1 நான் கர்த்தரைச் சார்ந்தவனாதலால் சிறையில் இருக்கிறேன். தேவன் உங்களைத் தம் மக்களாகத் தேர்ந்தெடுத்தார். தேவனுடைய மக்கள் வாழும் முறைப்படி நீங்களும் வாழவேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
2 எப்போதும் பணிவும், சாந்தமும் உடையவர்களாக இருங்கள். பொறுமையோடு ஒருவரை ஒருவர் அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.
3 நீங்கள் ஆவியின் மூலமாகச் சமாதானத்துடன் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள். இதே வழியில் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவாருங்கள். சமாதானம் உங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கட்டும்.
4 ஒரே சரீரமும் ஒரே ஆவியும் தான் உள்ளது. ஒரே பொதுவான விசுவாசம்கொள்ள தேவன் உங்களை அழைக்கிறார்.
5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் உள்ளன.
6 எல்லாருக்கும் ஒரே பிதாவான தேவன் உண்டு. அவர் எல்லாவற்றையும் ஆள்பவர். அவர் எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் இருப்பவர்.
7 நம்மில் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து ஒரு சிறப்புப் பரிசு கொடுத்திருக்கிறார், கிறிஸ்து ஒவ்வொருவருக்கும் எதைக் கொடுக்க விரும்புகிறாரோ அதையேԔ அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.
8 அதனால் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. அவர் உயரத்தில் ஏறி ஆகாயத்துக்குள் சென்றார். அவர் சிறைபட்டவர்களை சிறையாக்கி, அவர்களுக்கு வரங்களையும் கொடுத்தார்.
9 அவர் மேலே சென்றார் என்று சொல்லும்போது அதன் பொருள் என்ன? முதலில் அவர் பூமிக்குக் கீழிறங்கி வந்தார் என்பது பொருளாகிறது.
10 எனவே இயேசு இறங்கி வந்தார். பின் அவரே மேலேயும் சென்றார். அவர் எல்லா வானங்களுக்கும் மேலே ஏறிச் சென்றார். கிறிஸ்து தாமாகவே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக அப்படிச் செய்தார்.
11 அதே கிறிஸ்து மக்களுக்கு வரங்களைக் கொடுத்தார். சிலரை அப்போஸ்தலராக்கினார், சிலரை தீர்க்கதரிசிகளாக்கினார், சிலரை சுவிசேஷகர்களாக்கினார். சிலரை தேவனின் மக்களைப் பற்றி அக்கறைகொள்ளும் மேய்ப்பர்களாக்கினார், சிலரை போதிப்பவர்களாக்கினார்.
12 கிறிஸ்துவின் பரிசுத்தவான்களைச் சேவை செய்ய தேவன் பல வரங்களைக் கொடுத்தார். கிறிஸ்துவின் சபையானது வல்லமை பெறவே அவர் வரங்களைக் கொடுத்தார்.
13 நாம் அனைவரும் அதே நம்பிக்கையில் ஒன்றுபட வேண்டும். தேவனுடைய குமாரனைப் பற்றிய அறிவைப் பெறவேண்டி, அதுவரை இவ்வேலை தொடரவேண்டும். நாம் முழுமை பெற்றவர்களாக மாற வேண்டும். நாம் கிறிஸ்துவைப்போல் ஆகும் வரை வளர வேண்டும். அவரது முழுமையைப் பெற வேண்டும்.
14 நாம் இன்னும் குழந்தைகள் போல் இருப்பதை நிறுத்த வேண்டும். அலைகளால் அலைக்கழிக்கப்படும் கப்பலைப்போல சிலர் அடிக்கடி மனம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களைப் போன்று இருப்பதையும் நிறுத்த வேண்டும். நம்மைத் தந்திரமாகச் சிக்கவைக்க சிலர் முயலும்போது நாம் அவர்கள் பின்னால் போகக் கூடாது.
15 நாம் அன்புடன் உண்மையை மட்டும் பேசுவோம். எல்லா வழிகளிலும் நாம் இயேசுவைப் போன்று வளருவோம். கிறிஸ்து தலையும் நாம் சரீரமும் ஆவோம்.
16 இந்த முழு சரீரமும் அவரைச் சார்ந்தது. எல்லா உறுப்புகளும் ஒன்று சேர்ந்து வளருகிறது. ஒவ்வொரு உறுப்பும் அதனதன் வேலையைச் செய்து வருகின்றது. அனைத்தும் சேர்ந்து முழுசரீரம் உருவாகி, அன்போடு வலிமை கொண்டதாக வளர உதவுகிறது.
17 கர்த்தருக்காக நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன். நான் எச்சரிப்பதாவது: நம்பிக்கை அற்றவர்களைப் போன்று நீங்களும் தொடர்ந்து வாழக் கூடாது. அவர்களது சிந்தனைகள் பயனற்றவை.
18 அந்த மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களின் மனம் மூடியது, இதயம் கடினமானது, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. எனவே தேவன் கொடுக்கிற வாழ்க்கை அவர்களுக்கு இல்லை.
19 அவர்கள் தங்கள் வெட்க உணர்வை இழந்துவிட்டனர். தீயவற்றைச் செய்வதற்காகவே தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்துகிறார்கள். எல்லா வகையான கெட்ட செயல்களையும் செய்ய அவர்கள் மேலும் மேலும் விரும்புகிறார்கள்.
20 ஆனால் நீங்கள் கிறிஸ்துவின் மூலமாகக் கற்றுக் கொண்டவை அந்தக் கெட்டவற்றைப் போன்றதல்ல.
21 அவரைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது எது என்பது எனக்குத் தெரியும். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு உண்மையானது கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆமாம், அந்த உண்மை இயேசுவிடம் உள்ளது.
22 உங்கள் பழைய வாழ்க்கை முறைகளை விட்டுவிடவும், எப்போதும் தீமையைத் தருகிற பழைய குணங்களை ஒதுக்கவும் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அது மேலும் மோசமாகிவிட்டது. ஏனென்றால் அவர்கள் தீயவற்றால் முட்டாளாக்கப்பட்டு அவற்றையே புதுப்பிக்க விரும்புகிறார்கள்.
23 ஆனால் நீங்கள் உங்கள் இதயத்தில் புதியவர்களாகும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
24 நீங்கள் புதிய மனிதனாக இருக்கக் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்தப் புதிய மனிதன் தேவனைப்போன்று செய்யப்படுகிறான். உண்மையான நீதியிலும், பரிசுத்தத்திலும் இருக்கிறான்.
25 எனவே நீங்கள் பொய் சொல்வதை நிறுத்துங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே சரீரத்தின் பல்வேறு உறுப்புகளாகச் சேர்ந்திருக்கிறோம்.
26 உங்கள் கோபம் உங்களைப் பாவம் செய்யக் கொண்டுசெல்லுமளவு அனுமதிக்காதீர்கள். நாள் முழுவதும் கோபம் உடையவர்களாக இருக்காதீர்கள்.
27 உங்களை வீழ்த்துவதற்குரிய வழியைப் பிசாசுக்குக் கொடுக்க வேண்டாம்.
28 ஒருவன் திருடுகின்றவனாக இருந்தால் தன் திருட்டை நிறுத்துவானாக. அவன் வேலை செய்யத் தொடங்கட்டும். அவன் தனது கைகளை நல்ல செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தட்டும். பிறகு ஏழைகளோடு பகிர்ந்துகொள்ள அவனுக்கென்று சில இருக்கும்.
29 நீங்கள் பேசும்போது தீயவற்றைச் சொல்லாதீர்கள். ஆனால் மற்றவர்களுக்குப் பயன் தரத்தக்கதும், மற்றவர்களைப் பலமுள்ளதாக்குகிறவைகளை மட்டும் பேசுங்கள். அதனால் உங்கள் பேச்சைக் கேட்பவர்களுக்கு உங்கள் பேச்சு ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும்.
30 பரிசுத்த ஆவியானவரைச் சோகப்படுத்தாதீர்கள். நீங்கள் தேவனுக்குரியவராக இருக்கிறீர்கள் என்பதற்கு ஆவியானவரே சான்றாக உள்ளார். தேவன் உங்களுக்குச் சரியான நேரத்தில் விடுதலை தருவார் என்பதைக் காட்டவே தேவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குத் தந்துள்ளார்.
31 கசப்பும், கோபமும், மூர்க்கமும் அடையாதீர்கள். கோபத்தில் சத்தம் இடாதீர்கள். கடுஞ்சொற்களைச் சொல்லாதீர்கள். பாவங்களை செய்யாதீர்கள்.
32 ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருங்கள். கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்துவிடுவதைப்போல நீங்களும் மற்றவர்களை மன்னித்துவிடுங்கள்.
எபேசியர் 4 ERV IRV TRV