எபேசியர் 2 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 கடந்த காலத்தில் உங்கள் ஆன்மீகமான வாழ்வு செத்துப்போயிற்று. இதற்கு, உங்களது பாவங்களும், தேவனுக்கு எதிரான உங்களது கெட்ட செயல்களுமே காரணம்
2 ஆம், கடந்த காலத்தில் பாவங்களில் வாழ்ந்தீர்கள். உலகம் வாழ்கிறபடி வாழ்ந்தீர்கள். பூமியில் தீய சக்திகளின் ஆள்வோர்களைப் பின்பற்றினீர்கள். தேவனுக்குக் கீழ்ப்படிய மறந்த அந்த மக்களுக்குள் தீய ஆவி வேலை செய்கிறது.
3 கடந்த காலத்தில் நாம் அனைவரும் அவர்களைப் போலவே வாழ்ந்தோம். நமது மனவிருப்பப்படி பாவத்தில் வாழ்ந்தோம். நமது மனமும் சரீரமும் விரும்பியதையே நாம் செய்தோம். நாம் தீயவர்களாய் இருந்தோம். நமது வாழ்க்கை முறையின் காரணமாக தேவனின் கோபத்தால் நாம் துன்பப்பட வேண்டும். மற்ற அனைத்து மக்களைப் போலவே நாமும் இருந்தோம்.
4 ஆனால் தேவனுடைய இரக்கம் மிகப் பெரியது. தேவன் நம்மை மிகுதியாக நேசித்தார்.
5 ஆன்மீகப்படி நாம் இறந்துபோனோம். தேவனுக்கு எதிரான காரியங்களைச் செய்ததால் இறந்து போனோம். தேவன் கிறிஸ்துவுடன் புது வாழ்க்கையைத் தந்தார். தேவனின் கிருபையால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்.
6 கிறிஸ்துவோடு நம்மையும் தேவன் உயிர்த்தெழச் செய்தார். பரலோகத்தில் நமக்கென்று இருக்கைகளையும் ஏற்படுத்தினார். இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிற நமக்காக தேவன் இதைச் செய்தார்.
7 தேவன் இதைச் செய்ததால் எதிர்காலம் முழுவதும் அவர் தனது செல்வம் மிக்க இரக்கத்தையும் உயர்ந்த தயவையும் காட்டுவார். அவர் இதையும் கிறிஸ்துவுக்குள் நமக்குச் செய்வார்.
8 தேவனுடைய இரக்கத்தால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். அந்தக் கிருபையை நீங்கள் உங்களது விசுவாசத்தினால் பெற்றீர்கள். உங்களை நீங்களே இரட்சித்துக்கொள்ள முடியாது. இது தேவனிடமிருந்து கிடைக்கும் பரிசு.
9 நீங்கள் செய்த செயல்களால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. எனவே தன்னைத்தானே இரட்சித்துக்கொண்டதாக ஒருவனும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.
10 நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே தேவன் நம்மைப் படைத்தார். நாம் நற்செயல்கள் செய்யும்படி கிறிஸ்துவுக்குள் நம்மைப் புதிய மக்களாக்கினார். தேவன் ஏற்கெனவே நமக்காக அந்நற்செயல்கள் பற்றித் திட்டமிட்டிருக்கிறார். நமது வாழ்வு அந்நற்செயல்களோடு இணைய வேண்டும் என்றே தேவன் திட்டமிட்டிருக்கிறார்.
11 நீங்கள் யூதர் அல்லாதவர்களாகப் பிறந்தீர்கள். உங்களை யூதர்கள் “விருத்தசேதனம் செய்யாதவர்கள்” என்று அழைக்கிறார்கள். அவர்கள் தங்களை “விருத்தசேதனம் செய்தவர்கள்” என்று அழைத்துக்கொள்கிறார்கள். இந்த விருத்தசேதனம் என்பது யூதர்கள் தங்கள் சரீரத்தில் செய்துகொள்ளும் ஏதோ ஒன்று தான்.
12 கடந்த காலத்தில் கிறிஸ்து இல்லாமல் நீஙகள் இருந்தீர்கள் என்பதை நினைவுகூருங்கள். நீஙகள் இஸ்ரவேலின் மக்கள் அல்ல. தேவன் தம் மக்களுக்குச் செய்து கொடுத்த ஒப்பந்தத்தில் உங்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. உங்களுக்குத் தேவனைப்பற்றித் தெரியாது. அவர் மீது நம்பிக்கையும் இல்லை.
13 ஆமாம், ஒரு முறை தேவனைவிட்டு வெகு தொலைவில் நீங்கள் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது தேவனோடு நெருக்கமாக இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் இரத்தமே உங்களை தேவனின் அருகில் கொண்டு வந்தது.
14 இப்பொழுது கிறிஸ்துவால் நமக்குச் சமாதானம் கிடைத்தது. கிறிஸ்து யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் ஒரே மக்களாக்கினார். இவர்களுக்கு இடையில் ஒரு சுவர் இருப்பது போலப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒருவரை ஒருவர் வெறுத்தனர். கிறிஸ்து தமது சரீரத்தைக் கொடுத்து பகை என்னும் சுவரை உடைத்தெறிந்தார்.
15 யூதர்களின் சட்டங்கள் ஏராளமான கட்டளைகளையும், விதிகளையும் உடையன. ஆனால் கிறிஸ்து அச்சட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். யூதர், யூதர் அல்லாதவர் என்னும் இந்த இரு பிரிவுகளையும் ஒன்றாக்குவது அவர் நோக்கம். இதை அவர் சிலுவையில் இறந்ததன் மூலம் செய்து சமாதானத்தைக் கொண்டு வந்தார்.
16 இரு பிரிவுகளுக்கும் இடையே இருந்த பகையைச் சிலுவையின் மூலம் முடிவடையச் செய்தார்.
17 தேவனை விட்டு வெகு தொலைவில் இருந்த யூதர் அல்லாத உங்களிடம் கிறிஸ்து வந்து சாமாதானத்தை அறிவித்தார். அவர் தேவனுக்கு மிக நெருக்கமாய் இருந்த யூதர்களுக்கும் சமாதானத்தை அறிவித்தார்.
18 ஆமாம்! கிறிஸ்து மூலமாக நாம் அனைவருக்கும் ஒரே ஆவிக்குள் பிதாவாகிய தேவனிடம் வருவதற்கு உரிமை பெற்றோம்.
19 ஆகவே யூதர் அல்லாதவர்களாகிய நீங்கள் இப்பொழுது அந்நிய தேசத்தில் பார்வையாளர்களோ அல்லது தற்காலிக குடிமக்களோ அல்ல. தேவனின் பரிசுத்தமான மக்களோடு நீங்களும் ஒரே குடிமக்களாகிவிட்டீர்கள்.
20 விசுவாசிகளான நீங்கள் அவருக்குச் சொந்தமான கட்டிடத்தை போன்றவர்கள். அக்கட்டிடத்தில் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அஸ்திபாரக்கல் போன்றவர்கள். கிறிஸ்து ஒருவர்தான் இக்கட்டிடத்தின் மிக முக்கியமான கல்லாவார்.
21 அந்த முழுக் கட்டிடமும் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து அதனை வளர்த்து கர்த்தருக்குள் புனிதமான ஆலயமாக ஆக்கிவிடுகிறார்.
22 கிறிஸ்துவுக்குள் நீங்களும் யூதர்களோடு சேர்ந்து கட்டப்பட்டிருக்கிறீர்கள். ஆவியால் தேவன் வாழும் ஆலயமாக நீங்களும் கட்டப்பட்டு வருகிறீர்கள்.