உபாகமம் 33 IRV ஒப்பிடு Tamil Indian Revised Version
1 தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:
2 கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பத்தாயிரங்களான பரிசுத்தவான்களுடன் வெளிப்பட்டார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
3 உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதிக்கப்படுவார்கள்.
4 மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; அது யாக்கோபின் சபைக்குச் சொந்தமானது.
5 மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.
6 ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக; அவன் மக்கள் குறைவாக இருக்கமாட்டார்கள் என்றான்.
7 அவன் யூதாவைக்குறித்து: கர்த்தாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, அவன் தன்னுடைய மக்களிடத்திற்கு திரும்பிவரச் செய்யும்; அவனுடைய கை பலப்படுவதாக; அவனுடைய எதிரிகளுக்கு அவனைப் பாதுகாத்து விடுவிக்கிற உதவி செய்கிறவராக இருப்பீராக என்றான்.
8 லேவியர்களைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரின் அருகில் வாக்குவாதம்செய்த உன் பரிசுத்த மனிதனிடம் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.
9 தன்னுடைய தகப்பனையும், தாயையும் குறித்து நான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, தன் சகோதரர்களையும், பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறவனிடத்தில் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.
10 அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும், இஸ்ரவேலுக்கு உம்முடைய பிரமாணத்தையும் கற்பித்து, உமது சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும், உமது பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளையும் செலுத்துவார்கள்.
11 கர்த்தாவே, அவனுடைய ஆஸ்தியை ஆசீர்வதித்து, அவன் கையின் செயல்களின்மேல் பிரியமாயிரும்; அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திருக்காதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும் என்றான்.
12 பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவருடன் சுகமாகத் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவனுடைய எல்லைக்குள்ளே தங்கியிருப்பார் என்றான்.
13 யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும்,
14 சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,
15 பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும், நித்திய மலைகளில் கிடைக்கும் அரிதான பொருட்களினாலும்,
16 நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. முட்செடியில் காட்சியளித்தவரின் தயவு யோசேப்புடைய தலையின்மேலும், தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
17 அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே மக்கள் அனைவரையும் தேசத்தின் கடைசிவரை முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பத்தாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.
18 செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகும்போதும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்கும்போதும் சந்தோஷமாயிரு.
19 அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள் என்றான்.
20 காத்தைக்குறித்து: காத்திற்கு விசாலமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.
21 அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; ஆனாலும் அவன் மக்களுக்கு முன்பாக வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் செய்வான் என்றான்.
22 தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.
23 நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்குத் திசையையும் தெற்குத் திசையையும் சொந்தமாக்கிக்கொள் என்றான்.
24 ஆசேரைக்குறித்து: ஆசேர் குழந்தை பாக்கியமுடையவனாக, தன் சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.
25 இரும்பும் வெண்கலமும் உன் காலணியின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும் இருக்கும் என்றான்.
26 யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.
27 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
28 இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சைரசமும் உள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.
29 இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட மக்களே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்கு உதவிசெய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் எதிரிகள் உன்னை நிந்தித்துப் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய மேடுகளை மிதிப்பாய் என்று சொன்னான்.