களுடன் உங்கள் குழந்தைகளும்கூடப் போகலாம்” என்று சொன்னான்.25 அதற்கு மோசே, “எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் செலுத்துவதற்கான பலிகளையும் எரிபலிகளையும் எங்கள் கையில் விட்டுவிடும்.26 எங்கள் கால்நடைகள் எங்களோடு வரவேண்டும்; ஒன்றுகூட இங்கே தங்கலாகாது. எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செலுத்தத் தேவையானதை நாங்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்வோம். ஆண்டவருக்கு எப்படி வழிபாடு செலுத்துவோம் என்று நாங்கள் அங்குச் செல்லும்வரை எங்களுக்கே தெரியாது” என்றார்.27 ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப் போகச் செய்ததால், அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை.28 பார்வோன் மோசேயை நோக்கி, “என்னிடமிருந்து போய்விடு. இனிமேல் நீ என் முகத்தில் விழிக்காதபடி பார்த்துக்கொள். ஏனெனில், என் முகத்தில் விழிக்கும் நாளில் நீ சாவாய்” என்றான்.29 அதற்கு மோசே, “நீர் கூறியதற்கேற்ப நான் இனிமேல் உம் முகத்தில் விழிக்கப்போவதில்லை” என்றார்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.