2 சாமுவேல் 19 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.2 ‘அரசர் தம் மகனுக்காக வருந்துகிறார்’ என்று வீரர்கள் அனைவரும் கேள்விப்பட்டதால், அன்றைய வெற்றி அனைவருக்குமே ஒரு துக்கமாயிற்று.3 போரிலிருந்து புறமுதுகு காட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப்போன்று அன்று வீரர்கள் நகருக்குள் யாருமறியாமல் நுழைந்தார்கள்.4 அரசர் தம் முகத்தை மூடிக்கொண்டு, “என் மகன் அப்சலோமே! அப்சலோமே!, என் மகனே! என் மகனே!” என்று குரலெழுப்பி அழுதுகொண்டிருந்தார்.⒫5 அப்போது யோவாபு அரசர் இருந்த வீட்டிற்குள் வந்து அவரை நோக்கி, “உம் உயிரையும், உம் புதல்வர் புதல்வியின் உயிரையும், உம் மனைவியர், வைப்பாட்டியரின் உயிரையும் காத்த உம் பணியாளர் அனைவரையும் இன்று தாழ்வடையச் செய்துவிட்டீர்.6 உம்மை வெறுப்பவருக்கு அன்பு செலுத்தி, உமக்கு அன்பு செலுத்துபவர்களை நீர் வெறுப்பதால், படைத் தலைவர்களோ பணியாளர்களோ உமக்கு ஒரு பொருட்டில்லை என்பதை இன்று எடுத்துக்காட்டிவிட்டீர். இன்று அப்சலோம் உயிரோடு இருந்து, நாங்கள் அனைவருமே மடிந்திருந்தால் உமக்கு அது பிடித்திருக்கும் என்பதையும் நான் இன்று புரிந்து கொண்டேன்.7 இப்போது எழுந்திரும். வெளியே சென்று உம் பணியாளர் மகிழ்ச்சியுறுமாறு பேசும். ஏனெனில், ஆண்டவர்மேல் ஆணை! நீர் வெளியே வராவிட்டால் ஒரு மனிதனும் இன்றிரவு உம்மோடு தங்கமாட்டான். உம் இளமை முதல் இன்றுவரை உமக்கு ஏற்பட்ட அனைத்துத் தீமைகளைவிடவும் இந்தத் தீமை கடுமையாக இருக்கும்” என்று கூறினார்.8 அரசர் எழுந்து வாயிலில் அமர, “இதோ அரசர் வாயிலில் அமர்ந்துள்ளார்” என்று அனைவருக்கும் சொல்லப்பட்டது. வீரர்கள் அனைவரும் அவர்முன் வந்தனர். இதற்கிடையில் இஸ்ரயேலர் தம் வீடுகளுக்குத் தப்பியோடினர்.9 அப்போது இஸ்ரயேலின் குலங்களின் மக்கள் அனைவரிடையே இவ்வாறு வாக்கு வாதம் ஏற்பட்டது: “நம் எதிரிகளின் கையினின்று அரசர் நம்மை விடுவித்தார். பெலிஸ்தியரின் கையினின்று நம்மை விடுவித்தவரும் அவரே. அப்சலோமின் பொருட்டு அவர் இப்போது நாட்டினின்று வெளியேறியுள்ளார்.10 நம்மை ஆளுமாறு நாம் திருப்பொழிவு செய்த அப்சலோமோ போரில் இறந்து விட்டான். இனி நீங்கள் அரசரைத் திருப்பியழைத்து வராமல் வாளாயிருப்பதேன்?”⒫11 அரசர் தாவீது குரு சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஆளனுப்பிக் கூறியது: “யூதாவின் பெரியோர்களிடம் இவ்வாறு கேளுங்கள்: அரசரைத் தம்அரண்மனைக்குத் திருப்பியழைப்பதில் நீங்கள் ஏன் பின்வாங்க வேண்டும்? ஏனெனில், இஸ்ரயேலர் அனைவரின் பேச்சும் அரசரின் வீட்டை எட்டிவிட்டது.12 நீங்கள் என் சகோதரர்கள்; நீங்கள் என் எலும்பும் சதையும் ஆனவர்கள்; அரசரைத் திருப்பி அழைப்பதில் நீங்கள் ஏன் பின்தங்க வேண்டும்?13 அமாசாவிடம் இவ்வாறு கூறுங்கள்: ‘நீ என் எலும்பும் சதையும் அல்லவா? யோவாபுக்குப் பதிலாக என்முன்பாக எந்நாளும் படைத்தலைவனாய் இராவிட்டால், கடவுள் என்னைத் தக்கவாறும், அதற்கு மேலும் தண்டிக்கட்டும்.’14 யூதா வீரர்கள் அனைவரின் உள்ளங்களையும் அவன் இவ்வாறு இணங்கச் செய்து அவர்களை ஒருமனப்படுத்தினான். அவர்கள் அரசரிடம் ஆளனுப்பி, “நீரும் உம் பணியாளர் அனைவரும் திரும்பி வாருங்கள்” என்று கூறினர்.⒫15 அரசர் திரும்பி யோர்தான்வரை வந்தார். யூதாவினர் கில்கால்வரை சென்று அரசரைச் சந்தித்து அவர் யோர்தானைக் கடக்கச் செய்தனர்.16 பகூரிமைச் சார்ந்த பென்யமினியனான கேராவின் மகன் சிமயி யூதாவினரோடு அரசர் தாவீதைச் சந்திக்க விரைந்தான்.17 அவனோடு பென்யமினியர் ஆயிரம்பேர் இருந்தனர். சவுல் வீட்டுப் பணியாள் சீபா தன் பதினைந்து புதல்வரோடும் இருபது பணியாளரோடும் அங்கே இருந்தான். அவர்கள் அரசர் வருமுன் யோர்தானுக்கு விரைந்தனர்.18 அரச குடும்பத்தினரைக் கொண்டு வரவும், அரசரின் ஏவல்களைச் செய்யவும் அவர்கள் துறைவழி ஆற்றைக் கடந்தனர். அரசர் யோர்தானைக் கடக்கவிருக்கையில் கேராவின் மகன் சிமயி அவர்முன் விழுந்தான்.19 “தலைவரே! என் குற்றத்தைப் பொருட்படுத்தாதீர்! என் தலைவராம் அரசர் எருசலேமை விட்டுச் சென்றபோது உம் பணியாளன் செய்த தீமையை நினைவுகூராதேயும்! அரசர் அதை மனத்தில் கொள்ளாமல் இருப்பாராக!20 தான் பாவம் செய்துள்ளதைத் தங்கள் பணியாளன் அறிவான். இதோ இன்று யோசேப்பின் வீட்டார் அனைவரிலும் முதல் ஆளாக, என் தலைவராம் அரசரைச் சந்திக்க நான் வந்திருக்கிறேன்” என்று அவன் அரசரிடம் கூறினான்.⒫21 அப்போது செரூயாவின் மகன் அபிசாய், “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை பழித்ததற்காக சிமயி கொல்லப்பட வேண்டாமா?” என்று கேட்டான்.22 அதற்கு தாவீது “செரூயாவின் புதல்வர்களே! இது பற்றி உங்களுக்கு என்ன? இன்று நீங்கள் எனக்கு எதிரிகள் போல் நடந்துகொள்வது ஏன்? இன்று இஸ்ரயேலில் யாராவது கொல்லப்பட வேண்டுமோ? இன்று நான் இஸ்ரயேலின் அரசர் என்பது எனக்குத் தெரியாதா?” என்று கூறினார்.23 பிறகு அரசர் சிமயியை நோக்கி, “நீ சாக மாட்டாய்” என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்.24 சவுலின் பேரன் மெபிபோசேத்து அரசரைச் சந்திக்கச் சென்றான். அரசர் புறப்பட்டுச் சென்ற நாளிலிருந்து அவர் நலத்துடன் திரும்பிய நாள்வரை அவள் தன் பாதங்களைக் கழுவவில்லை; தாடியைத் திருத்தவில்லை; தன் ஆடைகளையும் வெளுக்கவுமில்லை.25 அவன் எருசலோமில் அரசரைச் சந்திக்க வந்தபோது, அரசர் அவனை நோக்கி, “மெபிபோசேத்து! என்னோடு நீ ஏன் வரவில்லை?’ என்று வினவினார்.26 அதற்கு அவன், “என் தலைவராம் அரசரே! என் பணியாளன் என்னை ஏமாற்றிவிட்டான். உம் அடியான் கால் ஊனமுற்றிருப்பதால், ‘நானே என் கழுதைக்குச் சேணமிட்டு அதன் மீது சவாரி செய்து அரசரோடு செல்வேன்’ என்று உம் அடியானாகிய நான் கூறினேன்.27 அவனோ உம் அடியானைப்பற்றி என் தலைவராம் அரசரிடம் அவதூறு பேசினான். ஆனால், என் தலைவராம் அரசர் கடவுளின் தூதரைப் போன்றவர். உமக்குச் சரியெனப்படுவதையே செய்யும்.28 என் தலைவராம் அரசரின் பார்வையில் என் தந்தையின் குடும்பத்தார் அனைவரும் சாவைத்தவிர வேறு எதற்கும் உரியவர் அல்லர்! இருப்பினும், உம் அடியானை உம்மோடு உணவருந்துபவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டீர்! இனி அரசரிடம் மன்றாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று சொன்னான்.29 அதற்கு அரசர், “உன்னைப்பற்றி இன்னும் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு நான் சொல்லிவிட்டேனே” என்று அவனிடம் சொன்னார்.30 மெபிபோசேத்து மறுமொழியாக, “இல்லை, அவனே அனைத்தையும் எடுத்துக்கொள்ளட்டும். என் தலைவராம் அரசர் நலமே தம் வீடு திரும்பியதே எனக்குப் போதும்!” என்று அரசரிடம் கூறினான்.31 கிலயாதைச் சார்ந்த பர்சில்லாய் அவரைஅங்கிருந்து வழியனுப்புவதற்காக ரோகலிமிலிருந்து அரசரோடு யோர்தானைக் கடந்து வந்தார்.32 பர்சில்லாய் வயது முதிர்ந்தவர்; எண்பது வயதினர்; பெரும் பணக்காரர். அரசர் மகனயிமில் தங்கியிருந்தபோது அவரின் தேவைகளைக் கவனித்துக் கொண்டவர்.33 அரசர் பர்சில்லாயிடம் “இப்பொழுது ஆற்றைக் கடந்து என்னோடு எருசலேமுக்கு வந்து தங்கியிரும். நான் உம் தேவைகளைக் கவனித்துக் கொள்வேன்” என்றான்.⒫34 அப்பொழுது பர்சில்லாய் மறுமொழியாகக் கூறியது: “அரசரோடு வந்திருப்பதற்கேற்றவாறு நான் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருக்கப்போகிறேன்?35 இப்பொழுதே எனக்கு வயது எண்பது ஆகிவிட்டது. நல்லதையும் கெட்டதையும் என்னால் வேறுபடுத்திச் சொல்ல முடியுமா? உம் அடியானால் உண்பதையும் குடிப்பதையும் அனுபவிக்க முடியுமா? பாடகர் பாடகியரின் குரலைக் கேட்டு மகிழ என்னால் இயலுமா? என் தலைவராம் அரசருக்கு உம் அடியான் இன்னும் ஏன் சுமையாக இருக்க வேண்டும்?36 உம் பணியாளன் அரசரோடு சற்றுத் தொலைவே யோர்தான் மீது கடந்து வருவேன். அதற்காக அரசர் எனக்கு இத்தகைய கைம்மாறு செய்வானேன்?37 உம் பணியாளனைப் போகவிடும். நான் என் நகரில் என் தாய் தந்தையரின் கல்லறைக்கு அருகே இறப்பேன். இதோ! உம் பணியாளன் கிம்காம்! என் தலைவராம் அரசரோடு அவன் செல்லட்டும். உம் விருப்பம்போல் அவனுக்குச் செய்யும்.”38 அப்பொழுது அரசர், “கிம்காம் என்னோடு கடந்து வரட்டும். உம் விருப்பம்போல் நான் அவனுக்குச் செய்வேன். நீர் என்னிடமிருந்து எதை விரும்பினாலும் நான் உமக்குச் செய்வேன்” என்று கூறினார்.39 பிறகு, மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்தனர். அரசரும் யோர்தானைக் கடந்தார். பர்சில்லாயை அரசர் முத்தமிட்டு வாழ்த்தினார். அவரும் தம் இடத்திற்குத் திரும்பினார்.40 அரசர் கில்காலுக்குக் கடந்து சென்றார். கிம்காமும் அவரோடு கடந்து சென்றான். யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலில் பாதிப்பேரும் அரசரைக் கொண்டுவந்து விட்டனர்.41 உடனே இஸ்ரயேலர் அனைவரும் அரசரிடம் வந்து, “எங்கள் சகோதர்களான யூதாவினர் அரசரையும் அவர் வீட்டாரையும் அவர் ஆள்கள் அனைவரையும் திருட்டுத்தனமாய்க் கொண்டுவந்து யோர்தானைக் கடக்கச் செய்தது ஏன்?” என்று கேட்டார்கள்.42 யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலருக்கு மறுமொழியாக, “அரசர் எங்களுக்கு நெருங்கியவர். இக்காரியத்தைப் பற்றி நீங்கள் சினமுறுவது ஏன்? நாங்கள் அரசரிடம் ஏதாவது உண்டோமா? அவரிடமிருந்து நாங்கள் ஏதாவது பெற்றுக்கொண்டோமா” என்றார்கள்.⒫43 இஸ்ரயேலர் யூதாவினரை நோக்கி, “எங்களுக்கு அரசரிடம் பத்துப் பங்குகள் உண்டு. மேலும், தாவீதிடம் உங்களைவிட எங்களுக்கு அதிக உரிமை உண்டு. பின் ஏன் எங்களை அற்பமாக நடத்துகின்றீர்கள்? எங்கள் அரசரைத் திருப்பியழைத்து வர வேண்டுமென்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா!” என்று பதில் சொன்னார்கள். இஸ்ரயேலின் பேச்சைவிட யூதாவினரின் பேச்சு கடுமையாக இருந்தது.