1 அதற்குப் பிறகு அம்மோன் அரசனாகிய நாகாஸ் மரித்தான். அவனது மகனாகிய ஆனூன் அவனுக்குப் பிறகு அரசனானான்.
2 தாவீது, “நாகாஸ் என்னிடம் இரக்கத்தோடு நடந்துக்கொண்டான். எனவே நானும் அவனது மகன் ஆனூனுக்கு இரக்கம் காட்டுவேன்” என்றான். எனவே ஆனூனின் தந்தையின் மறைவிற்குத் துக்கம் விசாரிப்பதற்காக தாவீது தனது அதிகாரிகளை அனுப்பினான். தாவீதின் அதிகாரிகள் அம்மோன் தேசத்திற்குச் சென்றார்கள்.
3 ஆனால் அம்மோனின் அதிகாரிகள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனை நோக்கி, “உங்களுக்கு ஆறுதல் கூறுவதற்குச் சில அதிகாரிகளை அனுப்புவதால் தாவீது உங்களைப் பெருமைப்படுத்துவதாக நீர் நினைக்கிறீரா? இல்லை! உங்கள் நகரத்தைக் குறித்து உளவறிந்து கொள்வதற்காக தாவீது இந்த ஆட்களை அனுப்பியிருக்கிறான். உங்களுக்கு எதிராக போரிடுவதற்கான திட்டம் இதுவாகும்” என்றார்கள்.
4 எனவே ஆனூன் தாவீதின் அதிகாரிகளைப் பிடித்து அவர்கள் தாடியின் ஒரு பகுதி மயிரைச் சிரைத்தான். அவர்கள் ஆடைகளை இடுப்புப் பகுதி வரைக்கும் நடுவே கிழித்துவிட்டப் பின் அவர்களை அனுப்பிவிட்டான்.
5 இச்செய்தியை ஜனங்கள் தாவீதிடம் தெரிவித்தபோது அவன் தனது அதிகாரிகளைச் சந்திக்கும் பொருட்டு அவர்களிடம் தூதுவர்களை அனுப்பினான். தனது அதிகாரிகள் அவமானப்படுத்தப்பட்டதால் தாவீது அரசன் செய்தியனுப்பி, “உங்கள் தாடி மீண்டும் வளரும்மட்டும் எரிகோவில் தங்கியிருங்கள். பின்பு எருசலேமுக்குத் திரும்பி வாருங்கள்” என்றான்.
6 அம்மோனியர் தாவீதிடம் பகை வளர்த்தனர். எனவே அவர்கள் பெத்ரேகோப், ஸோபா ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரை அழைத்தனர். காலாட் படைகளில் 20,000 ஆராமியர் தேறினார்கள். அம்மோனியர் மாக்கா அரசனையும் அவனது 1,000 வீரர்களையும் தோபிலிருந்து 12,000 வீரர்களையும் வரவழைத்தார்கள்.
7 தாவீது இதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் யோவாபையும், வலிமை மிகுந்த தனது முழு சேனையையும் அனுப்பினான்.
8 அம்மோனியர் புறப்பட்டு போருக்குத் தயாராயினர். அவர்கள் நகர வாயிலருகே நின்றுக்கொண்டனர். சோபா, ரேகோப் ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரும் தோப், மாக்கா ஆகிய இடங்களிலுள்ள வீரர்களும் யுத்தக் களத்தில் அம்மோனியரோடு சேர்ந்து நிற்கவில்லை.
9 அம்மோனியர் முன்னணியிலும் பின் பகுதியிலும் தனக்கு எதிரே நிற்பதை யோவாப் கண்டான். எனவே அவன் இஸ்ரவேலரில் திறமை மிகுந்த வீரர்களைத் தெரிந்துக்கொண்டான். ஆராமியருக்கு எதிராகப் போர் செய்வதற்காக இவர்களை அனுப்பினான்.
10 பின் தனது சகோதரனாகிய அபிசாயின் தலைமையில் யோவாப் மற்ற வீரர்களை அம்மோனியருக்கு எதிராகப் போரிடுவதற்கு அனுப்பினான்.
11 யோவாப் அபிசாயியை நோக்கி, “ஆராமியர் மிகுந்த பலசாலிகளாக இருந்தால் நீ எனக்கு உதவுவாய். அம்மோனியர்களின் பலம் மிகுந்திருந்தால் நான் உனக்கு உதவுவேன்.
12 துணிவாயிரு. நமது ஜனங்களுக்காகவும் நமது தேவனுடைய நகரங்களுக்காகவும் நாம் வீரத்தோடு போரிடுவோம். கர்த்தர் தாம் சரியெனக் கண்டதைச் செய்வார்” என்றான்.
13 பின்பு யோவாபும் அவனது வீரர்களும் ஆராமியரைத் தாக்கினார்கள். ஆராமியர்கள் யோவாபிடமிருந்தும் அவனது ஆட்களிடமிருந்தும் தப்பி ஓடினார்கள்.
14 ஆராமியர் ஓடிப்போவதை அம்மோனியர் பார்த்தனர். எனவே அவர்கள் அபிசாயிடமிருந்து தப்பி ஓடிப்போய் தங்கள் நகரத்தை அடைந்தனர். எனவே யோவாப் அம்மோனியரோடு போர் செய்வதை நிறுத்தி திரும்பி வந்து, எருசலேமிற்கு போனான்.
15 இஸ்ரவேலர் தங்களைத் தோற்கடித்ததை ஆராமியர்கள் கண்டார்கள். எனவே அவர்கள் ஒரு பெரும்படையைத் திரட்டினார்கள்.
16 ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்த ஆராமியரை அழைத்து வருவதற்கு ஆதாதேசர் ஆட்களை அனுப்பினான். இந்த ஆராமியர் ஏலாமுக்கு வந்தார்கள். அவர்களின் தலைவனாக ஆதாதேசரின் படைத் தலைவனாகிய சோபாக் சென்றான்.
17 தாவீது இதைக் கேள்விப்பட்டான். எல்லா இஸ்ரவேலரையும் ஒன்றாகக் கூட்டினான். அவர்கள் யோர்தான் நதியைத் தாண்டி ஏலாமுக்குச் சென்றனர். ஆராமியர் போருக்குத் தயாராகித் தாக்கினார்கள்.
18 ஆனால் தாவீது ஆராமியரை முறியடித்தான். இஸ்ரவேலரிடமிருந்து ஆராமியர் தப்பித்து ஓடினார்கள். தாவீது 700 தேரோட்டிகளையும் 40,000 குதிரை வீரர்களையும் கொன்றான். தாவீது ஆராமியரின் படைத்தலைவனாகிய சோபாக்கைக் கொன்றான்.
19 ஆதாதேசருக்கு உதவ வந்த அரசர்கள் இஸ்ரவேலர் வென்றதைக் கண்டார்கள். எனவே அவர்கள் இஸ்ரவேலரோடு சமாதானம் செய்து அவனுக்குப் பணிவிடைச் செய்தனர். அம்மோனியருக்கு மீண்டும் உதவுவதற்கு ஆராமியர்கள் அஞ்சினார்கள்.
2 சாமுவேல் 10 ERV IRV TRV