2 கொரிந்தியர் 6 IRV ஒப்பிடு Tamil Indian Revised Version
1 தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடி, தேவனுடைய உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
2 சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள்.
3 இந்த ஊழியம் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க, நாங்கள் யாருக்கும் இடறல் உண்டாக்காமல், எல்லாவிதத்திலும், எங்களை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணுகிறோம்.
4 அதிக பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
5 அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,
6 கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமில்லாத அன்பிலும்,
7 சத்தியவசனத்திலும், தேவபலத்திலும்; நீதியாகிய வலது இடதுபக்கத்து ஆயுதங்களை அணிந்திருக்கிறதிலும்,
8 கனத்திலும், கனவீனத்திலும், இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும்; ஏமாற்றுபவர்கள் என்று சொல்லப்பட்டாலும், உண்மை உள்ளவர்களாகவும்,
9 அறியப்படாதவர்கள் என்னப்பட்டாலும் நன்றாகத் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடு இருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,
10 துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
11 கொரிந்தியர்களே, எங்களுடைய வாய் உங்களோடு பேசத் திறந்திருக்கிறது, எங்களுடைய இருதயம் உங்களுக்குத் திறந்திருக்கிறது.
12 எங்களுடைய உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்களுடைய உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
13 எனவே அதற்குப் பதிலாக நீங்களும் உங்களுடைய இருதயங்களைத் திறவுங்கள் என்று, குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14 அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
15 கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது?
16 தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே.
17 எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாக இருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருப்பீர்கள் என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.